பத்திரிகை செய்தி /
தமிழக மக்கள் கோரிக்கையை புறக்கணித்த ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்!
சென்னை, 04-02-2022
நீட் தேர்வுக்கு விலக்கு பெற ஆளுநருக்கு அனுப்பிய மசோதாவை திருப்பி அனுப்பி, தமிழக மக்கள், அரசியல் கட்சிகள், தமிழக சட்டப்பேரவை நம்பிக்கையை இழந்து விட்ட ஆளுநர் ரவியை பாஜக மோடி, ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப ப்பெற வேண்டும். திரு ரவி ஆளுநராக பதவி ஏற்கும்போது அரசமைப்பு சட்டப்படி நடந்துகொள்வேன் என்று உறுதி அளித்திருந்தார். அதற்கு மாறாக அரசமைப்புச் சட்ட நெறிகளுக்கு விரோதமாக நடந்துகொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து பேசிய ஆளுநர் ரவி, அதன் தொடர்ச்சியாக தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியிருந்த நீட் தேர்வு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியிருக்கிறார். தன்னிடம் வரும் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கும் மரபை, அரசமைப்புக் கடமையை கைவிட்ட ஆளுநரை ஒன்றிய அரசு திரும்ப அழைத்துக் கொள்ளவேண்டும்.
ஏற்கனவே ஆளுநரின் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக தமிழக மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றன. தமிழகத்தின் கோரிக்கையை, உணர்வை புறக்கணித்த ஆளுநரை தமிழக மக்கள் புறக்கணிப்பது தவிர்க்க முடியாததாகி விடும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) எச்சரிக்கிறது.