வாலாட்டிக் குழையும் ஊடகங்களைத் தொடர்ந்து வாலாட்டிக் குழையும் நீதித்துறையை அரசாங்கம் விரும்புகிறதா?

கடந்த சில நாட்களாக மோடி அரசாங்கம், உச்ச நீதிமன்றத்தின் மீது ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தி வருகிறது. நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) முறையை, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரும், ஒன்றிய சட்ட அமைச்சர் கிரென் ரிஜுஜுவும் மாறி மாறி வெளிப்படையாக தாக்கிப்பேசி வருகின்றனர். அதோடு 2015 இன், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை சட்ட விரோதமென தள்ளுபடி செய்த நீதிமன்றத்தின் தீர்ப்பு, "மக்களின் தீர்ப்பை" மதிக்காத செயல் என்று கூறி, குடியரசு துணைத் தலைவர் உச்ச நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலடியாக, உச்ச நீதிமன்றம் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியது.