ஆவடியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்த மாணவிகள் வீடியோவில் தமிழக முதல்வருடன் பேசியபோது, முதல்வர் தங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அழைப்பை ஏற்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வீடு தேடிச் சென்று, அவர்கள் கொடுத்த கோழிக்கறி உணவை உண்டு, அங்கிருந்த குழந்தைகளுக்கு ஊட்டிவிட்டு அம் மக்களோடு கலந்துரையாடியுள்ளார். அப்போது உங்களைப்போன்ற பழங்குடி மக்களுக்கு அரசு செய்ய வேண்டியவற்றை வீடு தேடிக் கொண்டு வந்து சேர்ப்போம். நீங்கள் எங்களைத் தேடி வரவேண்டாம், நாங்கள் உங்களைத் தேடி வந்து உதவிகளைச் செய்யும் ஒரு அரசாக, எங்கள் அரசு என்று கூட சொல்லமாட்டேன், இது நம்முடைய அரசு ஏனென்றால் இதில் நீங்கள் இருக்கிறீர்கள், நமது அரசு என்றால் இது உங்களுடைய அரசு விளிம்பு நிலை மக்களுக்கான அரசு என்றும் கூறியிருக்கிறார். அம் மக்களுடன் கலந்துரையாடிய போது, மாமல்லபுரம் அருகே அன்னதானத்தின் போது பெருமாள் கோயிலில் நரிக்குறவர் இனப் பெண்ணிற்கு உணவு மறுக்கப்பட்டபோது, உடனடியாக அறநிலையத் துறை அமைச்சரிடம் பேசி அப் பெண்ணுடன் அமர்ந்து அன்னதானம் உண்ண உத்தரவிட்டதையும் அம் மக்களுக்கு என்னென்ன நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றியும் புள்ளிவிவரத்துடன் அவர்களிடம் குறிப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின். குறிப்பாக நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு கழிவறை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, ரேசன் கார்டு போன்றவை இந்த அரசு வந்தபின்னர்தான் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். நல்ல நடவடிக்கைதான். ஆனால், விளிம்பு நிலை மக்களைப் பாதிக்கும் வகையில் இதே அரசு சொத்து வரியை உயர்த்தியிருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியின் போது சொத்து வரி உயர்த்தப்பட்ட போது அதைத் திரும்பப் பெற வேண்டும் என்று சொன்னார் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். இன்று அவர் முதல்வர், இப்போது உயர்த்திய சொத்துவரியைக் குறைக்கக்கூட முடியாது என்கிறார். பழங்குடி மக்களுக்கு விளிம்பு நிலை மக்களுக்கு பல சலுகைகளைச் செய்வதாகச் சொல்லும் ஸ்டாலின் அவர்கள் ஆதி திராவிட நலத் துறையில் உள்ள நிதிகள் பயன்படுத்தப்படாமல் வீணாகிக் கொண்டிருக்கின்றன. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் 2016&17 காலக்கட்டத்தில் இருந்து 2020&21 காலக்கட்டம் வரையில் ரூ.15,192.3 கோடி ஒதுக்கப்பட்டு அதில் ரூ.926.6 கோடி பயன்படுத்தப்படாமல் உள்ளது என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. ஆதி திராவிட நலத் துறை மற்றும் பழங்குடியின மக்களுக்கான கல்வி உதவித் தொகை கூட அவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளிக் கட்டணம் கட்டப்படாமல் மாணவர்கள் பரீட்சைக்கான நுழைவுச் சீட்டைக் கூட பெற முடியாமல் உள்ளார்கள் என்கிறது ஒரு செய்தி. ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்கள் சான்றிதழ் அளித்தால் என்ஜினியரிங் கல்லூரிகளில் கலைக் கல்லூரிகளில் 100% கட்டணச் சலுகை உண்டு. பெரிய, பிரபலமான கல்லூரிகள் அம் மாணவர்களைச் சேர்ப்பதே கிடையாது. காரணம் அரசிடமிருந்து கல்வி உதவித் தொகை குறித்த காலத்தில் வந்து சேராது என்பதுதான். ஆதி திராவிட நலத் துறையில் உள்ள பணியாளர்களுக்கு சம்பளப் பாக்கி உள்ளது. ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் துறையின் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் குறிப்பாக, திருமண மண்டபங்கள், சமுதாய நலக்கூடங்கள் எல்லாம் எதற்கும் பயன்படுத்தப்படாமல் கேட்பாரற்று பாழடைந்து கிடக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆதி திராவிட, பழங்குடியின மக்களுக்கு, விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு அரசின் அலட்சியத்தால் செய்யப்படாமல் உள்ள நலத்திட்டங்களை உடனடியாக கொண்டு சேர்க்க வேண்டும். அப்போது மட்டுமே அது நம்முடைய அரசாக இருக்கும். அல்லது வெறும் வாய் வார்த்தையாகத்தான் இருக்கும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)