தமிழ்நாட்டில் விசைத்தறி முக்கிய வேலை அளிக்கும் தொழிலாக உள்ளது. குறிப்பாக நாமக்கல், சேலம் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரியும் விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. தமிழ்நாட்டிற்கு செலவானியையும் வேலைவாய்ப்பையும் உரு வாக்கித் தருவதால் தமிழக அரசு விசைத்தறி உற்பத்திக்கு மட்டுமே என சில துணி ரகங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல் பாரம்பரிய தொழிலான கைத்தறி உற்பத்திக்கு என்று சில ரக துணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இத்தொழிலை பாதுகாப்பதாகச் சொல்லப்படுகிறது. தமிழக அரசு விசைத்தறிக் கூடங்களுக்கென இலவசமாக மின்சாரமும் வழங்குகிறது. உற்பத்தியைப் பெருக்க விசைத்தறி இயந்திரங்கள் தொடர்ந்து நவீன மயமாக்கப்பட்டும் வருகின்றன.

பெரும்பாலான ஜவுளி உற்பத்தியாளர்கள் விசைத்தறிக்கூடங்களை அடைப்பு தறி முதலாளிகள் என்று அழைக்கப்படுபவர்களிடம் குத்தகைக்கு விடுகின்றனர். அடைப்புத்தறி முதலாளிகள் விசைத்தறி தொழிலாளர்களைப் பணிக்கமர்த்தி உற்பத்தியில் ஈடுபடுத்துகின்றனர். அவர்கள் தான் தொழிலாளர் களுக்கு கூலி வழங்குகின்றனர். இது இல்லாமல் நேரடியாக ஜவுளி உற்பத்தியாளர்களே நடத்தும் விசைத்தறிக்கூடங்களும் உண்டு. தானியங்கி தறிக் கூடங்களும் வந்திருக்கின்றன. அரசால் ஊக்குவிக்கப்படுகின்றன. அதைத் தொடர்ந்து உழைப்புச் சக்தி அடர்ந்த விசைத்தறித் தொழில் நசிந்து வருகிறது என்பதும் கூட கவனிக்கப்படவேண்டியது.

விசைத்தறிக்கூடங்கள் தொழிற்சாலை சட்ட வரம்புக்குள் வராது என சொல்லிக்கொண்டு முதலாளிகள் எவ்வித சட்டங்களையும் நடை முறைப்படுத்துவதில்லை. விசைத்தறித் தொழிலாளர்கள் மிக மோசமான பணி நிலைமைகளில் வேலை செய்கின்றனர். குடிநீர், கழிப்பிட வசதிகள் கூட முறையாக செய்து தரப்படுவதில்லை. 'பாக்கி' முறை என்னும் கொத்தடிமை முறை நிலவி வருகிறது. அடைப்புத்தறி முதலாளிகள் ஒரு தொகையை முன்பணமாக கொடுத்து தொழிலாளர்களை பணிக்கமத்துவர். அந்த அசல் தொகையை திருப்பி செலுத்தும்வரை சம்பந்தப்பட்ட தொழிலாளி அந்த முதலாளியிடம்தான் வேலை செய்தாக வேண்டும். தொழிலாளியின் விருப்பப்படி தனது வேலையை மாற்றிக்கொள்ள முடியாது. உழைப்பை யாரிடம் வேண்டுமானாலும் விற்கும் சுதந்தரம் தொழிலாளரிடமிருந்து பறிக்கப்படுகிறது. இது ஒரு விதமான கொத்தடிமைத்தனமாகும். இத்தகைய கொத்தடிமை வேலை நிலைமைகளுக்கு மத்தியில் பணியாற்றும் தொழிலாளர்கள் மிகக்கடும் வாழ்வாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களை விடுவிக்க அரசு எந்த முயற்சியும் எடுப்பதில்லை.

தொழிலாளர்களின் வறுமை சூழல் காரணமாக சிறுநீரகத்தை விற்பதும் பெண்கள் கருமுட்டைகளை விற்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொழிலாளர்கள் கந்து வட்டிக்காரர்களின் அபரிமித வட்டி கொள்ளையில் சிக்கி தவித்து வருகின்றனர்.சிலஆண்டுகளுக்கு முன்னால், கந்து வட்டிக் கொடுமைக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்ட, தற்போதைய ஏஐசிசிடியு தலைவரும் சிபிஐ (எம்எல்) மாநிலக் கமிட்டி உறுப்பினருமான தோழர் பொன்.கதிரவன் கொடூரமான கொலை வெறித்தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

அனைத்துப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டன. ஆனாலும், கடந்த 7 ஆண்டுகளாக குமாரபாளையம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்த்தப்படவே யில்லை. தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் துணி ரகங்களுக்கு ஏற்றார் போலும், உற்பத்தி செய்யும் அளவுக்கு ஏற்றார் போலும் கூலி பெறும் (பீஸ்ரேட்) முறை நடைமுறையில் உள்ளது. தொழிலாளர்களுக்கு வாராந்திர முறையில் உற்பத்தி செய்த அளவிற்கேற்ப கணக்கிடப்பட்டு கூலி வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்யும் ஒரு தொழிலாளி சராசரியாக ரூபாய் 10,000தான் மாதச் சம்பளமாக பெறமுடிகிறது.

குறைந்தபட்ச போனஸ் தொகை பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்கள் போராட வேண்டியுள்ளது. விசைத்தறித் தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்னெடுக்கும் முன்னணி சங்கமாக ஏஐசிசிடியு எப்போதுமே இருந்து வந்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் கூலிப் போராட்டங்கள் தன்னெழுச்சியாக வெடிப்பதுண்டு. அப்படிப்பட்ட தன்னெழுச்சியான போராட்டங்கள் தவிர்க்க இயலாமல் சட்ட ஒழுங்குப் பிரச்சனையாக மாறுவதுண்டு. போராட்டம் துவங்கிய பிறகு ஏஐசிசிடியு உள்ளிட்ட அனைத்து சங்க கூட்டுக் குழு உருவாக்கப்பட்டு அக்குழு போராட்டங்களை வழிநடத்துவது என்பது நடக்கும். விசைத்தறித் தொழிலாளர் பிரச்சினைகளில் தொழிலாளர் துறை தலையீடு என்பது இருந்ததே இல்லை.

பல சந்தர்ப்பங்களில் அடைப்புத்தறி முதலாளிகள் அவர்களுக்கான கூலி உயர்வு கேட்டு தறிக் கூடங்களை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுவர். அவர்கள் தங்கள் போராட்டத்திற்கு ஆதரவாக தொழிலாளர்களையும் பிற சங்கங்களையும் அணி திரட்டிக் கொள்கிறார்கள். அடைப்புத்தறி முதலாளிகள் தாங்கள் பெறும் கூலி உயர்வில் ஒரு பகுதியை தொழிலாளர்களுக்கு கொடுப்பதாக வாக்குறுதியும் அளிப்பார்கள்.ஆனால்  அந்த வாக்குறுதி நடைமுறைப்படுத்தப்படுவது அரிதாகவே நடக்கும். அடைப்புத்தறி முதலாளிகள் பெரும்பாலும் கிராமப்புர செல்வந்தர்களாகவும் குலக் பிரிவைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பதை பல இடங்களில் காண்கிறோம். அவர்கள் பல்வேறு முதலாளித்துவக் கட்சிகளின் தலைவர்களாகவும் இருக்கிறார்கள்.


சமீபத்தில் ஏஐசிசிடியு, குமாரபாளையம் விசைத்தறித் தொழிலாளர்கள் மத்தியில் மேற்கொண்ட பிரச்சார இயக்கத்தின் விளைவாக, அவர்களின் கூலி உயர்வு கோரிக்கை முன்னுக்கு வந்தது. தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆயத்தமானார்கள். குமாரபாளையம், பள்ளிப்பா ளையம் பகுதிகளை விசைத்தறி நகரங்கள் என்றே கூறலாம். வீதிக்கு வீதி ஏராளமான விசைத்தறி கூடங்கள் இங்கு உள்ளன. பெரும்பான்மை தொழிலாளர்கள் ஆதரவு பெற்ற முதன்மைச் சங்கமாக ஏஐசிசிடியு இங்கு பல்லாண்டுகளாக செயல்பட்டுவருகிறது.

ஜவுளி உற்பத்தியாளர்கள், அடைப்புத்தறி முதலாளிகள், தொழிற்சங்கத் தரப்பினர் ஆகியோரை அழைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு
செய்யுமாறு குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் ஏஐசிசிடியு சங்கம் மனு கொடுத்தது. அதன் மீதான நடவடிக்கை தாமதப்படுத்தப்பட்ட போது, ஏஐசிசிடியு அறைகூவலை ஏற்று, தொழிலாளர்கள் தாங்களாகவே விசைத்தறிக்கூடங்களை வேலை நிறுத்தத்தை துவக்கி மூடி விட்டார்கள். தினமும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தாசில்தார் அலுவலக வாயிலில் திரண்டு முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழு உருவாக்கப்பட்டு அதன் சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கு பெற்றதும் நடைபெற்றது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் திரு.தங்கமணி, திமுகவின் குமாரபாளையம் நகர்மன்றத் தலைவர் என பலரும் தலையிட துவங்கினர். இதற்கு விசைத்தறி தொழிலாளர்கள் ஒரு மிகப்பெரும் வாக்கு வங்கி என்பது முக்கிய காரணமாகும். ஆளும் கட்சியின் குமாரபாளையம் நகர் மன்றத் தலைவர் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். அனைத்துத் தரப்பினரும் அதில் பங்கேற்றனர். ஏஐசிசிடியு சார்பில் மாநிலச் செயலாளர் தோழர் சுப்பிரமணி, சிபிஐ (எம்எல்) கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் பொன். கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் அடைப்புத் தறி முதலாளிகளுக்கு 15% கூலி உயர்வு வழங்குவது என்றும் அடைப்புத்தறி முதலாளிகள் தொழிலாளர்களுக்கு 20% கூலி உயர்வு வழங்குவதென்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் காரணமாக ஒருமாதத்திற்கும் மேலாக நடைபெற்ற வேலை நிறுத்தப்போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், இதுபோன்று போடப்படும் ஒப்பந்தங்களை அமலாக்க சட்ட அங்கீகாரம் இல்லாததால் எப்போதுமே அனைத்து விசைத்தறிக்கூடங்களிலும் ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவது என்பது சிரமமான காரியமாகவே இருந்து வந்துள்ளது.

அதேபோல் அருகில் உள்ள, மற்றொரு விசைத்தறி மையமான, பள்ளிப்பாளையத்தில் கூலி உயர்வு கேட்டு போராட்ட வியூகங்கள் துவங்கி உள்ளன. அனைத்து தொழிற்சங்கங்களும் தனித்தனியே வேலை நிறுத்த அறிவிப்பு கொடுத்துள்ள நிலையில், வருவாய்த் துறை அதிகாரிகள் துவக்கி உள்ள பேச்சு வார்த்தையில் ஏஐசிசிடியு உள்ளிட்ட சங்கங்கள் பங்கெடுத்து வருகின்றன. பேச்சுவார்த்தை தொடர்கிறது.
 

ஏஐசிசிடியு முன் வைக்கும் கோரிக்கைகள்

விசைத்தறித் தொழிலுக்கான அனைத்து சட்ட திட்டங்களையும் முறையாக அமல்படுத்து!

*‘பாக்கி” எனும் பெயரில் நடக்கும் கொத்தடிமை முறைக்கு முடிவு கட்டு!

சிறுநீரக விற்பனை, கருமுட்டை விற்பனை போன்ற சமூக கொடுமைகளுக்கு முடிவு கட்டு!

டாஸ்மாக் கடையை இழுத்து மூடு!

விசைத்தறிக் கூடங்களில் அனைத்துஅடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடு!

*தொழில் தாவாக்களில் தொழிலாளர் துறையின் செயல்பாட்டை உத்திரவாதம் செய்!

*அனைத்து தொழிலாளர் குடும்பங்களுக்கும்வாழத் தகுந்த வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடு!

விசைத்தறித் தொழிலாளர்களின் கவுரவமான கூலி, பணிநிலை, வாழ்வாதாரம் ஆகியவற்றை உத்தரவாதம் செய்!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை, குடும்பங்களுக்கும் நலன்களை உத்தரவாதம் செய்!