திரிபுராவில் குறுகிய வெற்றியில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்ட மோடி அரசாங்கம், இந்தப் பாசிச ஆட்சியின் அடையாளமாக மாறியுள்ள தெரு அதிகாரம், பரப்புரை, அரசு அதிகாரம் ஆகியவற்றின் கொடிய சேர்க்கையை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக முழுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளது. திரிபுராவில் ஒப்பீட்டளவில் அமைதியான தேர்தலுக்குப் பிறகு, எதிர்க்கட்சிகளை, அவர்களுக்கு வாக்களித்தவர்களை, அச்சத்தில் உறைந்து போயிருக்கும் அந்த மாநிலத்தைப் பார்க்கச் சென்ற இடதுசாரிகள், காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களின் உண்மையறியும் குழுவினரை குறிவைத்து, தேர்தலுக்குப் பிந்தைய பயங்கரம், பழிவாங்குதல், வன்முறை ஆகியவற்றின் புதுப்பிக்கப்பட்ட ஆட்சியை சங்கப் படைப்பிரிவு கட்டவிழ்த்து விட்டுள்ளது. அதே நேரத்தில், மாநில சட்டமன்றத்தில் பாஜக அல்லாத முன்னணி கட்சியாகத் தேர்தலில் வெளிப்பட்ட பிராந்தியக் கட்சியான திப்ரா மோதாவினுடைய எதிர்ப்பின் கூர்மையை மழுங்கடிக்க, அந்தக் கட்சியின் கோரிக்கைகளுக்கு "அரசமைப்புச் சட்டத் தீர்வை"க் கண்டறிய, மோடி அரசாங்கம் ஒரு கலந்துரையாடுபவரை நியமிக்க ஒப்புக்கொண்டது போல் தெரிகிறது.

மேகாலயாவில், அது கூட்டாளியாக இருந்த தேசிய மக்கள் கட்சி தலைமையிலான மாநில அரசாங்கத்தை, மிகவும் ஊழல்மிக்கதென கண்டித்து பாஜக தனியாக தேர்தலில் போட்டியிட்டது. இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்த பாஜக, தேர்தல் முடிந்ததும், மீண்டும் அதே தேசிய மக்கள் கட்சியுடன் இணைந்து ஆட்சியில் அங்கம் வகிக்கிறது. அசாமில் தருண் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், ஹிமந்தா பிஸ்வா சர்மா அதிகாரத்தின் இரண்டாம் இடத்தில் இருந்தபோது அவருக்கு எதிரான பாஜகவின் ஊழல் குற்றச்சாட்டுகளை நாம் மறக்கவில்லை. ஹிமந்தா பிஸ்வா சர்மா பாஜகவில் சேர்க்கப்பட்ட பிறகு, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்களை எதிர்கொண்ட அமித் ஷா, அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து, இதுபோன்ற கேள்விகளைக் கேட்கக்கூடாது என்று வெட்கமின்றி ஆணவத்துடன் பத்திரிகையாளர்களிடம் கூறினார்! இன்று ஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் தற்போதைய முதல்வராகவும், பாஜக தலைமையிலான வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகவும் மட்டுமல்ல, அவர் வடகிழக்கில் சங்கப் படையின் பாசிசத் தாக்குதலை முன்னின்று நடத்துபவராக உள்ளார்.

ஊழல் மற்றும் பல்வேறு குற்றங்களில் குற்றம் சாட்டப்படும் ஒவ்வொரு தலைவருக்கும் பாஜகவில் சேர்வது என்பது மிகவும் பலனளிக்கும் காப்பீட்டுத் திட்டமாக மாறியுள்ளது. உண்மையில், பல பாஜக தலைவர்கள் தங்களை எந்தவொரு மத்திய நிறுவனமும் விசாரணையில் இருந்து பாதுகாத்திடும் என வெளிப்படையாக மார்தட்டிக் கொள்கின்றனர். கர்நாடகாவில், 6 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட, சக்தி வாய்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினரின் மகன் அலுவலகத்தில் சோதனை நடத்த லோக் ஆயுக்தா ஊழியர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டி இருந்தது. மத்திய பிரதேசத்தில், விசாரணைகள் போதுமான ஆதாரங்களை அளித்துள்ள போதிலும், குற்றச்சாட்டுகளை முன்வைக்க அரசாங்கம் அனுமதி வழங்காததால், லோக் ஆயுக்தா செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. இப்படியாக, பாஜக ஊழல்வாதிகளுக்கு நிச்சயமான புகலிடமாக மாறி இருக்கிறது போது, அதன் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு சேவை புரிய இந்த ஆட்சியால் முழுவதும் ஆயுதமயமாக்கப்பட்டுள்ள அமலாக்க இயக்குனரகம், மத்திய புலனாய்வுத் துறை போன்ற மத்திய நிறுவனங்களைக் கொண்டு மோடி அரசாங்கம் எதிர்க்கட்சிகளை வேட்டையாடுகிறது. ஏறக்குறைய அனைத்து எதிர்க்கட்சிகளும், குறிப்பாக அதிகாரத்தில் உள்ளவை, இந்த வெட்கக்கேடான மோடி ஆட்சியின் பழிவாங்கல், துன்புறுத்தல் நடவடிக்கைகளுக்கு ஆளாகியுள்ளன.

2024 தேர்தலுக்கு முன்னதாக, குறிப்பாக பீகாரில் ஏற்பட்டுள்ள அரசியல் மறுஅணிசேர்க்கை குறித்து மோடி ஆட்சி கவலை கொண்டுள்ளது. 2015 இல் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவின்றி சட்டமன்றத் தேர்தலில் பாஜக போட்டியிட்ட போது, அது பெற்ற இடங்களின் எண்ணிக்கை 53 ஆகக் குறைந்தது. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமைக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பி, ஐக்கிய ஜனதா தளம்-ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியை உடைப்பதில் இந்த ஆட்சி வெற்றிபெற்றது. மீண்டும் இணைந்த பாஜக-ஐஜத-லோஜக கூட்டணி 2019 மக்களவைத் தேர்தலில் பீகாரில் பெரும் வெற்றியைப் பெற்றது. 2022 இல் ஐஜத மீண்டும் ராஜத, இடதுசாரி, காங்கிரஸ் மகா கூட்டணியில் இணைந்ததால், பீகார் கூட்டணியை உடைக்க பாஜக கூடுதல் நேரம் வேலை செய்து முயற்சித்து வருகிறது. அரசாங்கத்தை சீர்குலைப்பது, கூட்டணியை இழிவுபடுத்துவது, கட்சிகளைப் பிளவுபடுத்துவதன் மூலமும் புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்வதன் மூலமும் பாஜகவுக்கு ஆதரவான அரசியல் மறு அணிசேர்க் கையை உருவாக்குவது என்ற மும்முனை வியூகம் அதன் நோக்கமாக உள்ளது. லாலு பிரசாத் யாதவின் முழு குடும்பத்தையும் குறிவைத்து பழைய வழக்குகள் மீண்டும் வெளியே எடுக்கப் பட்டுள்ளன. மேலும் பீகாரின் ஆளும் கூட்டணி தமிழகத்தில் ஆளும் கட்சியுடன் நட்பு கொண்டுள்ள போதும், தமிழ்நாட்டில் பீகாரி தொழிலாளர்கள் தாக்கப்பட்டு, கொல்லப் பட்டதாக பாட்னாவில் போலி வீடியோக்கள் படமாக்கப்பட்டு, சமூக ஊடகங்களில் வைரலாக் கப்பட்டு, பொய்யான கதையை உருவாக்கியுள்ளனர்.

கருப்புப் பணத்தின் மீதான போராக முன்னிறுத்தப்பட்ட நவம்பர் 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்ற ஊழல் எதிர்ப்பு போராட்டத்தின் காட்சியை உருவாக்க அமலாக்க இயக்குனரக திடீர்ச்சோதனைகளை அரசாங்கம் பயன்படுத்துகிறது. இந்தச் சோதனைகள் பரவலாகப் பரப்புரை செய்யப்படுகின்றன. பெரும்பாலும் அமலாக்க இயக்குனரகம் ஒரு திடீர்ச்சோதனையின் உண்மையான விளைவு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையையும் வெளியிடாத அதே வேளையில், பெயரிடப்படாத 'ஆதாரங்களை' மேற்கோள் காட்டி கைப்பற்றப்பட்ட சொத்துக்களின் சரிபார்க்கப்படாத தகவல்களுடன், ஊழல் பற்றிய ஒரு கருத்து ஊடகங்களால் உருவாக்கப்படுகிறது. நாடாளு மன்றத்தில் அரசாங்கம் தானே ஒப்புக்கொண்ட படி, 31 மார்ச் 2022 வரை அமலாக்க இயக்குனரகத்தால் எடுத்துக் கொள்ளப்பட்ட 5422 பணமோசடி வழக்குகளில், 992 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 23 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். அமலாக்க இயக்குனரக நடவடிக் கையின் பெரும்பகுதி பரப்புரையின் மூலம் பொதுக் கருத்தை மாற்றியமைத்தல், அரசியல் எதிரிகளை மிரட்டுதல், இழிவுபடுத்துதல், ஊடகங்களின் விமர்சனக் குரல்களை அடக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது எனத் தெளிவாகிறது. பெரும்பாலான நிறுவனங்கள், முகமைகளைப் போலவே, அமலாக்க இயக்குனரகமும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்க அதிகாரியால் இயக்கப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 2021 நவம்பரில் அமலாக்க இயக்குனரகம், மத்திய புலனாய்வுத் துறைத் தலைவர்களின் இரண்டு ஆண்டுகள் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்க அரசாங்கம் சட்டத்தில் திருத்தம் செய்தது. பின்னர் தற்போதைய அமலாக்க இயக்குனரகத் தலைவர் சஞ்சய் மிஸ்ராவுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி மூன்றாவது முறையாக நீட்டிப்பு வழங்கியது.

மோடி அரசாங்கத்தின் இந்தத் தீங்கிழைக்கும், அடக்குமுறை ஆட்சியை அறிவிக்கப்படாத அவசர நிலை என்று விவரிப்பது மட்டும் போதாது. அதுவொரு தங்கு தடையற்ற அவசரநிலையாகும். இந்திய மக்களும் எதிர்க்கட்சிகளும் அதற்கு கடிவாளம் இட முடியாவிட்டால், சர்வாதிகார ஆட்சியின் வெட்கக்கேடான காட்சியை நோக்கி நாம் செல்கிறோம் என்றே பொருளாகும். 1970களில், அவசர நிலையை ஒழித்துக் கட்டி, முன்னேற இந்தியாவுக்கு வலு இருந்தது. 2020 களிலும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை தகர்க்கும் வளர்ந்து வருகிற பாசிசத்தை தடுத்து நிறுத்த, வெகுமக்களின் ஜனநாயக விருப்பத்தை நிச்சயமாக இந்தியா மீண்டும் உருவாக்கி, அறுதியிட வேண்டும்.