பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கையை துரிதமாக எடுப்போம்... இந்த அரசைப் பொறுத்தவரை, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், அதிலும் குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்துக்கே ஓர் அவமானச் சின்னம் என்று கருதுகிறோம். அந்த வகையில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி, கடுமையான நடவடிக்கையை துரிதமாக எடுப்போம் என்று ஏப்ரல் 12 அன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 6 வயது பள்ளிச் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட திமுக கவுன்சிலரும் பள்ளிக் கூடத்தின் தாளாளருமான பக்கிரிசாமியைக் குறிப்பிட்டுப் பேசியபோது முதல்வர் இவ்வாறு கூறினார். அந்த பக்கிரிசாமி கட்சியை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார். போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். நல்லது நடந்துள்ளது. அடுத்தடுத்த நடவடிக்கைகளைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

ஏனென்றால், கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் மர்மமான முறையில் இறந்துபோன ஸ்ரீமதியின் மரணத்திற்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லையே. மாணவியின் மரணத்திற்கு பாலியல் வன்கொடுமையோ, கொலையோ காரணமல்ல என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்தரையன், குற்றவாளிக ளுக்கான பிணை மனு விசாரணையின் போதே தனது கருத்தை வெளியிட்டார். அப்போதே இது விசாரணையின் போக்கைப் பாதிக்கும் என்று நீதியை, நியாயத்தை, ஜனநாயகத்தை விரும்பும் அனைவரும் கூறினார்கள். உயர்நீதிமன்றம் அவ்வாறு சொன்னது என்றால், அதற்கு முன்பே தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, பள்ளி நிர்வாகத்தினர் மீது எவ்வித தவறும் இல்லை என்பது போன்று அறிவித்தார். விசாரணை துவங்குவதற்கு முன்பே, மாணவி படித்த பள்ளியைச் சேர்ந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று கூறியது விசாரணையின் போக்கையே மாற்றியது. இறந்த மாணவியின் தாயார் மீது குற்றம் சுமத்தப்பட்டது. திட்டமிட்டு கலவரங்கள் உருவாக்கப்பட்டன. கலவரக்காரர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்தார்கள் என்று சொல்லி, மாணவிக்காக நீதி கேட்டுப் போராடியவர்களை கலவரக்காரர்கள் என்று முதல்வரின் கையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை கைது செய்தது. மாணவியின் மரணத்திற்கு காரணமான உண்மைக் குற்றவாளிகள் சுதந்திரமாகத் திரிந்து கொண்டிருக்கிறர்கள். அது மட்டுமின்றி, கலவரத்தால் 25 கோடி ரூபாய் பள்ளிக்கு இழப்பு. அதனால் பள்ளியைத் திறக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகினர். உயர் நீதிமன்றமும் 10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு போட்டது.

ஆனால், இன்றைய நாள்வரை குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யப்படும் என்று காவல்துறை சொன்னது. ஆனால், பல வாரங்கள் போய்விட்டன. இன்று வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்கும் பெண் குழந்தை சம்பந்தப் பட்டதுதானே! ஏன் இன்னும் குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்படவில்லை என்றால், எப்போது தாக்கல் செய்து, எப்போது விசாரணை நடத்தி எப்போது குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்? முதல்வர் கூறிய துரிதமான நடவடிக்கை என்பது இதுதானா? திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட முதல்வர் அவர்கள், கனியாமூர் பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் பாஜகவுக்கு நெருக்கமானவர்கள் என்கிறபோது, பாசிச பாஜகவை ஒழித்துக் கட்டும் முயற்சியில், சமூக நீதியை உயர்த்திப்பிடிப்பதில் முதன்மை யாக நிற்கும் திமுக அரசு இன்னும் வேகமாக அல்லவா நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாறாக சொந்தக் கட்சியினர் மீது காட்டும் வேகத்தைக் காட்டிலும் பாஜகவினர் மீது காட்டப்படும் வேகம் குறைவாகவே உள்ளது என்பது அப்பட்டமாகவே வெளிப்படுகிறது. பாசிச பாஜக எதிர்ப்பு என்பது வெளி வேஷமா? என்று மக்கள் திமுகவைப் பார்த்து சந்தேகப்பட மாட்டார்களா? 

சாதி, மதம் பார்த்து வருமா சமூக நீதி?

கனியாமூரில் குற்றவாளிகள் சங்கிகளுக்கு நெருக்கமானவர்கள் என்பதால் ஸ்ரீமதிக்கான நீதி தள்ளிக் கொண்டே போகிறதென்றால், வேங்கை வயல் குற்றவாளிகள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் தலித் மக்கள் பயன்படுத்திய குடி தண்ணீர் தொட்டியில் வண்டிக் கணக்கில் மலத்தைக் கலந்த குற்றவாளிகள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? உண்மைக் குற்றவாளிகள் இடைச் சாதியைச் சேர்ந்தவர்கள், ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதுதானே காரணம். ஆதிக்க சாதியினர் வாக்கு வராமல் போய்விடக் கூடாது என்பதுதானே காரணம்? குடி தண்ணீர் தொட்டியில் மலம் கலந்துள்ள விசயம், வேங்கை வயல் குழந்தைகள் வியாதி வந்து படுத்த நிலையில், அவர்களின் நோய்க்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தபோதுதானே அவர்கள் குடித்த நீரில் மலம் கலந்துள்ளது என்கிற விவரமே தெரியவந்தது. 

தொட்டியில் மலம் கலந்துள்ள விவரம் எனக்கு தெரிந்தவுடனேயே அந்தத் தொட்டியை சுத்தம் செய்ய உத்தரவிட்டதாக முதல்வர் அவர்கள் சட்ட சபையில் கூறினார்கள். ஆனால், அந்தத் தொட்டியை இடித்துத் தள்ளிவிட்டு அனைத்து சாதியினரும் பயன்படுத்தும் தொட்டியை வேங்கைவயலைச் சேர்ந்த தலித் சமூக மக்களும் பயன்படுத்துவார்கள் என்று அறிவித்து அதன்படி நடவடிக்கை எடுக்க சமூக நீதி காக்கும்! திமுக அரசை எது தடுக்கிறது.?

குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நடவ டிக்கை எடுப்பதாகச் சொல்லிக் கொண்டு தமிழ்நாடு காவல் துறை என்ன செய்தது? வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்தவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாங்கள்தான் தங்கள் தண்ணீர் தொட்டியிலே மலத்தைக் கலந்தோம் என்று ஒப்புக் கொள்ளச் சொல்லி துன்புறுத்தியது. பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழி போடும் பாஜக-சங் கும்பல்களின் மோசமான நடவடிக்கை அல்லவா இது? பாஜக ஆளுகின்ற மாநிலங்களில், பெண்கள், தலித்துகள் ஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குள்ளானால், பாதிக்கப்பட்ட அந்த பெண் மீதே குற்றம் சுமத்தி, குற்றவாளிகளைத் தப்பிக்கச் செய்வதுதானே நடந்து கொண்டிருக்கின்றது. தலித்துகள், இஸ்லாமியர்கள் மீது, பசுக்குண்டர்கள் வீண் பழி சுமத்தி தாக்குதல் நடத்துகிறார்கள். அவர்களுக்கு ஆட்சியில் உள்ளவர்களும் அவர்களின் ஆசி பெற்ற காவல்துறையினரும் துணை போகிறார்கள். அதே நிலைதான் பெரியார் பூமியில், சனாதனத்துக்கு எதிராக சமூக நீதி காக்க, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக ஆட்சி செய்யும் தமிழ்நாட்டிலும் நடக்கும் என்றால், சமூக நீதி பற்றி பேசுவது வெற்றுப் பேச்சாகாதா? தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயல் ஆகாதா? வேங்கைவயல் உண்மைக் குற்றவாளிகள் உடன் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்

மாறாக, வேங்கை வயல் விசயத்திலும் கனியாமூர் பிரச்சனையிலும் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை தள்ளிக் கொண்டே போய், மற்ற பிரச்சனைகள் வந்து மக்களை மறக்கடிக்கச் செய்திடும் மோசமான யுத்தியை தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் திமுக அரசும் செய்கிறது என்று சொன்னால், பாசிச பாஜகவிற்கு எதிரான சமூக நீதிக்கான போராட்டத்திற்கு தலைமை தாங்குவதாகச் சொல்வதில் எவ்வித பொருளும் இல்லை.

இதுபோன்ற பிரச்சனைகள் தமிழ்நாடெங்கும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அவை அனைத்தும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சியில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர் சுடலை மாடனை, ஊராட்சி தலைவி யும் அவரது மாமியாரும் அவரின் சாதியைப் பற்றி இழிவாகப் பேசி திட்டியதால், தற்கொலை செய்து கொண்டார். சம்பந்தப்பட்ட குற்றவாளி கள் திமுகவைச் சேர்ந்தவர்கள். அதில் பேரூராட்சியின் முன்னாள் தலைவியான ஆயிஷா 23 நாட்கள் தலைமறைவிற்குப் பின்னர் கடந்த ஏப்ரல் 10ம் தேதி காவல் நிலையத்தில் சரணடைந்தார். ஒரு வன்கொடுமைக் குற்றவாளி சரணடைந்தபோது, அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்கள் திமுக நிர்வாகிகள். திமுக பேசும் சமூக நீதி இதுதானா? ஆயிஷா தனக்கு நெஞ்சு வலி என்று சொல்லி கைதுக்குப் பின்னரும் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று பார்க்கின்றவர்கள் சொல்கிறார்கள்.

சென்னை நங்கநல்லூர் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது நீரில் மூழ்கி இறந்துபோன அர்ச்சகர்கள் குடும்பங்களுக்கு நிதி வழங்குவது அவர்கள் குடும்பத்தினருக்கு வேலை கொடுப் பது எல்லாம் கண்டிப்பாகச் செய்யப்பட வேண்டியது. அவர்கள் இறப்பிற்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் அஞ்சலி செலுத்தியதும்கூட தவறில்லை. ஆனால், இதேபோல் தலித் மக்கள் மரணமடைந்தால், உழைக்கும் தொழிலாளர்கள் பட்டாசு ஆலைகளில், கட்டுமானப் பணியின் போது மரண மடைந்தால், கடலுக்குள் செல்லும் மீனவர்கள் செத்தால், இலங்கை கடற்படையி னரால் சுட்டுக் கொல்லப்பட்டால், அப்போ தெல்லாம் சட்டப் பேரவையில்அஞ்சலி செலுத்துவது கிடையாதே ஏன்?.சமூக நீதி கூட சாதி, மதம் பார்த்துதான் வருமா? 

தீர்த்தவாரியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முதல்வர் அவர்கள் வேங்கை வயல் கிராமத்திற்கு இதுவரை போகவில்லையே ஏன்? பட்டியல் பழங்குடியினர், பட்டியல் சாதியினர் என்று பார்த்து, அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப் படுவது தமிழ்நாட்டிலும் இருந்து கொண்டிருப் பதுதான் கொடுமையிலும் கொடுமையாகும். அரசு அலுவலகங்களில், மருத்துவமனைகளில், உள்ளாட்சி அமைப்பு களில் என்று மட்டுமல்ல, பள்ளிக் கூடங்களில் மாணவர்கள், சக மாணவர்களால் மட்டுமல்ல,ஆசிரியர்களாலும் வன்கொடுமைக்குள்ளாக்கப் படுகிறார்கள். 

மனித உரிமை மீறலும்கூட சமூக நீதிக்குஎதிரானதே

சமூக நீதி பேசிக் கொண்டே சமூநீதியை மீறுகிற நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும் அதேவேளை மனித உரிமை மீறல்களும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதிமுக ஆட்சியில், ஸ்டெர்லைட், சாத்தான்குளம் என்று காவல்துறையினரின் அத்துமீறல் அராஜகம் கண்மூடித்தனமாக இருந்தது என்றால், திமுக ஆட்சியிலும் அவை அதிகரித்துக் கொண்டிருக் கின்றன என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் விசய மாகும். காவல் நிலைய கொட்டடித் தாக்குதல் கள், காவல் நிலைய கொட்டடி மரணங்கள் பலவும் வெளியே தெரியாமல் நாளும் நடந்து கொண்டிருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் காவல் உதவி கண்காணிப் பாளராகப் பணிபுரிந்த பல்வீர் சிங், விசாரணைக் கைதிகளின் பல்லை உடைத்துள்ளார். சிலரின் உயிர்த் தளத்தை கசக்கி கொடுமைப் படுத்தி யுள்ளார். பல்வீர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. இவர் பணியில் சேர்ந்து 6 மாதங்களில் சுமார் 45க்கும் மேற்பட்ட வர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்று கூழாங்கற்களை வாயில் போட்டு கடிக்கச் சொல்லியும் கற்கள் வாயில் இருக்கும் போதே அவர்களின் கன்னத்தில் இரு கைகளாலும் ஓங்கி அடித்தும், கட்டிங் பிளேயர் கொண்டும் பற்களை பிடுங்கியுள்ளார். பல்வீர் சிங்கின் இந்த மனித உரிமை மீறல் சித்தரவதையானது அவரின் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு தெரிந்து இருந்தாலும் மேலதிகாரிக்குக் கட்டுப்பட்டு கண்டு கொள் ளாமல் இருந்தார்கள் என்றால், தங்கள் உளவுத் துறையினர் மூலம் இச் செயலை நன்கு தெரிந்து கொண்டே கண்டு கொள்ளாமல் இருந்தார்கள் பல்வீர் சிங்கிற்கு மேலிருந்த காவல் துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகத்தினரும் என்பதுதான் மிகவும் வருத்தத்திற்குரியதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.

இப்பிரச்சனை வெளியே வந்ததும் உடன் நடவடிக்கை எதுவும் பல்வீர் சிங் மீது எடுக்கப்படவில்லை. இடதுசாரிக் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர் கள் நடத்திய போராட்டத்திற்குப் பின்னர்தான்,முதலில் பல்வீர் சிங் தற்காலிகப் பணி நீக்கம் மட்டும் செய்யப்பட்டார். கண் துடைப்புக்காக, சேரன்மகாதேவி சார் ஆட்சியரின் விசாரணைக்கு உத்தரவிட்டார்கள். பல்வீர் சிங்கும் சேரன்மகா தேவி சார் ஆட்சியரும் ஒரே நேரத்தில் பயிற்சி மேற்கொண்டவர்கள். அது மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்களை எல்லாம் காவல் துறையினர் மிரட்டி, (வழக்கம்போல) பாத்ரூமில் வழுங்கி விழுந்ததில் பல் உடைந்து போனது என்று சொல்ல வைத்தார்கள். பலரைப் பார்த்து பல் கட்டுவதற்கு காசு தருகிறோம் சாட்சி சொல்ல வரவேண்டாம் என்று தடுத்தார்கள். இந்தச் சூழ் நிலையில், இகக(மாலெ) ஆரம்பத்திலேயே கூறியதுபோல், பணியில் இருக்கும் நீதிபதி ஒருவரின் தலைமையின் கீழ் பல்வீர் விசயத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவருடன் பணியில் இருந்த கீழ் அதிகாரிகள் மட்டுமின்றி, உயர் அதிகாரிகள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் வரை நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பல்வீர் சிங் உள்ளிட்ட அனைத்து காவல் அதிகாரிகளும் காவலர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை முயற்சி குற்ற வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் முன் வைக்கப்பட்டது.

தற்போது மாவட்ட காவல் கண்காணிப் பாளராக இருந்த சரணவனும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார், சில கீழ் மட்ட அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்ப்புக் குரல் வலுத்ததைத் தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையை அமுதா ஐஏஎஸ் அவர்கள் துவங்கியுள்ளார்கள். பாதிக்கப்பட்ட எவரும் விசாரணையில் சாட்சி சொல்ல வரவில்லை. திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரோ, ஏற்கனவே சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முன்பு சாட்சியமளித்தவர்கள் திரும்ப வரவேண்டிய தேவையில்லை, விரும்பினால் வரலாம் என்று அறிவிக்கிறார். இது மறைமுகமாக சாட்சியமளிக்க வருபவர்களைத் தடுக்கும் செயலாகும். பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை யினருக்கு எதிராக சாட்சியமளிக்க மிகவும் பயப்படும் நிலையில், தமிழ்நாடு அரசுதான் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். காவல்துறையினர் பெரும்பாலும் காவல் துறையினருக்கு ஆதரவாகவே செயல் படுவார்கள் என்பது நன்கு தெரிந்த ஒன்றுஆகையால், பதவியில் இருக்கும் மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். மனித உரிமை வழக்கறிஞர் செம்மணி காவல் அதிகாரிகளால் தாக்கப்பட்ட வழக்கில், சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டது. ஆனால், வழக்கில் உண்மையில்லை (Mistake of Facts) என்று சொல்லி இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. விசாரணை நேர்மையாக நடக்க அரசு உறுதி செய்ய வேண்டும்.

காவல்துறையில் மட்டுமின்றி, எல்லா துறைகளிலுமே உயர் அதிகாரிகளின் மனித உரிமை மீறல்கள், அராஜக, அத்துமீறல்கள் மாநிலம் முழுவதும் காணப்படுகின்றன. மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டி நாகலட்சுமி நூறு நாட்கள் வேலை பொறுப்பாளராக இருந்தார். அவருக்கு 12 வயதிலிருந்து 6 மாதம் வரை ஐந்து பெண் குழந்தைகள். அவரை ஊர் கவுன்சிலர் களும் எழுத்தர் மற்றும் செயலர் வேலையை விட்டு போகச் சொல்லி மிரட்டிய தால், பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த அவர் இரண்டு குழந்தைகளை பேருந்திலேயே விட்டுவிட்டு ஓடும் பேருந்தில் இருந்து குதித்து இறந்துவிட்டார். இதில் செயலர் கைது செய்யப் பட்டுள்ளார். பத்திரப்பதிவுத்துறை மந்திரி குடும்பத்தினரைப் பார்த்துள்ளார். 5 லட்ச ரூபாய் நிதி கொடுத்துள்ளார். எல்லாம் முடிந்த பின்னர் இதனால் என்ன பயன்? முறையில்லாமல் நடக்கும் திட்ட வேலைகளினால் ஆட்சியில் இருப்பவர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களுமே ஆதாயம் பார்க்கிறார்கள். அன்றாடங்காய்ச்சிகள் வாழ்வு கேள்விக்குள்ளாகிக் கொண்டே இருக்கின்றது. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடராமல் இருக்க வேண்டும் என்றால், பாசிச பாஜகவின் உழைக்கும் மக்கள் விரோத, கார்ப்பரேட் முதலாளிகள் ஆதரவு, மதவெறிக் கொள்கைகள் தமிழ்நாட்டிற்குள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை. ஆனால், திமுக அரசும் கார்ப்பரேட் முதலாளிகள் ஆதரவு, தொழிலாளர் விரோத, சாதியாதிக்க சக்திகள் ஆதரவு நிலைப்பாட்டையே மேற்கொண்டு வருகிறது என்பதையே நடக்கும் நிகழ்வுகள் காட்டுகின்றன. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாத நிலையில், மக்கள் போராட்டக் களத்தில் இறங்குவது தவிர்க்க முடியாததாகும். கனியாமூர், வேங்கைவயல், அம்பை, உடன்குடி, மையிட்டான்பட்டி என நீண்டு கொண்டே போவது சமூக நீதி ஆட்சிக்கு எடுத்துக்காட்டாகாது.