தமிழ்நாட்டில் பாஜக தனது தேர்தல் தயாரிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து தொடங்கியிருக்கிறது. அமித்ஷாவின் வருகை மக்கள் மத்தியில் எவ்விதமான செல்வாக்கையும் ஏற்படுத்த தவறிவிட்டது. இதனால் விரக்தி அடைந்துள்ள அமித்ஷாவும் அண்ணாமலையும் அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகம், வீடுகளில் சோதனை செய்ததோடு நிறுத்தாமல் நள்ளிரவில் கைதும் செய்திருக்கிறது. இதன்மூலம் கோவை மண்டலத்தில் சரிந்துபோன பாஜக செல்வாக்கை தூக்கி நிறுத்தி விடலாம் என்று கனவு காண்கிறது. பாஜக குறிவைக்கும் ஒவ்வொரு தொகுதிக்கும் இப்படி ஒரு சர்வாதிகார செயலை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளது என்பதும் தெரிகிறது.
மக்களை பிளவு படுத்தும் அரசியலைக் கொண்ட பாஜக, கட்சிகளை பிளப்பது, விழுங்குவது, தலைவர்களை அச்சுறுத்துவது, விலைக்கு வாங்குவது என்னும் அரசியல் மூலம் வெற்றி பெற நினைக்கிறது. திமுக மட்டுமின்றி இந்தியா முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகளுக்கு ஒரு அச்சுறுத்தலாகவும் பாஜக காட்ட விரும்புகிறது.
பற்றி எரிந்து கொண்டிருக்கும் மணிப்பூரில் அமைதியைக் கொண்டுவர துரும்பையும் எடுத்துப் போடாத மோடி ஆட்சி, மத்தியப் படைகளை வைத்துக்கொண்டுதமிழ்நாடு தலைமைச் செயலகத்திலேயே அதிரடி சோதனை நடத்தியிருப்பது ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சி முறைக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தமிழ்நாட்டில் பாஜகவின் அப்பட்டமான அரசியல் தோல்வியையே காட்டுகிறது.
பாசிச நடவடிக்கைகள் மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என்று கனவு காணும் பாஜக வுக்கு தமிழ்நாட்டை கல்லறையாக மாற்றிட முன்வர வேண்டுமென *இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)* தமிழ்நாடு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து செங்கோல் பெற்றுக் கொண்டதாக மார்தட்டும் பாஜக, தமிழ்நாட்டு மக்கள் மீது கொடுங்கோலை ஏவி உள்ளது. பாஜகவின் இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.