33% இ ஒதுக்கீட்டின் உண்மை நோக்கம்!?

    சில நாட்களுக்கு முன்பு, பெண்களுக் கான இடஒதுக்கீடு மசோதா செப்டம்பர் 20 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கடந்த 27 ஆண்டுகளாக இந்த மசோதா காத்திருந்தது. 18 செப்டம்பர் 2023 அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், ஒரு சிறப்பு அமர்வின் போது பாஜக அரசாங்கம் இந்த மசோதாவை தாக்கல் செய்தது. சில சிறப்பு பணிகளை நிறைவேற்ற கடவுள் தன்னைத் தேர்ந்தெடுத்ததாக அப்போது மோடி கூறினார்! அவர் இந்த மசோதாவை 'பெண்கள் சக்தி வழிபாடு' சட்டம் என்று அழைத்தார். ஆனால், மசோதா வெளிவந்த பிறகுதான், இந்த தெய்வீகப் பிரதிநிதியும் அவரது குழுவினரும் பெண்கள் மீது ஒரு பெரிய தந்திரத்தை திட்டமிட்டு ஏவியுள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது.

   ஆனால் உண்மையில் பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது நிச்சயமற்றதாகவே உள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதிகள் மறு வரையறை செய்யப்பட்ட பிறகே இது நடை முறைக்கு வரும் என்று இந்த மசோதா கூறுகிறது. இருப்பினும், இந்த அரசாங்கம் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒத்திவைத்துள்ளதால், அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்பது தெரியாது. தொகுதி மறுவரையறை என்பது மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு செய்ய வேண்டிய ஒரு சிக்கலான பணியாகும். எனவே, இந்தச் சட்டம் பல ஆண்டுகளுக்கு நிலுவையில் இருக்கும், எனவே, இது செத்துப்போன ஒன்றாகும்.

இடஒதுக்கீட்டிற்குள் உள் ஒதுக்கீடு வேண்டுமென்ற நியாயமான கோரிக்கை நீண்ட காலமாக பொது விவாதத்தில் உள்ளது. இது தொடர்பான கருத்து வேறுபாடுகள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை சிறிது காலம் காத்திருக்க வைத்திருந்தது. மசோதா சட்ட மாக்கப்பட்டபோது இந்த இடஒதுக்கீடு சேர்க்கப் பட்டிருக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பே, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், பெண்கள் இடஒதுக்கீடு கோரிக்கையில் உள்ஒதுக்கீட்டைக் கொண்டுவர வேண்டுமெனக் கோரியது. பிற்படுத்தப்பட்ட சாதிகள், சிறுபான் மையினர், பட்டியலின மற்றும் பழங்குடியினச் சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு விகிதாச் சாரப்படி 33 சதவீத இடஒதுகீட்டிற்குள் இடமளிக்கப்பட வேண்டும் என்ற அந்த கோரிக்கையை இப்போது மீண்டும் வலியுறுத்து கிறோம். இந்தச் சட்டம் 2024 தேர்தலின்போதே அமல்படுத்தப்பட வேண்டு மென்றும் பெண்கள் இடஒதுக்கீட்டை ராஜ்யசபா, சட்டப்பேரவை மேலவைகளிலும் ஒரே நேரத்தில் அமல்படுத்த வேண்டும் என்றும் கோருகிறோம்.

இந்த மசோதாவைத் தாக்கல் செய்வதில் அரசு இவ்வளவு ரகசியமாகவும், அவசரமாகவும் செயல்பட்டதை வைத்துப் பார்க்கும் போது, உலகம் முழுவதும் அரசின் கெட்ட பெயர், வளர்ந்து வரும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை, நாடு முழுவதும் பெண்களிடையே அதிகரித்து வரும் அரசுக்கு எதிரான கோபம் இவற்றை சரிக்கட்டும் முயற்சியாகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாகவே தெரிகிறது.

பாஜக-ஆர்எஸ்எஸ் ஆட்சி, பெண்களுக்கெதிரான வன்முறை ஆட்சி

9 ஆண்டுகால ஆட்சியில், பாஜக- ஆர்எஸ்எஸ் அரசு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது, பெரும் பாலும் பெண்களையே குற்றம் சாட்டி வருகிறது. ஒரு இயக்கத்தால் அழுத்தம் கொடுக்கப்பட்டால், அரசாங்கம் தோள்களைக் குலுக்கிக்கொண்டு, இதெல்லாம் ஓரஞ்சார சக்திகளின் கைவேலை கூறி எழுச்சியை அடக்கிவாசிக்க என்று கூறி எழுச்சியை அடக்கி வாசிக்க முயல்கிறது. ஆனால் இந்த ஆண்டு நடந்த சில கவலைதரும், வெட்கக்கேடான சம்பவங்கள், அரசாங்கம் வெளிப்படையாக குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பதைக் காட்டுகிறது.

பாஜக எம்பியும், அப்போதைய மல்யுத்த சங்கத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் துன்புறுத்தல், சுரண்டல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மல்யுத்த வீரர்களில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற பெண்களும் அடங்குவர். அவர்களது வெற்றியை பாஜகவினரும் கொண்டாடினர். ஆனால், இந்த வீராங்கனைகள் ஜனவரி 18, 2023 அன்று தைரியமாக முன்வந்த போது, தாங்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு நீதி கோரியபோது, பெண்களுக்கான நீதியையும் தள்ளிப்போட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பிஜேபி அவர்க ளின் கோரிக்கைகளை பல்வேறு தந்திரங்களின் மூலம் திசைதிருப்பியது, மேலும் மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டுகளை இழிவு படுத்துவதற்காக அனைத்து வகையான எதிர்க் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. இறுதியில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணைக் குழுவின் அறிக்கையை பகிரங்கப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தை அணுக ஏப்ரல் முதல் வீரர்கள் ஜந்தர் மந்தரில் தர்ணா தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வீராங்கனைகளின் குற்றச்சாட்டுகளை தீவிரமானதாகக் கண்டறிந்த உச்ச நீதிமன்றம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது. போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். ஆனால் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்தனர், மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தனர். ஒரு மைனர் (வயது அடிப்படையில்) வீரரின் குடும்பத்தின் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம், அவரும் அவரது கூட்டாளிகளும் முதல் தகவல் அறிக்கையைத் திரும்பப் பெறுமாறு கட்டாயப் படுத்தப்பட்டனர். மேலும், குற்றஞ்சாட்டப் பட்டவர் மீதான POCSO குற்றச்சாட்டுகளை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமரின் மவுனத்திற்கு மத்தியில் வீரர்கள் மீது கடும் அடக்குமுறைகள் ஏவப்பட்டன. அதே நேரத்தில், இந்த வீரர்களுக்கு ஆதரவாக பெண்கள் அமைப்புகள் மட்டுமின்றி விவசாயிகள் அமைப்புகளும் பொதுமக்களும் வீதிகளில் இறங்கத் தொடங்கினர். இதற்கு வலு சேர்க்கும் வகையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மற்ற வீரர்கள் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக நின்றபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷன் நீக்கப்பட்டார். ஆனால் இன்றும் கூட அவர் பாஜகவின் எம்.பி., என்ற கோதாவில் கணிசமான அதிகாரத்தை செலுத்தி வருகிறார்.

பெண்கள் உடல்கள் மீது போர்...

மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாண மாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட வீடியோ, சம்பவம் நடந்து ஒரு மாதத் திற்குப் பிறகு வைரலானபோது, மணிப்பூரில் நடந்து வரும் கொடூரமான வன்முறை பற்றி நாடு முழுவதும் அறியப்பட்டது. இது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை விடுத்தும் பிரதமர் மவுனம் சாதித்தார். மணிப்பூர் மீது எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அடுத்து, மணிப்பூரில் நடந்த சம்பவத்தை குறித்தும், எதிர்க்கட்சிகள் குறித்தும் மோடி பேசினார். மணிப்பூரில் நடந்த வன்முறையைக் கண்டிக்க வேண்டிய நேரத்தில் எதிர்க்கட்சிகளைத் தாக்கினார். மணிப்பூரில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இந்த வன்முறை நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். வன்புணர்ச்சி, கொலை மற்றும் தீ வைப்பு தொடர்கிறது, ஆனால் பிரதமர் மணிப்பூருக்கு இதுவரை செல்லவில்லை.

இந்த விவகாரத்தை மாநில பிரச்னை என்று கூறி மத்திய அரசு கைகழுவி விட முடியாது. பிரிவு 355ன் கீழ், அங்குள்ள பெரும்பாலான நிர்வாகம் மத்திய அரசின் கைகளில் உள்ளது. மணிப்பூரில் பாஜக அரசு உள்ளது, ஆனால் தற்போது நடக்கும் குழப்பங்களுக்கு முதல்வர் பதிலளிக்கவில்லை. மணிப்பூரில் மெய்தே சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். முதல்வர் மற்றும் 60 எம்எல்ஏக்களில் 40 பேர் மெய்தே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பாஜக- ஆர்எஸ்எஸ் மெய்தே மற்றும் குகி சமூகங்கள் தங்களுக்குள் சண்டையிடுவதை உறுதி செய் துள்ளது. இவை அனைத்தும் பாஜகவால் நன்கு திட்டமிடப்பட்டவை. இரு சமூகத்தினருக்கும் ஆயுதங்கள் விநியோகிக்கப்படுவதுடன், இந்து- கிறிஸ்தவ பிரிவினையையும் உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தத்தில், இயற்கை வளங்களை பெரு முதலாளிகள் கைப்பற்றுவதற்கு வசதியாக, இரு சமூகத்தினரின் உணர்வுகளையும் தூண்டிவிட்டு, பெண்களின் உடல் மீது போர் தொடுக்கப்படுகிறது.