புத்தாண்டு 2024 பெரும்பான்மை மக்களுக்கு சோகமாகவே பிறந்திருக்கிறது. 2023 டிசம்பர் 2இல் சென்னையை சுற்றியுள்ள வட மாவட்டங்களிலும் டிசம்பர் 17இல் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் பெய்த மழையினாலும் ஏற்பட்ட வெள்ளத்தினாலும் மக்களில் பலர் இன்னும் பாதிப்பிலிருந்து மீளாமுடியாத நிலையில் இருக்கிறார்கள். குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆற்றங்கரை மற்றும் கால்வாய்கரைகள் பக்கம் வசித்தவர்கள் வீடுகளில் வெள்ள நீர் புகுந்து, அனைத்து பொருள்களும் நாசமாகிவிட்டன. பல வீடுகளில் ஒரு சிறிய பொருள், ஊக்கு கூட இல்லாத அளவிற்கு வெள்ளம் அடித்துச் சென்றுள்ளது. வெள்ளத்தின் போது உடுத்தியிருந்த துணியைத் தவிர மாற்றுத் துணி இல்லாமல் பல குடும்பங்கள் திண்டாடிக் கொண்டிருக்கின்றன. எல்லா வீடுகளில் வெள்ளம் அடித்துச் சென்றதுபோக எஞ்சிய துணி மணிகளையும், வீட்டுப் பத்திரங் களையும், பள்ளிக் குழந்தைகளின் புத்தகங்களையும் நாட்கணக்கில் காயவைத்துக் கொண்டிருக் கிறார்கள். ஆதார் கார்டு, ரேசன் கார்டுகள், மாணவர்களின் சான்றிதழ்கள் பல வீடுகளில் காணமல் போய்விட்டன அல்லது சகதி படிந்து நாசமாகிப் போய்விட்டுள்ளன. டிவி, மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், செல்போன் என மின்னணுச் சாதனங்கள் எல்லாம் நாசம். ஒரு பொருளும் இல்லாத அல்லது இருந்தும் பயன்படுத்தப்பட முடியாத வீடுகள் பல உள்ளன. அவர்களுக்கு வெறும் ரூபாய் 6000 என்பது வீட்டிற்குள் புகுந்த சகதியை வெளியேற்றுவதற்குக் கூட பத்தாது. தென் மாவட்டகள் சந்தித்த சுனாமி இது. ஓராண்டு மழை ஓரே நாளில் பெய்தது என்றபோதிலும் தென் மாவட்டங்களின் நீர் நிலைகளை சரியாகப் பராமரிக்காததும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சரியாக எடுக்காததும் ஒரு காரணம். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் நிவாரணப் பொருள்கள் வழங்கினாலும் அவை எதுவும் சில மாதங்களுக்குக்கூட தாங்காது. இந்தச் சூழலில் ஒன்றிய மோடி அரசு, தென் மாவட்டங்களின் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது என்கிறது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒப்புக்கு ஓரிரு இடங்களைப் பார்த்துவிட்டு, கோயிலுக்குள் நின்று கொண்டு வெள்ளத்தால் பாதிப்பு அவ்வளவு இல்லை, உண்டியலில் காசு போடாதே, உள்ளே கொடு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒன்றிய அரசு ரூ.21,000 கோடி ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் கேட்டால், ரூ.2000 கோடி கூட கொடுக்கத் தயாராக இல்லை. ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி கட்டுவதில் 3ம் இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய பாக்கியைத் தரக் கேட்டால், ஒங்க வீட்டுப் பணம் இல்லை அரசாங்கப் பணம் என்கிறார் நிதியமைச்சர் நிர்மலா. அது ஒங்கப்பன் வீட்டுப் பணம் இல்லை, மக்கள் அரசுக்குச் செலுத்திய பணம் அதைத்தான் கேட்கிறோம் என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். உடனே அப்பன் என்று மரியாதை யில்லாமல் சொல்லலாமா ? என்று விவாதம். ஆண்டவனையே நெல்லையில் அம்மையப்பன் என்று தான் சொல்வார்கள் என்பது இந்து மத வெறிக் கூச்சல் போடும் சங்கிக் கூட்டத்திற்குத் தெரியாதா என்ன? இவர்களுக்கு பிரச்சினையைத் திசை திருப்ப வேண்டும். திருச்சிக்கு வரும் பிரதமருக்கு திருநெல்வேலிக்கு வந்து பார்வையிட நேரமில்லை. வீட்டிற்குள் அடுத்த வேளை சோத்துக்கு வழியில்லாமல் மக்கள் வாடித் துடித்துக் கொண்டிருக்க, விமான நிலைய விரிவாக்கம், பேருந்து நிலைய விரிவாக்கம் என்று வீண் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். நிவாரணப் பொருள்களுக் காகவும் அரசு கொடுக்கும் வெறும் ஆயிரம் ரூபாய்க்கும் மக்கள் முட்டிமோதிக் கொண்டிருக்கிறார்கள். த தமிழ்நாட்டில் ல் காலூன்றத் துடிக்கும் பாஜகவின் ஒன்றிய அரசு, உரிய நிதியை தமிழகத்திற்கு ஒதுக்காமல் வஞ்சிக்கிறது என்றபோதிலும் தமிழ்நாடு அரசு, மக்களைப் பிச்சைக்காரர்களாக மாற்றும் நிலைக்கு மாறாக, நாட்கள் ஆனால் மறந்துபோகும் அல்லது பழகிப் போகும் என்ற நிலைக்கு மாறாக மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க, அவர்களின் மறு வாழ்வுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு கேந்திரமான நடவடிக்கையை உடன் மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் மக்களின் பெருங்கோபத்திற்கு ஆளாக நேரிடும்.