சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக செய்த கோல்மால்தனத்தைக் கண்டுபிடித்து தலையில் குட்டியதுமின்றி, தவறு செய்த தேர்தல் அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது உச்ச நீதிமன்றம். அந்தத் தேர்தல் அதிகாரிமட்டுமல்ல, அவரை அவ்வாறு செய்யத் தூண்டிய பாஜக தலைவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். அக்குற்றச் செயலைச் செய்யத் தூண்டியவர்கள் தப்பித்துவிடக் கூடாது. இந்த தீர்ப்புக்கு முன்பு, பாஜகவின் தேர்தல் பத்திர பலே கில்லாடித்தனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்து தேர்தல் பத்திரங்கள் செல்லாது, இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் வாங்கிய பத்திரங்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தர விட்டது உச்சநீதிமன்றம். 2018 முதல் 2023 வரையிலான காலத்தில் 26 ஆயிரத்து 24 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 14,940 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப் பட்டுள்ளது. அதில் சுமார்14,000 கோடி ரூபாய் வரை, 80% பாஜகவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியைத் தந்த சீரம் நிறுவனம் மட்டும் பாஜகவுக்கு 95 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரம் நன்கொடை வழங்கியிருக்கிறது. குஜராத்தைச் சேர்ந்த சஞ்சய் இழவா என்கிற சமூக ஆர்வலர் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்டறிந்து இதை வெளியிட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் மோடி அரசின் மோசடிகள் அம்பலமாகிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. விவசாயி களுடைய கோரிக்கைகளை ஒப்புக் கொண்டபடி நிறைவேற்றுவதற்கு மாறாக, அவர்கள் தலைநகருக்குள் வராமல் இருக்கச் செய்ய, தடுப்பரண் வேலி அமைப்பது, ஆணிகளை ரோட்டில் நடுவது என்று மிகவும் வெக்கங்கெட்ட செயலில் இறங்கிய பாஜக அரசு, விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொன்றுள்ளது. மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் மாற்றியது மட்டுமின்றி, படுமோசமான ஒடுக்குமுறைச் சட்டங்களாக, மக்கள் விரோதச் சட்டங்களாக மாற்றியுள்ள மோடி அரசு, வருகிற ஜூலை1ம் தேதியில் இருந்து அது அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது. இந்த ஒடுக்குமுறைச் சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்பட்டால், இந்திய குற்றவியல் நீதிமுறைதான் உலகிலேயே அதி நவீன ஒன்றாக இருக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். கார்ப்பரேட் கூட்டு களவாணித்தனத்துடன் பண மோசடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் சட்டமாக்கிய காவிப் பாசிஸ்டுகளான இவர்கள்தான் அதிநவீன நீதிமுறைக்காக சட்டங்கள் உருவாக்கியிருக்கிறோம்  என்று சொல்கிறார்கள். அதையும் நாம் நம்பவேண்டும்! வாக்கு எந்திர முறை இருக்கும் வரை எப்படியும் மீண்டும் ஆட்சிக்கு வந்திட முடியும் என்று நம்புகிறது மோடி அரசு. அதற்காக தேர்தல் ஆணையத்தை தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டு, வாக்குகள் சரிபாக்கும் VVPAT முறையிலும் மாற்றத்தைக் கொண்டு வருகிறது மோடி அரசு. உலகில் வளர்ந்த நாடுகள் கூட வாக்குச் சீட்டில்தான் தேர்தல் நடத்துகிறார்கள். பதவிசுகத்திற்காக அல்ல, மக்களுக்காக சேவை செய்யவே மூன்றாம் முறையும் எங்களை ஆட்சியில் அமர்த்துங்கள் என்று மோடி கேட்கிறார். கடந்த பத்தாண்டுகளாக, தாங்கள் என்ன செய்துள்ளோம், மக்கள் வாழ்க்கையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சொல்வதற்கு மாறாக, முன்னர் இருந்த ஆட்சியையும் எதிர்க்கட்சிகள் ஆளும் ஆட்சியுைம் பற்றி பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுவதுதான் அன்றாட வேலைகளாக மோடி-அமித்ஷா-யோகி முதல் கீழ்மட்டத் தலைவர்களும் பாஜகவினரும் செய்து வருகிறார்கள். வருகிற தேர்தலில் இவர்கள் வீழ்த்தப்படவில்லை என்றால், மிக மிக மோசமான விளைவுகளை இந்திய நாட்டு மக்கள் சந்திக்க வேண்டியதிருக்கும்.