இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் நல்லகண்ணுவிற்கும் 100 வயது. தோழர் நல்லகண்ணு அவர்களுடைய 100ஆவது பிறந்தநாள் விழா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு தலைமை அலுவலகமான சென்னை பாலன் இல்லத்தில் 26.12.2024 அன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி உரையாற்றினார். தனது உரையில் தோழர் நல்லகண்ணு அவர்களின் 100ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் சிபிஐ எம்எல் கட்சியின் சார்பாக வணக்கத்தை தெரிவித்துக் கொண்ட அவர், “பொதுவாக வாழ்கின்ற காலங்களில் தலைவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது.. அவர்களைப் புகழ்வது, பாராட்டுவது என்பதை கம்யூனிஸ்ட்டுகள் செய்வதில்லை. ஆனால், அன்புத் தோழர் நல்லகண்ணு அவர்கள் கம்யூனிஸ்ட் கொள்கையில் உறுதியாக நின்று 100 ஆண்டு காலம் இந்த மக்களுக்காகவும், நாட்டிற்காகவும் உண்மையாக, நேர்மையாகப் போராடிக் கொண்டிருக்கிற, உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிற தலைவர் தோழர் நல்லகண்ணு அவர்கள் தனது 18 ஆவது வயதில் 1943 ல் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு..தேச விடுதலைக்காகவும், உழைக்கும் மக்கள் விடுதலைக்காகவும் போராடினார், நாடு விடுதலையான பிறகு கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது.. தோழர் அவர்கள் 1949 ல் கைது செய்யப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்குள்ளானார். 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். சாதிய ஒடுக்குமுறைக்கெதிராகத் தொடர்ந்த போராடிக் கொண்டிருக்கிறார். .கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டில்.. தோழர் நல்லகண்ணு அவர்களின் பிறந்தநாளில் உறுதி ஏற்போம்..பாசிச ஆட்சியை வீழ்த்தி..வர்க்க போராட்டத்தைத் தீவிரப்படுத்தி.. இடதுசாரிகள் இணைந்து இந்தியாவில் புதிய ஜனநாயக புரட்சியை நடத்திக் காட்டுவோம்” என்று கூறினார்.