பெண்கள் மீது தொடரும் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்;
பெண்கள் புழங்கும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு வேண்டும்!
சென்னை, அண்ணா பல்கலைக் கழக மாணவி வன்கொடுமைக்கு, எதிராக, தமிழ்நாடு முழுவதும் அகில இந்திய அளவிலும் கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்துள்ளன. பெண்கள் பாதுகாப்பு, சுதந்திரம் தொடர்பான குரல்கள், கோரிக்கைகள் மீண்டும் எழுந்துள்ளன. அரசுக்கு எதிராக உருவாகியுள்ள கோபத்தை எதிர்கொள்ள, பாலியல் வன்கொடுமைக்கு மரணதண்டனை என்ற சட்டத்தை திமுக அரசு கொண்டு வந்துள்ளது.
உலகம் முழுவதும் மரணதண்டனைக்கு எதிராக இயக்கம் வலுப்பெற்று வருகிறது. அதில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது. மரணதண்டனை, பாலியல் வன்கொடுமையை ஒழித்துவிடும் என்று கூறுவது மேம்போக்கான அணுகுமுறை. மாறாக ஆணாதிக்க சிந்தனை, பெண் வெறுப்பு, ஜமீன்தார் மனோபாவம், நுகர்வுப் பண்பாடு இவற்றுக்கு எதிரான கடும் யுத்தம் தேவைப்படுகிறது. ‘பெரியார் கைத்தடியை’ ஆகப் பெரிய பரிசாக மதிக்கும் முதலமைச்சர் அந்த கைத்தடியை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சமூக, அரசியல், பண்பாட்டுச் சூழலை ஏற்படுத்திட அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை இல்லாத மாநிலம் தமிழ்நாடு என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
அண்மையில், பாஜக மேனாள் மக்களவை உறுப்பினர் ரமேஷ் பிதுரி, சாலைக்கு பிரியங்காவின் கன்னத்தை ஒப்பிட்டும் தில்லி அம்ஆத்மி பெண் முதல்வரை இழிவுபடுத்தியும் பேசியுள்ளார். மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் ஆணாதிக்க, பெண்விரோத, பெண் வெறுப்பு சுற்றுச் சூழல் வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் சாதி ஆணவக் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் வளர்ந்து வருகின்றன. இதற்கெதிராக பெரியாரின் பெண்விடுதலைக் கருத்துகளை முனைப்பாக அரசும் சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் முன்னெடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரணதண்டனை தீர்வல்ல; பெண்களுக்கு அச்சமற்ற சுதந்திரமே தீர்வு!
திமுக அரசு,
● அண்ணா பல்கலைக் கழக சம்பவத்தில் குற்றவாளிகள் எந்த வகையிலும் தப்பிக்க விடக் கூடாது. பல்கலைக் கழகத்தையும் பொறுப்பாக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
● பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பயங்கரம், சிறீமதி மர்ம மரணம் உள்ளிட்ட, நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.
● ஈஷா யோகா மய்யத்தின் மீதான வழக்குகள் அனைத்தையும் விசாரித்து குற்றவாளிகள் எவராயினும் கடும் தண்டனை வழங்கிட வேண்டும்.
● வர்மா கமிட்டி பரிந்துரைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். அனைத்து நிறுவனங்களிலும் உள்ளக புகார், விசாரணை அமைப்புகளை அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஏற்படுத்திட வேண்டும்.
● இடதுசாரி, பெண்ணிய அமைப்புகள், கல்வியாளர்கள், பெண்விடுதலை ஆர்வலர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆகியோரை உள்ளடக்கிய உயர்நிலைக் குழுவை ஏற்படுத்தி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.
● அரசியல் கட்சிகளுக்குள்ளும் அரசு, அரசு சாரா நிறுவனங்கள் அனைத்திலும் பாலின கூருணர்வை ஏற்படுத்திட வேண்டும்; பாலின நீதியை, சமத்துவத்தை ஒரு சமூக அறிவியலாக வளர்க்கும் விதத்தில் பெரியாரின் பெண்சமத்துவ, பெண்விடுதலைக் கருத்துகளை ஒரு சமூக உணர்வாக வளர்க்கும் விதமாக இடைவிடாத கருத்துப் பரப்புரையை அரசு, கல்விநிறுவனங்கள் தொடர்ந்து நடத்திட வேண்டும்.
● ஏடுகளும் தொலைக் காட்சி, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இதர ஊடகங்களும் பெண்களையே குற்றவாளியாக்கும்தரமற்ற செய்திகள் வெளியிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து ஊடகங்களும் பெண் மதிப்பை, கண்ணியத்தை உயர்த்திப் பிடிக்கும் பாலியல் கூருணர்வை உறுதி செய்ய வேண்டும்.
● பெண் வன்கொடுமை செயல்கள் நடக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் உரிமங்களை ரத்து செய்ய அரசு தயங்கக் கூடாது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)