கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு:  உயர்நீதிமன்ற கருத்துக்கள் பேரதிர்ச்சி அளிக்கிறது; நீதிமன்றத்தின் மீதான மக்கள் நம்பிக்கையை தகர்ப்பதாக உள்ளது.

பத்திரிகை செய்தி

கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு:

உயர்நீதிமன்ற கருத்துக்கள் பேரதிர்ச்சி அளிக்கிறது; நீதிமன்றத்தின் மீதான மக்கள் நம்பிக்கையை தகர்ப்பதாக உள்ளது.

கனியாமூர் மாணவி மர்ம மரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துகள் அந்த மாணவியின் மரணத்துக்கு இணையான பேரதிர்ச்சியை தருகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு

ள்ளவர்களின் பிணை மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி

யின் கருத்துகள் நீதிமன்ற நடைமுறை மரபுகளையே சிதைப்பதாக உள்ளது. கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த அய்வரும் பொய்யான குற்றச்சாட்டுகளின் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்! இந்த மரணத்தில் கொலையோ, பாலியல் வன்முறையோ நடக்கவில்லை என்று கூறியுள்ளார். 'இது பாடம் படிப்பதில் ஏற்பட்ட மன உளைச்சலால் நடந்த தற்கொலைதான்' என வழக்கு விசாரணை முடியுமுன்பே தீர்ப்பு எழுதியுள்ளார். இது பேரதிர்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமல்ல, நடந்துவரும் விசாரணைகளை தடுத்து நிறுத்துவதாக உள்ளது. அல்லது உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு ஏற்ப விசாரணை முடிவுகள் இருக்க வேண்டுமென கட்டளை இடுவது போல் இருக்கிறது. தற்கொலை குறிப்பு எனச் சொல்லப்படும் கடிதத்தில் உள்ள கையெழுத்து தனது மகளின் கையெழுத்தே இல்லை என்று மாணவியின் தாய் கூறிவரும் நிலையில், அது அந்த மாணவியின் கடிதம்தான் என நீதிபதி கூறுவது விசாரணையின் அடித்தளத்தையே ஆட்டம் காணச்செய்கிற வேலையாகும். இந்த வழக்கில், தொடக்கம் முதலே உயர்நீதிமன்றம் காட்டிவரும் அணுகுமுறை பாதிக்கப்பட்ட வர்கள் பக்கம் நின்று அணுகுவதற்கு மாறாகவும், நீதிமன்ற அறநெறிகள்படி அணுகுவதற்கு மாறாகவுமே உள்ளன. உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்துகளை படிக்கும் எவரும், அவை மாணவியின் மரணத்துக்கு வருத்தத்தை பதிவு செய்திருந்த போதிலும்கூட, மரணமுற்ற மாணவியையே குற்றம் சுமத்து வதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அந்தப் பள்ளியின் கல்விச் சூழல் குறித்தோ, அனுமதியின்றி விடுதி நடத்தியது குறித்தோ கவலைப் பட்டதாக தெரியவில்லை. மேலும், மாணவியின் பெற்றோரிடம் முதலமைச்சர் கூறிய வாக்குறுதி யின் அடிப்படையில் நீதி கிடைக்குமென நம்பிக்கொண்டிருக்கும் அந்த மாணவியின் தாயினது நம்பிக்கையை தகர்த்து தரைமட்டமாக்குவதுபோலிருக்கிறது. நீதிநடைமுறையின்பால் சற்றும் கூருணர்ச்சியற்ற, நீதிபதியின் இந்தக் கருத்துகள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) தனது ஆழ்ந்த வேதனையை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாடு அரசு, குற்றவாளிகளின் பிணையை ரத்து செய்ய மேல்முறையீடு செய்யவேண்டும். நீதிபதியின் கருத்துகள் 'குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள், நீதி நிலைநாட்டப்படும்' என்று மாணவியின் பெற்றோரிடம் முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை கேலி செய்வதாகவும் உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்வதோடு நீதி விசாரணைக்கு ஊறு ஏற்படுத்தும் இத்தகைய கருத்துகளை வெளியிடுவதை தவிர்க்குமாறும் வலியுறுத்திட வேண்டும். உயர்நீதிமன்றத்தின் வேறு ஒரு அமர்வு, வழக்கை நடத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

மாணவியின் மரணத்துக்கு நீதி கிடைத்திடவும் சக்தி இன்டர் நேஷனல் பள்ளியை அரசே ஏற்று நடத்திடவும் குற்றக்கும்பல்களிடமிருந்து கல்வியை விடுவிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தும் பரப்புரை இயக்கத்தை கல்வியாளர்கள், வழக்கறிஞர் சமூகம், முற்போக்கு, இடது, ஜனநாயக சக்திகள் முன்னெடுக்க வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) வேண்டிக் கேட்டுக் கொள்கிறது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 12 அன்று கள்ளக்குரிச்சியில் நடைபெற உள்ள கட்சியின் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவுதர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது.

என் கே. நடராசன், மாநிலச் செயலாளர்

30-08-2022, சென்னை-48