Press Statement 24 Oct CPIML

நீதிக்கான மக்கள் இயக்கம் வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் சமூகநீதி எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணிக்க ஒரு குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது.
சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்கள் இன்னும் சமூகநீதி மறுக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். ஆனால், பெண்கள் மத்தியிலிருந்து பிரதிநிதித்துவம் இல்லாமலிருப்பது பெரும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது. மேலும், சமூகநீதி கண்காணிப்புக்குழு சமூகநீதி அக்கறை கொண்ட, கறைபடாதவர்களைக் கொண்டிருப்பது மிகவும் அவசியமானது. 

திரு சுப.வீரபாண்டியன் தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கும் குழுவில் மேனாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி திரு கே.தனவேல் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.  திரு தனவேல், 1999 ல் நடந்த தாமிரபரணி படுகொலை சம்பவத்தின் போது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்தவர். இவரது தவறான அணுகுமுறையே அத்தகைய பேரதிர்ச்சி சம்பவத்துக்கு காரணமாக இருந்தது. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கு தனிச்செயலாளராக இருந்தவர். சமீபத்தில், கடலூர் நீதிமன்றம் கண்ணகி-முருகேசன் கொலைவழக்கில் பாராட்டத்தக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த வழக்கைத் தடம் புரளச்செய்ய முயன்றவர் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உள்ளது. 
இத்தகையவர் சமூகநீதி கண்காணிப்புக்குழுவில் இடம் பெறுவது குழுவின் தகுதி மீதே கேள்வி எழுப்புவதாகவும் நோக்கத்தை அடையமுடியுமா என்ற அய்யத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துவிடும்.

எனவே, இந்தக்குழுவில் திரு தனவேலை நீக்கியும், கூடுதல் பெண்கள் பிரதிநிதித்துவம் கொண்டதாகவும் மாற்றியமைக்குமாறு நீதிக்கான மக்கள் இயக்கம் கோருகிறது.

மேலும், குழுவின் சமூகநீதி வரையறையை விரிவுபடுத்தி நிலம், வேலைவாய்ப்பு, வாழிடத்தை உறுதிசெய்யும் பொருளாதார நீதியும் வழிபாடு, சாதிமறுப்பு திருமணம் உள்ளிட்டு சமூக வாழ்வில் சம நீதியையும் பரிந்துரைக்கும் குழுவாக அறிவித்திட வேண்டும். அரசின் நோக்கத்தை எட்டுவதாயின் இந்த மாற்றங்களை செய்திட வேண்டும்; இல்லையேல் இது "சமூக நீதி பெயரால் செய்யப்படும் அரசியலாக மட்டுமே பார்க்கப்படும்" என நீதிக்கான மக்கள் இயக்கம் அஞ்சுகிறது. இந்த மாற்றங்களை உடனடியாக செய்து அறிவிக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறது.

நீதிக்கான மக்கள் இயக்கம்
தமிழ்நாடு, 24-10-2021