Release Muslims in prison

தமிழ்நாட்டில், 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை:

இசுலாமியரும் எழுவரும் இடம்பெற வேண்டும்! 

சிபிஐ-எம்எல் வேண்டுகோள் !

''அண்ணா  பிறந்த நாளையொட்டி, வருகிற 2022-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி தமிழக சிறைகளில் நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகள் 700 பேர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அரசின் அறிவிப்பு வரவேற்புக்குரியது. ஆனால் நீண்ட காலமாக சிறைக்கொடுமையை அனுபவித்து வரும் இஸ்லாமியர்களும் எழுவரும் அதில் இல்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.
700பேர் விடுதலைக்கான அரசாணை 488யைத் தமிழ்நாடு அரசு 
இந்த நவம்பர் 15ல்,
 வெளியிட்டுள்ளது. 10 ஆண்டுகளை சிறையில் கழித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் பரிசீலனை செய்து விடுதலை செய்வது
என முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால், 38 இசுலாமியர் ஆயுள்தண்டனை சிறைவாசிகள், சராசரியாக
23 முதல் 26 ஆண்டுகளாக 
கோவை, சென்னை புழல், பாளையங்கோட்டை சிறைகளில் துன்புற்று வருகின்றனர்; இவர்கள் இந்த பட்டியலில் இல்லை. இது அதிர்ச்சியூட்டும் ஆச்சரியமாக இருக்கிறது.
இது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்திற்கும், இந்திய நீதிபரிபாலன நெறிகளுக்கும் இயற்கைநீதி கோட்பாடுகளுக்கும் எதிரானதாகும். 

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161  ஆளுநர் அதிகாரங்கள் 
(மாநில அரசுக்கு அளிக்கப்படும் 
அதிகாரங்கள்)
என்பதன் வழியாக,  கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பளிக்கிறது. அதேபோல், CRPC இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 433 A ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள் என வரையறுக்கிறது.  சிறைத்தண்டனையின் நோக்கம், சிறையிலேயே சாகும்வரை குற்றவாளிகளை தண்டிப்பது அல்ல ;
சமூகத்துடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்காக
திருத்தி மாற்றியமைப்பது தான். இதற்காகவே அரசுக்கு இந்த சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

அரசாணை 488 இசுலாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு வழி வகுக்கவில்லை !

கடந்த அதிமுக எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் தயாரித்த அதே அரசாணையைத்தான், தற்போதைய திமுக அரசாங்கமும் வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை 17 வகையான குற்றங்களை பட்டியலிட்டு, அது தொடர்பானவர்களுக்கு 
விடுதலை இல்லை என்கிறது. உதாரணமாக "வனச் சட்டம் மீறியவர்கள், பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், அரசுக்கு எதிராக செயல்பட்டவர்கள், தப்பிக்க முயன்றவர்கள்,
சாதி,மத மோதல்களில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட  குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள்'' என்கிறது. இந்த விதிமுறை சமூகநீதியை புறக்கணித்த பாரபட்சமான அணுகுமுறை. இந்த அணுகுமுறைதான் இசுலாமிய சிறைவாசிகள் விடுதலை பெறுவதை தடுக்கிறது. 26 ஆண்டு சிறைக்கொடுமையில் வாழ்ந்தவர்களை இன்னும் குற்றவாளிகளாகவே கருதுவது தவறானது.
 
முந்தைய அதிமுக ஆட்சியின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவர் கொண்டு வந்த அரசாணைக்கு விரோதமாக, தருமபுரியில் பஸ்களை எரித்து 3 வேளாண் கல்லூரி மாணவிகளைக் கொன்ற 3 அதிமுக பிரமுகர்களை 12 ஆண்டுகளே கழிந்த நிலையில், 2018ல் முன்கூட்டியே விடுதலை செய்தார்.

அதேபோல, உள்ளாட்சி தேர்தலில் நின்றதற்காக
மதுரை- மேலவளவில் 6 தலித்துகளை வெட்டிக் கொன்ற, ஆயுள் தண்டனை பெற்ற 12 சாதியாதிக்க பேர்வழிகளை ஆயுள் தண்டனை முடிவதற்கு முன்பாகவே 2019 ல், எடப்பாடி பழனிசாமி அரசாங்கம்  விடுதலை செய்தது. இந்த இரண்டு வழக்குகளிலும் அரசியல் சட்டப்பிரிவு 161 அய் அதிமுக அரசு பயன்படுத்திக் கொண்டது. அப்போதைய அதிமுக அரசும் 
இசுலாமியர் சிறைவாசிகளை விடுதலை செய்யவில்லை. கடந்த ஆட்சியாளர்கள் பாஜக பினாமி ஆட்சியாளர்களாக இருந்ததால் இசுலாமியர் சிறைவாசிகள் விடுதலையை புறக்கணித்து விட்டனர். தற்போதுள்ள திமுக அரசாங்கத்துக்கு ஏன் தயக்கம்? பாஜக இதை அரசியலாக்கக் கூடும் என்று திமுக அரசு அஞ்சுகிறதோ என்ற கேள்வி எழுகிறது. இதே அணுகுமுறைதான் எழுவர் விடுதலையிலும் வெளிப்படுகிறது. இத்தகைய அரசியல் அணுகுமுறை இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்கு எதிரானது.


தொழில்நுட்ப சாக்குபோக்குகளையும் தவிர்க்க வேண்டும்!

சமீபத்திய ராஜ்குமார் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது. "இத்தகைய விவகாரங்களில் ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. மாநில அரசே முடிவு செய்து விடுதலை செய்யலாம். " என அறிவித்துள்ளது. எனவே,
இசுலாமியர் சிறைவாசிகள்  விஷயத்தில் திமுக அரசுக்கு அரசியல் உறுதி வேண்டும். 
அனைத்து ஆயுள் சிறைவாசிகளும் திருந்தி வாழ்வதற்கான வாய்ப்புகள் வழங்குவதற்கு ஏற்ப, அரசாணை 488 உடனே  திருத்தப்பட வேண்டும். 

இசுலாமியர் ஆயுள் சிறைவாசிகள் விஷயத்தில், முன்கூட்டிய விடுதலை என்ற கேள்வியும் கூட எழவில்லை. இவர்கள், சராசரியாக 23 முதல் 26 ஆண்டுகள் வரை சிறைக்குள் இருந்து வருகிறார்கள். எனவே, இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்படியே கூட, இவர்கள் 14 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டிருக்க முடியும்.
எனவே மேற்கூறிய அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு திமுக அரசாங்கமானது, உடனடியாக அரசாணை 488 யை திருத்தியமைக்க வேண்டும். 20 ஆண்டுகளை சிறையில் கழித்தவர்கள், விளிம்புநிலைப் பிரிவினர், பெண்கள், இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை பிரிவினர்களை விடுவிக்கும் வகையில் அரசாணை திருத்தப்பட வேண்டும். இதன்மூலம் 38 இசுலாமிய சிறைவாசிகள், 32 ஆண்டுகளாக சிறையில் வாடும் வீரப்பன் சகோதரர்கள் மூவர், ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று 30 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ள எழுவர் ஆகியோரும் விடுதலை பெறும் நீதியை ஆட்சியிலுள்ள திமுக ஆட்சி வழங்கிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) வலியுறுத்துகிறது.

- இகக(மாலெ) விடுதலை.