Education Denied because of Hijab

AISA - RYA

  • ஹிஜாப் அணிந்ததால் கல்வி மறுக்கப்பட்ட, கர்நாடக பியூ கல்லூரி (மேல்நிலைக் கல்வி) மாணவிகளுக்கு துணை நிற்போம்!
  • மதவெறி வெறுப்பு மற்றும் இஸ்லாமிய பூச்சாண்டி காட்டுவதை கல்வி நிலையங்களில் அனுமதியோம்!
  • ஆடை ஒழுங்கு” என்ற பெயரில் பெண்களை அடக்க முற்படும் ஆணாதிக்க மனப்பான்மையை எதிர்த்திடுவோம்!

பல்கலைக்கழகங்களில் பாரபட்சம் காட்டப்படுவதால், விளிம்புநிலை மாணவர்களின்  இடைநிற்றலும் தற்கொலையும் இதுவரை கண்டிராத அளவு அதிகரித்து வருவதை நாம் கண்டு வருகிறோம். இப்போது, கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டம், அனைவருக்குமான கல்வி, எளிதில் பெறக்கூடிய கல்வி மீதான தாக்குதல் கூடமாக மாறியுள்ளது.

கடந்த மூன்று வாரங்களாக, உடுப்பி அரசு பெண்கள் புதுமுக கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த காரணத்திற்காக 6 முஸ்லிம் சிறுமிகளுக்கு பாரபட்சமாக, ஒருதலைப்பட்சமாக, கல்வி மறுக்கப்பட்டிருக்கிறது.

2014லிருந்து சமூகத்தில் தூபம் போட்டு வளர்க்கப்படும் இஸ்லாமிய பூச்சாண்டியை (இஸ்லாமிய அச்சுறுத்தல், வெறுப்பு என்பதை) கல்லூரி நிர்வாகம் ஒழுக்கம், ”ஆடை கட்டுப்பாடு” என்ற பெயரில் வெளிக்காட்டி வருகிறது.

அவர்கள் வகுப்புக்கு வரவில்லை என்று காரணம் காட்டி கல்லூரி நிர்வாகம் அவர்களை திரும்பத் திரும்ப துன்புறுத்தி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், கடந்த 15 நாட்களாக, மாணவர்கள் தாங்களாகவே கல்லூரிக்கு வராமல் இருந்து விட்டதாக கூறி கடிதம் தருமாறும் அவர்களை மிரட்டி வருகிறது.

கல்லூரி நிர்வாகத்தின் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கான காரணத்தை பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, பதிலளித்த நிர்வாகம், "கல்லூரியில் பல ஏழை மாணவர்கள் படிக்கின்றனர். அனைவரும் ஒரே மாதிரியாக கல்லூரியில் காணப்பட வேண்டும் என்ற காரணத்தினால் தான் சீருடை அறிமுகப் படுத்தப்பட்டது" என்றார்கள். மாணவர்களின் உடை பற்றிய தனிப்பட்ட விருப்பத்தை, அனைவரும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்ற கருதுகோளுக்கு முரணாக கருதுவது என்பது, கல்விக் கூடத்தை பெண் மாணவர்களுக்குத் தோதுவாக இல்லாததாக, கல்வி கற்கப் பொருத்தமற்றதாக, ஆக்கி விடுகிறது. கல்விக் கூடத்தில், ஆணாதிக்க மனோபாவத்தோடு பெண் மாணவர்களை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், அந்த மாணவர்களை அவமானப்படுத்துவது, படிப்பை பாதியில் விட்டுவிட நிர்ப்பந்திப்பது போன்றவை கல்லூரி நிர்வாகம் கடைபிடிக்கும் இஸ்லாமிய பூச்சாண்டியாக, அச்சுறுத்தலாக இருக்கிறது. இது இந்திய நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை அசிங்கப்படுத்துவதாக இருக்கிறது.

மாணவர்கள் ஹிஜாபை கழட்ட வேண்டும் என்பதை கல்விக்கான முன்நிபந்தனையாக்குவது என்பது தங்கள் விருப்பப்படி எந்த ஒரு மதத்தையும் தழுவுவது, எந்த ஒரு ஆடையையும் அணிவது என்ற பெண்கள் சுதந்தரத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, அது அவர்களின் கல்வி கற்கும் உரிமை மீதான நேரடி தாக்குதலும் ஆகும்.

பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும், எந்த மதத்தை பின்பற்ற வேண்டும், அந்த மதத்தை எந்த வழிமுறைப்படி பின்பற்ற வேண்டும் என்று கட்டுப்படுத்த எடுக்கும் எந்த முயற்சியும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

பி யு கல்லூரி நிர்வாகத்தின் பெண்கள் விரோத, இஸ்லாமிய பூச்சாண்டி நடவடிக்கை கண்டனத்துக்குரியது.

கல்விக் கூடங்கள் உடை, மதம், சாதி, மொழி ஆகிய தனிப்பட்ட தேர்வுகள் மீது எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாத இடங்களாக இருக்க வேண்டும்.

பி யு கல்லூரி நிர்வாகம் இப்படி பாரபட்சம் காட்டியதற்காக பெண்களிடமும் அவர்கள் குடும்பத்தாரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

பி யு கல்லூரி நிர்வாகம் தங்களது சீருடை கொள்கையை திரும்பப் பெற்று 6 பெண்களையும் உடனடியாக வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டும்.

 

AISA - RYA

அகில இந்திய மாணவர் கழகம்

புரட்சிகர இளைஞர் கழகம்