மாநாட்டுத் தலைமை தோழரே, பிரதிநிதித் தோழர்களே, பார்வையாளர்களே, இந்தியாவில் உள்ள பல்வேறு இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களே, வெளிநாட்டில் இருந்து வந்துள்ள சகோதரத்துவ அமைப்புகளின் தலைவர்களே, ஊடக நண்பர்களே, இங்கே கூடியிருக்கும் பாட்னாவின் குடிமக்களே, இகக(மாலெ)யின் 11வது மாநாட்டிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாநாட்டில் 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து, ஆயிரத்து எழுநூறுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் கலந்து கொண்டுள்ளதால், இது நமது கட்சி வரலாற்றில் மிகப்பெரிய காங்கிரஸ் ஆகும். இந்த காங்கிரசுக்காக, பாட்னாவை வினோத் மிஸ்ரா நகர் என்றும், இந்த அரங்கத்திற்கு ராம்நரேஷ் ராம் அரங்கம் என்றும் மறுபெயரிட்டு, நமது இரு பெரும் தலைவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துகிறோம். மார்ச் 2018-ல் பஞ்சாபின் மான்சாவில் நடைபெற்ற நமது 10வது கட்சி மாநாட்டிற்குப் பிறகு நாம் இழந்த மூன்று மத்தியக் கமிட்டி உறுப்பினர்களான அன்புத் தோழர்கள் டிபி.பக்ஷி, பி.பி.பாண்டே, என்.கே.நடராஜன் நினைவுக்கு இந்த மேடை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காங்கிரசை ஒழுங்கமைப்பதில் பீகாரில் உள்ள நீதியை விரும்பும் முற்போக்கு மக்கள் அளித்த அன்பான ஆதரவால் நாங்கள் பெரிதும் ஊக்க மடைகிறோம். காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 'ஜனநாயகம் காப்போம்; இந்தியாவைக் காப்போம்' என்ற பேரணியின் வெற்றியில் இது நன்றாக வெளிப்பட்டுள்ளது. இந்த உத்வேகமிக்க எதிர்வினையாற்றிய பீகார் மக்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தக் காங்கிரசின் தொடக்க அமர்வில், சக இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களான இகக(மா) தோழர் சலீம், இகக தோழர் பல்லப் சென்குப்தா, பு.சோ.க தோழர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்டு பிளாக் தோழர் ஜி. தேவராஜன், மார்க்சிஸ்ட் ஒருங்கி ணைப்புக் குழு தோழர் ஹல்தர் மஹதோ, மகாராஷ்டிராவின் லால் நிஷான் கட்சியைச் சேர்ந்த தோழர் பீம்ராவ் பன்சோத், இந்திய புரட்சிகர மார்க்சிய கட்சியைச் சேர்ந்த தோழர் மங்கத்ராம் பாஸ்லா, மகாராஷ்டிராவின் சத்யசோதக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் கிஷோர் தாம்லே ஆகிய தலைவர்கள் இங்கு இருப்பது எங்களைப் பெரிதும் கவுரவிக்கிறது. நீங்கள் இங்கு இருப்பது எங்களுக்கு பெரும் ஆதரவாகும். மேலும், தற்போதுள்ள நம்முடைய ஒற்றுமையின் உணர்வையும் ஒத்துழைப்பின் உறவுகளையும் வலுப்படுத்த இது நிச்சயமாக உதவும்.

நேபாளம், வங்கதேசம் ஆகிய நமது அண்டை நாடுகளிலிருந்தும் மற்றும் ஆஸ்திரேலியா, வெனிசுலா போன்ற தொலைதூர நாடுகளில் இருந்தும் முற்போக்கான கட்சிகள், அமைப்புகள் வெளிப் படுத்தும் சர்வதேச ஒருமைப்பாட்டால் நாங்கள் உத்வேகம் பெற்றுள்ளோம். விசா பிரச்சனையால் இலங்கை, பாகிஸ்தான், ஜெர்மனி ஆகிய நாடுகளி லிருந்து தோழர்கள் வரமுடியவில்லை. ஆனாலும், உலகத்தின் அனைத்து மூலைகளிலிருந்தும் ஒருமைப்பாட்டுக்கான செய்திகள் வந்துள்ளன; வந்துகொண்டே இருக்கின்றன. நமது காங்கிரசை வாழ்த்துவதற்கு பாட்னாவிற்கு வந்திருக்கும் நமது சகோதர விருந்தினர்களுக்கும், ஒருமைப் பாட்டுக்கான செய்திகளை அனுப்பியுள்ள அனைத்து தோழர்களுக்கும் நாம் மிகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம். அழிந்துவரும் இன்றைய முதலாளித்துவத்தால் சுமத்தப்பட்டுள்ள உழைக்கும் மக்கள் மீது திணிக்கப்படும் சிக்கன நடவடிக்கை; பாசிசத்தின், சர்வாதிகாரத்தின் புதுப்பிக்கப்பட்ட எழுச்சி; சிறிய, பலவீனமான நாடுகளின் இறையாண்மை மீதான தாக்குதல்கள், ஆக்கிரமிப்புப் போர்கள்; அல்லது நமது பூமியின் இருத்தலுக்கே ஆபத்தை விளைவிக்கும் காலநிலை நெருக்கடி போன்ற எதுவாகட்டும் பல்வகை நெருக்கடிகளிலிருந்தும் உலகை விடுவிப்பதற்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்த, சர்வதேச ஒருமைப்பாடு மற்றும் ஒத்துழைப்பிற்கான உறவுகளை வலுப்படுத்த, நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். 

தோழர்களே, இந்த தொடக்க அமர்வை நாம் பாட்னாவில் நடத்திக் கொண்டு இருக்கும் போது, திரிபுராவில் அடுத்த சட்டமன்றத்தையும் அரசாங்கத் தையும் தேர்ந்தெடுக்க மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஜனநாயகத்தின் மீது, எதிர்க்கட்சி அலுவலகங்கள், செயல்வீரர்கள், ஆதரவாளர்கள் மீது, தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் கோரிக்கைகளை எழுப்பும் எதிர்ப்புக் குரல் கொடுக்கும் மக்களின் உரிமைகள் மீது, ஒவ்வொரு நாளும் தாக்குதல்களை திரிபுரா சந்தித்து வருகிறது. திரிபுரா மக்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களித்து, பாஜக ஏற்படுத்திய இந்த பயங்கரத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவார்கள் என நம்புகிறோம்.

மோடி அரசாங்கத்தின் பாசிசத் தன்மையும் முழுமையான தோல்வியும் துரோகமும் அதிகரித்த அளவில் அம்பலமாகி வருவதால், கடும் விரக்தியில் உள்ள இந்த ஆட்சி, மேலதிக வெட்கக்கேடான பொய்களையும் மிரட்டல்களையும் நாடுகிறது. இந்தியாவின் சமூக ஊடகத் தளங்களில் பிபிசி ஒளிபரப்பிய, மோடி கேள்வி என்ற ஆவணப் படத்திலிருந்து எந்தப் பகுதிகளையும் ஒலிபரப்புவதைத் தடுக்க, இந்த அரசாங்கம், இந்தியாவின் கொடூரமான தகவல் தொழில் நுட்பச் சட்டத்தை, அவசரகால அதிகாரங்களை முதலில் பயன்படுத்தியது. பிறகு, டெல்லியிலும் மும்பையிலும் உள்ள பிபிசி அலுவலகங்கள் மீது வருமான வரி சோதனை களைக் கட்டவிழ்த்து விட்டது. பங்குச் சந்தை முறைகேடுகள், கணக்குகளில் மோசடி, பணம் கையாடல் செய்தல் என்று அதானி குழும குற்றங்களை வெளிப்படுத்தி யதன் மூலம், அதானியின் பங்குகளின் விலைகளில் முன்னெப்போதும் இல்லாத சரிவு ஏற்பட்டது. அதானி சொத்தின் நிகர மதிப்பை பெருமளவுக்குக் குறைத்து, அதானியை உலக பில்லியனர்கள் பட்டியலில் மூன்றாவது அதிபணக்கார இடத்தில் இருந்து முதல் பத்து டங்களில் பின்னுக்குத் தள்ளியது, ஹிண்டன்பர்க் அறிக்கை. இந்த அறிக்கை குறித்து ஒன்றிய அரசாங்கம் வெளிப் படையாக மௌனம் சாதித்து, இந்தியாவின் நிதிக் கட்டுப்பாட்டு அமைப்பின் தோல்வி, மோடி-அதானி கள்ளக்கூட்டின் பிணைப்பு குறித்து எந்த விசாரணையும் செய்ய மறுத்தது. அதானி பற்றிய கேள்விக்கு பதில் சொல்லாமல் மலிவான உணவு, மானிய விலையில் எரிவாயு உருளைகள், நல்ல வீடுகள், உதவித்தொகை ஆகியவற்றை ஏழைகளுக்கு அரசாங்கம் வழங்குவதாகச் சொல்லி, மோடி வெட்கக்கேடான வகையில், தைரியமாக, மக்களை அமைதியுடன் இருக்கும் படி நாடாளுமன்றத்தில் கேட்டுக் கொண்டார்.பிஜேபி தற்போது செய்து கொண்டிருப்பது போல, பிபிசி ஆவணப்படத்தை காலனித்துவ சதி என்றும் அதானிஅம்பலப்படுத்தப்பட்டதை இந்தியா மீதான தாக்குதல்என்றும் சித்தரிப்பது, தேசியவாதத்தை அப்பட்டமான விசமத்தனமிக்க கேலிக்கூத்தாக ஆக்கியுள்ளது.சமீபத்திய ஆக்ஸ்பாம் அறிக்கை, இந்தியாவில் பெருகிவரும் பொருளாதார சமத்துவமின்மை குறித்து மீண்டும் ஒருமுறை கவனத்தை ஈர்த்துள்ளது. இது, பெரும்பணக்காரர்கள் மீது செல்வம் மற்றும் பரம்பரைச் சொத்துக்கான வரிகளை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியத்தை விளக்குகிறது. இருப்பினும், பெரும் பணக்காரர்களுக்கான கூடுதல் வரிச் சலுகைகளை இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அரசாங்கம் அறிவித்த அதே வேளையில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், சமூகப் பாதுகாப்பு, பொதுமக்களுக்கான பிற சேவைகள், நலத்திட்ட செலவுகளுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துள்ளது. 

சாமானிய மக்களின் மோசமான வாழ்நிலை மைகள், பொருளாதாரத் துறையில் அரசாங்கத்தின் மகத்தான தோல்வி ஆகியவற்றுக்கு எதிராக மக்களின் கோபம் வளர்ந்து வருகிறது. அதே வேளையில், வெறுப்பினை பரப்புதல், வகுப்புவாத துருவச் சேர்க்கையை கூர்மையாக்கி, முஸ்லிம் சமூகத்தினரை குறிவைத்தல், முற்போக்கு அறிவாளிகள், மாற்றுக்கருத்துக்கான அனைத்து குரல்கள், நீதி மற்றும் சமூக மாற்றத்துக்காக போராடும் சமூகக் குழுக்களை தேச விரோதிகளாக சித்தரித்தல் ஆகியவற்றின் மூலம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும் சமூக, பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி ஒரு அதிதீவிர தேசியவாத, பாசிச வெறியைத் தூண்டுவதற்கும் மோடி அரசாங்கம் விரும்பு கிறது. மின்சாரம், கழிப்பறைகள், குடிநீர் வசதி ஆகியவை உறுதிசெய்யப்பட்ட அனைவருக்குமான வீடுகள் பற்றிய அனைத்து உயரிய பேச்சுக்களும், வெறியாட்டம் போடும் புல்டோசர்களால் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டன. ஆன்மிகக் குருக்கள் போல் வேஷம் போடும் நச்சுப் பிரச்சாரகர்களால் மதக் கூட்டங்கள் என்று அழைக்கப்படும் மேடைகளில் இருந்து இனப்படு கொலைக்கான அழைப்புகள் பகிரங்கமாக வெளியிடப்படுகின்றன.

சட்டமன்றம், நீதித்துறை ஆகியவற்றை வெளிப்படையாக நிர்பந்தித்து அடிபணியச் செய்தும் கவர்னர்கள், பிற நிறுவனங்களின் நியமிக்கப்பட்ட தலைவர்களின் அலுவலகங்களையும் பல்வேறு மத்திய நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் கருவிகளாகப் பயன்படுத்தி, மாநிலங்களை புகழ் பாடும் நகராட்சிகளாக மத்திய அரசு கீழ்நிலைப்படுத்துவதன் வழியாகவும் அரசமைப்புச் சட்ட ஆட்சிமுறையின் அனைத்து நிறுவனங்களும் நிர்வாகத்துறையின் மூலம் திட்டமிட்டு சீர்குலைக்கப்படுகின்றன. குடியுரிமைச் சட்டங்கள், இடஒதுக் கீட்டுக் கொள்கைகளில் மாற்றங்களைச் செய்தும் பல்வேறு பிரிவு மக்கள், குறிப்பாக சிறுபான்மை யினர், தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள், சிறு வணிகர்கள், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரின் உரிமைகளைப் பறிக்கப்படுகிறது. அரசமைப்புச் சட்டத்திற்குள்ளிருந்து கொண்டே, குழிபறித்து அது கீழ்நிலைப்படுத்தப்படுகிறது. 2023-ல் ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்றுக்கொண்ட தையும் மத்திய உள்துறை அமைச்சர் அறிவித்த படி, 2024 ஜனவரி 1ஆம் தேதிக்குள் ராமர் கோவில் திறப்பு விழாவையும் கொண்டாடும் முழக்கத்தில், ஜனநாயகம் மற்றும் பன்முகத் தன்மை மீதான தாக்குதல் முன்னெடுக்கப்படுகிறது.

வளர்ந்து வரும் இந்தப் பாசிச வெறியையும் தாக்குதலையும் எதிர்கொள்ள, இந்தியா முழுவதும் உள்ள போராடும் மக்களின் ஒற்றுமையை நாம் வலுப்படுத்த வேண்டும். உடைமையைப் பறித்தல், தனியார்மயமாக்கல் மற்றும் மதவாத, சாதிய, ஆணாதிக்க வன்முறைக்கு எதிராகவும் உணவு, குடியிருப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, பொதுச் சுகாதாரம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய உரிமைகள் அனைவருக்கும் கிடைத்திட பல வகையான ஆற்றல் மிகு போராட்டங்களைக் கட்டியெழுப்ப, கோவிட் 19 பெருந்தொற்றுக்கு முந்தைய குடியுரிமை சட்டத்திற்கு எதிரான இயக்கத்திலும் கோவிட் காலத்தின் கடுமையான நிலைமைகளை மீறி வளர்ந்த, பேரழிவு தரும் விவசாயச் சட்டங்களை விலக்கிக் கொள்ள மோடி அரசாங்கத்தை நிர்பந்தித்த விவசாயிகள் இயக்கத்திலும், நாம் கண்ட ஒற்றுமையையும், உணர்வுபூர்வமான உறுதிப்பாட்டையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பாசிசத்தைத் தோற்கடித்து, அரசியலமைப்பைக் காப்பாற்றி, இந்திய மக்களுக்கு ஒரு முற்போக்கான, வளமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமென்ற பரவலான அரசியல் விருப்பம், நாடு முழுவதும் உள்ள மக்களின் ஒன்றுபட்ட உறுதியின் அடித்தளத்தில் மட்டுமே வளர்ந்து வெற்றிபெறமுடியும்.

இந்த பரவலான வெகுமக்களின் உறுதிக்கு ஊக்கமளித்து, அதனை உயிர்ப்புடன் வைத்து, மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டாட்சி இந்தியா என்ற வேலைத் திட்டத்தை முன்கொண்டு செல்வதில், இடதுசாரிகளான நம் அனைவருக்கும் முக்கிய பங்கு உள்ளது. 2023 இன் நமது முயற்சிகள் 2024 இல் ஜனநாயகத்தின் தீர்மானகரமான வெற்றிக்கு வழி வகுக்கும். மதவாத வெறுப்பு, அரசு பயங்கரவாதம், சட்டத்திற்கு புறம்பான வன்முறை, கார்ப்பரேட் கொள்ளை, சூறையாடல் ஆகியவற்றைத் (திட்டமாகக்) கொண்டுள்ள பாசிச பாஜக-ஆர்எஸ்எஸ் ஆட்சியதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவது, நிச்சயமாக, 2023 இல் அடுத்தடுத்து நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்கள் அல்லது 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைத் தாண்டிய சவாலாகும். அது, அனைத்து முனைகளிலும் நீடித்த, முழுமையான மக்களின் எதிர்ப்புக்கு அழைப்பு விடுக்கிறது. பாசிசத்தை தோற்கடித்து, ஜனநாயகப் போரில் வெற்றி பெறுவதற்கு அனைத்து இடதுசாரி சக்திகளுக்கும் பரந்த எதிர்க் கட்சிகளுக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமையும் ஒத்துழைப்பும் தேவை. இந்த திசையில் நாம் செல்ல முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

நமது 11வது மாநாடு இன்றைய காலச் சூழலின் தேவைக்காக முழுமையாக அர்ப்பணிக் கப்பட்டுள்ளது. அரசியல் தீர்மானம் மற்றும் அமைப்பு அறிக்கை பற்றிய விவாதங்களைத் தவிர, நமது 11வது காங்கிரசின் நிகழ்ச்சி நிரலில் இரண்டு குறிப்பிட்ட தீர்மானங்கள் ஒன்று பாசிச எதிர்ப்பு போராட்டத்தின் நோக்கு நிலை, பணிகள், மற்றொன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பும், காலநிலை நீதிக்கான வேலைத் திட்டமும் உள்ளன. இந்திய இடதுசாரி இயக்கத்திலும், உலகளாவிய முற்போக்கு முகாமிலும் உள்ள அனைத்து தோழர்களுக்கும் உங்கள் ஆதரவுக்கும் ஒருமைப் பாட்டுக்கும் நாங்கள் மனபூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், வரும் நாட்களில் ஒருமைப்பாட்டுக்கும், ஒத்துழைப்புக்குமான நெருக்கமான உறவுகளை எதிர்நோக்குகிறோம். இந்திய அரசு அதிகாரத்தில் இருந்து மட்டுமல்ல, வலதுசாரி சக்திகளின் உலகளாவிய ஒருங்கிணைப்பு, இந்தியாவின் சமூக அமைப்பு, கலாச்சார பழக்கவழக்கங்கள் மற்றும் அரசியல் வரலாற்றின் அனைத்து பிற்போக்கு அம்சங்களிலிருந்தும் பாசிஸ்டுகள் தங்கள் வலிமையைப் பெறுகிறார்கள். இந்த பாசிச வடிவமைப்பை முறியடிக்க, இந்திய விடுதலை இயக்கத்தின் முற்போக்கான மரபை உயர்த்திப் பிடித்து, நீதிக்கும், சமத்துவத்திற்காகவும் நடைபெறும் பெரும் போர், பல்வகைப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு சக்திகளிடையே சர்வதேச ஒருமைப்பாடு உருவாக்கப் பட வேண்டும். உங்களின் ஆதரவுடன் 11வது மாநாடு எங்களை இந்தப் பயணத்தில் முன்னெடுத்துச் செல்லும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

உலகின் முற்போக்கு சக்திகளுக்கு மேலும் பலம் கிட்டட்டும்! போராடுவதற்காக நாம் ஒன்றுபடுவோம்! 

வெற்றிகிட்டும் வரை போராடுவோம்! 

இன்குலாப் ஜிந்தாபாத்! 

புரட்சி வாழ்க!