இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் 11வது காங்கிரஸ் (அகில இந்திய மாநாடு) 2023 பிப்ரவரி 15-20 தேதிகளில் நடைபெற்றது. பீகார் தலைநகர் பாட்னா செங்கொடிகளாலும் செம்பதாகைகளாலும் சிவப்பு மயமாக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 15 பாட்னாவின் காந்தி மைதானம் மக்கள் திரளால் தினறியது.

      பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட ஜனநாயகம் காப்போம்-இந்தியாவைக் காப்போம் பேரணி நடைபெற்றது. முதல் நாளில் இருந்தே மக்கள் சாரைசாரையாக வந்து கொண்டிருந்தார்கள். மறுநாள் பிப்ரவரி 16 அன்று மாநாட்டின் பொது அமர்வு காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இகக(மாலெ)விடுதலை கட்சியை உருவாக்கிய தோழர்களில் ஒருவரும் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவின் மூத்த தோழருமான தோழர் ஸ்வதேஷ் அவர்கள் கட்சிக் கொடியை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தலைவர்கள் ஒவ்வொருவராக அஞ்சலி செலுத்தினார்கள். பாட்னா மாநகருக்கு தோழர் வினோத் மிஸ்ரா நகர் எனப் பெயரிடப்பட்டு, தோழர் ராம் நரேஷ்ராம் பெயரிடப்பட்ட எஸ்.கே.மெமோரியல் அரங்கம் பிரதிநிதித் தோழர்களால் நிறைந்து வழிந்தது. தோழர்கள் டி.பி.பக்க்ஷி-பி.பி.பாண்டே-என்.கே.நடராஜன் பெயரிடப்பட்ட மேடையில், மாநாடு ஆரம்ப மானது. அஞ்சலித் தீர்மானத்தை தோழர் அபிஜித் முன் வைத்தார். பொது அமர்வில் தோழர் சியாம் சந்திர சவுத்திரி குணால் வரவேற்புரையாற்றினார். வரவேற்புக்குழுவின் சார்பாக பேரா. ஓ.பி.ஜெய்ஸ்வால் உரையாற்றினார். தொடர்ந்து இகக (மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் துவக்கவுரையாற்றினார். தொடர்ந்து நேபாள நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும் சிபிஎன் (யுஎம்எல்) கட்சியின் மூத்த தலைவருமான தோழர் ஈஸ்வர் பொக்ரேல், சிபிஐ தேசிய கவுன்சில் செயலாளர் தோழர் பல்லவ் சென்குப்தா, சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் முகமது சலீம், மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்புக் குழு பொதுச் செயலாளர் தோழர் ஹல்தார் மகாதோ, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் மனோஜ், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் செயலாளர் தோழர் ஜி.தேவராஜன், லால் நிஸான் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பீமாராவ் பன்சாட், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் மங்கத்ராம் பஸ்லா, சத்தியசோதக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புச் செயலாளர் தோழர் கிஷோர் தமாலே ஆகியோர் உரையாற்றினார்கள். இகக(மாலெ) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் ஸ்வதேஷ் நிறைவுரையாற்றினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராஜாராம்சிங் நன்றிகூறினார். நிகழ்ச்சியை அரசியல்தலைமைக்குழு உறுப்பினர் தோழர் வீ.சங்கர் மற்றும் மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் மீனாகுமாரி ஆகியோர் முன்னின்று நடத்தினார்கள்.

அன்று மதிய உணவிற்குப் பின்னர் பிரதிநிதிகள் அமர்வு தொடங்கியது. தோழர் ஜனார்த்தனன் தலைமையில் தோழர் அபிஜித், தோழர் கிருஷ்ணவேணி, தோழர் மைத்ரேயி உள்ளிட்ட 11 பேர் கொண்ட தலைமைக்குழு மாநாட்டை நடத்தியது. பாசிச எதிர்ப்பு மற்றும் தேசியச் சூழல் ஆவணங்களை அறிமுகப்படுத்தி தோழர் திபங்கர் உரையாற்றினார்.வெளிநாட்டுப் பிரதிநிதிகள், விருந்தினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் மாநாட்டினை வாழ்த்தி உரையாற்றினார்கள். குறிப்பாக பிப்ரவரி 17 அன்று காலை மனித உரிமைச் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான தோழர் அருந்ததிராய் உரையாற்றினார். ஆஸ்திரேலியாவின் சோசலிஸ்ட் அலயன்ஸ்அமைப்பின் சாம் வேன்ரைட், பாலஸ்தீனத்தின் பாய்காட் டிஸ்இன்வெஸட்மென்ட் அண்டு சாங்சன் இயக்கத்தைச் சேர்ந்த அபூர்வா கவுதம், நேபாளத்தில் சிபிஎன்(யுனிஃபைட் சோசலிஸ்ட்) ஜலாநாத் கலால், வெனிசுலா பிஎஸ்யுவி அமைப்பின் மரியா பெர்னான்டா ருய்ஸ், ரமோன் அகஸ்டோ லோபோ, பங்களாதேஷ் ஆர்டபிள்யுபிபி சார்பாக சைபுல் ஹக், பானிசிக்ஷா ஜமால், முகமது அக்பர், மிர் முபசல் ஹோஸ், பெரோஸ் அகமது ஆகியோரும் பங்களாதேஷ் சோசலிஸ்ட் கட்சியின் சார்பாக சம்பா பாசு, மனிஷா சக்ரபோ, முகமது நஸிர் உதின், மசூர் இப்னா ரஹா ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். லண்டனில் இருந்து சவுத் ஏசியன் சாலிடாரிட்டி குரூப் சார்பாக மேரி வில்சன், கல்பனா வில்சன், அனன்யா வில்சன் ஆகியோர் கலந்து கொண்டுஉரையாற்றினார்கள். விருந்தினர்கள் மற்றும் அழைப்பாளர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. சர்வதேச சூழல் ஆவணத்தை தோழர் அபிஜித் முன்வைத்தார். சுற்றுச் சூழல் அறிக்கையை தோழர் சுசேதா டே முன்வைத்தார். அமைப்பு வேலை அறிக்கையைதோழர் வீ.சங்கர் முன்வைத்தார். கட்சித் திட்டங்களுக்கான திருத்தத்தை தோழர் அரிந்தம் சென் முன்வைத்துப் பேசினார். அமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை முன்வைத்து தோழர் சுவந்துசென் பேசினார். ஒவ்வொரு தலைப்பின் மீதும் பிரதிநிதி தோழர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்துப் பேசினார்கள். தமிழ்நாட்டில் இருந்து தோழர்கள் சிம்சன், தேசிகன், இராமச்சந்திரன், சுகுந்தன், ஆகியோரும் புதுச்சேரியில் இருந்து தோழர் விஜயாவும் பேசினார்கள். தோழர் மங்கை பாடல் பாடினார். விவாதங்கள் பிப் 19ம் தேதி வரை தொடர்ந்தது. இதற்கிடையே பிப்.18 அன்று 'அரசமைப்புச் சட்டத்தைக் காப்போம்; ஜனநாயகம் காப்போம்; இந்தியாவைக் காப்போம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் லாலன் குமார், இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் தேசியத் தலைவர் ரதிராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். பிப்ரவரி 20 அன்று காலை தோழர் திபங்கர் அறிக்கை மீதான தொகுப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து தேர்தல் ஆணையக்குழு நியமிக்கப்பட்டு புதிய கட்டுப்பாட்டுக்குழுவிற்கும் புதிய மத்தியக் கமிட்டிக்கும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டது. 5 பேர் கொண்ட மத்திய கட்டுப்பாட்டுக்குழு தேர்வு செய்யப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் இருந்து தோழர் கிருஷ்ணவேணி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 77 பேர் மத்தியக் கமிட்டிக்கு கட்டுப்பாட்டுக் குழு தலைவர் போக 76 பேர் கலைந்து செல்லும் கமிட்டியால் முன் வைக்கப்பட்டனர். அவையில் இருந்து 6 பேர் போட்டியிட்டனர். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு 76 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 77 பேர் கொண்ட புதிய மத்தியக் கமிட்டியால் தோழர் திபங்கர் மீண்டும் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் இருந்து தோழர்கள் வீ.சங்கர், பாலசுந்தரம், ஆசைத்தம்பி, சந்திரமோகன் புதுச்சேரியில் இருந்து தோழர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மத்திய கமிட்டியில் இடம் பெற்றுள்ளனர். மிகச் சிறப்பாக பணியாற்றிய தொண்டர்களை பொதுச் செயலாளர் கவுரவித்தார். தேர்தல்ஆணையம்,மொழிபெயர்ப்புக் குழு (தமிழ்நாட்டில் இருந்து தேசிகன் இடம்பெற்றிருந்தார்) ஆகியோரது சிறப்பான பணியை தலைமைக்குழு பாராட்டியது. பொதுச் செயலாளர் நிறைவுரையைச் தொடர்ந்து சர்வதேசிய பாடலுடன் மாநாடு நிறைவுற்றது.மிகச் சிறப்பான ஏற்பாடுகளை பீகார் மாநிலக் கமிட்டி செய்திருந்தது.