பஞ்சாபில் நடைபெற்ற 10ஆவது காங்கிரஸிலிருந்து இப்போது நடைபெறும் 11ஆவது காங்கிரஸ் வரை நாங்கள் உங்களோடு இருக்கிறோம். ஒன்றிய மோடி ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்தின் மீதான, குடிமக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் அதிகரித்திருக்கிறது. தொழிலாளர் வர்க்க விரோத, கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளை இந்த அரசாங்கம் மிகவும் வெளிப்படையாக அமலாக்கம் செய்து வருகிறது.4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளும் கடும் போராட்டத்தின் விளைவாக ரத்து செய்யப்பட்ட 3 வேளாண் சட்டங்களும் கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களுக்கான உதாரணங்களாகும். வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, வறுமையால் மக்கள் துயரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு கூட கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களது குடியுரிமை மறுக்கப்படுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், காதல் ஜிகாத், புல்டோசர் ராஜ்ஜியம் ஆகியவை முஸ்லிம் மக்கள் மீதான நேரடி தாக்குதல்களாகும். பிற்போக்கு மனுவாத செயல் திட்டம் பெண்களை குறி வைத்துத் தாக்குகிறது. இந்த இந்துத்துவ கார்ப்பரேட் ஆட்சியை எதிர்கொள்வது இடதுசாரிகள் முன்னுள்ள மிகப்பெரிய சவால். இந்த ஆட்சியதிகாரத்தின் மீதான நமது எதிர்ப்பை பலமாக கட்டி எழுப்ப வேண்டியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான வெகுமக்கள் போராட்டமும் வேளாண் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட் டங்களும் சிறந்த உதாரணங்களாக உள்ளன. தனியார்மயத்துக்கு எதிராக தொழிலாளர்களும் விடாப்பிடியாக போராடி வருகிறார்கள். இந்துத்துவாவின் தாக்குதலை எதிர்கொள்வதிலும் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைப்பதி லும் இடதுசாரிகளுக்கு முக்கிய பாத்திரம் உள்ளது. இந்துத்துவ கார்ப்பரேட் பாஜக ஆட்சிக்கு எதிராக உண்மையான மாற்று என்பது இடதுசாரிகள் தான். அதை நோக்கிய பயணத்தில் ஒரு படியாக இந்த மாநாட்டை நான் பார்க்கிறேன். உங்களது மாநாடு வெற்றி பெற எங்களது தோழமை வாழ்த்துகள்.