தோழர்களே! கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரும் நிலவுடமைக்கெதிராக, நிலப்பிரபுத்துவத்திற்கெதிராக, ஆணாதிக்கத்துக்கெதிராக மிகப்பெரிய போராட்டங் களை நடத்தியுள்ளன. இந்தப் போராட்டங்களில் தங்கள் இன்னுயிரை இழந்த தியாகிகளுக்கு என்னுடைய செவ்வணக்கத்தைத் தெரிவித்துக் கொள் கிறேன். உலக வரலாற்றில் முக்கியமான தருணத்தில் உங்கள் மாநாடு நடைபெறுவதால் அது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மனித குலத்தின் கருவான கொள்கைகள் சவாலுக்கு உட்படுத்தப்படுவதை நாம் எதிர்கொண்டு வருகிறோம். முடிவே இல்லாத முதலாளித்துவ பேராசை, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மற்றும் பாசிசம் ஆகியவற்றை நாம் எதிர்கொள்கிறோம். சமூகநீதி சீர்குலைக்கப்படுகிறது. சுற்றுச் சூழலும்கூட அச்சுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளாக நமது மதச்சார்பற்ற சோசலிச குடியரசு முற்றுகையிடப்பட்டிருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் கருவாக இருந்த அத்தனை கொள்கைகளுக்கும் எதிரான சக்திகள் ஆட்சி அதிகாரத்தில் உட்கார்ந்திருக்கின்றனர். காவி ஏதேச்சதிகாரம், சகிப்புத்தன்மையற்ற தாகவும் வெறுப்பு கொண்டதாகவும் உள்ளது. சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் வீதிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். மோடி 'அமிர்தகாலம்' என்பதை முன்னெடுத்துக் கொண்டிருக்கும்போது, நாட்டில் வறுமையும் ஏற்றத்தாழ்வும் தலைவிரித்தாடுகிறது. நாடு பல்வேறு வளர்ச்சிக் குறியீடுகளில் பின்தங்கி உள்ளது. இந்த அரசாங்கத்தை கேள்வி கேட்பவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறார்கள். அனைத்து பிரிவு மக்களையும் உள்ளடக்கிய இந்தியா என்பது இப்போது நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. உங்கள் அரசியல் தீர்மான நகல் ஆவணத்தை நான் முழுமையாகப் படித்துப் பார்த்தேன். உங்கள் கணிப்புகளோடு நான் முழுவதுமாக உடன்படுகிறேன். விஜயவாடாவில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது காங்கிரஸ், "இந்தச் சூழலில் மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் மதச்சார்பற்ற ஜனநாயக மாற்றணியை வளர்த்தெடுக்க பரந்த மதச்சார்பற்ற இடதுசாரி சக்திகளின் கூட்டணியை உருவாக்குவது அவசர அவசியமானது" என்று முடிவு செய்திருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒற்றுமையும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே இன்னும் பரந்த ஒருங்கிணைப்பும் காலத்தின் தேவை. மாநாடு வெற்றி பெற எங்களுடைய வாழ்த்துக்கள்!

தோழர் கோசிமின்னின் முழக்கத்தை கூறி நிறைவு செய்கிறேன். 

ஒற்றுமை!ஒற்றுமை!

மிக உயர்ந்த ஒற்றுமை!!

வெற்றி! வெற்றி!

மிக உயர்ந்த வெற்றி!!