அரியலூர் மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு அனிதாவின் பெயரைச் சூட்டியிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அனிதா இன்னும் நினைவு கூரப்பட்டுக் கொண்டேயிருக்கிறார். ஆனால், அவர் என்ன காரணத்திற்காக தன் உயிரை மாய்த்துக் கொண்டாரோ அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் போடப்பட்டது. அது கண்டு கொள்ளப்படாமல் இருந்தபோது, நீட் தேர்வை ரத்து செய்ய சட்டமியற்றப்பட்டு ஆளுநர்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டு, இப்போது குடியரசுத் தலைவர்ஒப்புதலுக்காக ஆண்டுக் கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இப்போதுதான் புதிதாகக் கண்டு பிடித்ததுபோல், ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என்றால், அது ஒன்றிய அரசால் மட்டும்தான் முடியும் மாநில அரசால் ஒன்றும் செய்யமுடியாது என்று ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தைத் திருப்பி அனுப்பியிருக்கிறார். மீண்டும் சட்டமன்றத்தில் ஏகமனதாக சட்டம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் போது சட்டப்படி ஆளுநர் அதைத் திருப்பி அனுப்ப முடியாது. அதனால் அவர் இது ஒன்றிய அரசின் எல்லைக்குள் வருகிறது என்று சொல்லி, நீட் தேர்வு சட்டத்தைப் போல், இதையும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி விட்டுவிட்டு கிடப்பில் போடத் திட்டமிடுகிறார். ஆன்லைன் தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடித்து திருப்பிவிட்டுள்ளார். மசோதாவுக்கும் சட்டத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், ஆளுநர் ஆர்.என். ரவியை ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தின் முதலாளிகள் சந்திக்கிறார்கள். ஆளுநர் மாளிகை அப்பட்டமாக ஆன்லைன் சூதாட்ட முதலாளிகளின் புகழிடமாக மாறியுள்ளது. நீட் தேர்வோ ஆன்லைன் ரம்மியோ, எத்தனை பேர் இறந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை என்கிறார் ஆர்எஸ்எஸ்ஸின் ஆளுநர். ஆனால், தமிழக அரசின் நடவடிக்கையானது சட்டம் இயற்றி ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற அனுப்பப்படுவதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக இருக்கிறது. சமீபத்தில் டாஸ்மாக் ஊழியர் ஒருவர் குண்டு வீசி கொல்லப்பட்டுள்ளார். முதல்வர் ஆனவுடன் முதல் கையொப்பம் மதுவிலக்கு என்று சொன்னது திமுக. ஆனால், இன்று வரை பல குடும்பங்கள் டாஸ்மாக்கால் சீரழிந்து கொண்டிருக்கிறது. அப்படியென்றால், ஆர்.என்.ரவிக்கும் ஸ்டாலினுக்கும் வித்தியாசம் கிடையாதா? மரணங்களை வேடிக்கை பார்க்கலாமா?