கேரளாவில் உள்ள எனது நண்பர்கள் பாஜகவை ‘பெரிய பூஜ்ஜியம்' என்று குறிப்பிட்டு எனக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார்கள். அதிலிருந்து எனது உரையை துவக்குகிறேன். வேளாண் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களில் கையாளப்பட்ட பிரசித்தி பெற்ற வாசகம் "நான்கு பேர் நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். இருவர் (மோடி-அமித்ஷா) நாட்டை விற்கிறார்கள், இருவர் (அதானி-அம்பானி) அதை வாங்குகிறார்கள்" என்பதாகும். ஐரோப்பாவின் பல்வேறு காலகட்டங்களில் இருந்த பாசிசத் தோடு இந்தியாவில் தற்போதுள்ள பாசிசத்தை நாம் ஒப்பிட முடியும். ஆனால், இரண்டு வகை பாசிசத்திற்கும் உள்ள ஒரே வித்தியாசம். இங்கு சாதி என்ற வடிவம் இருப்பதுதான். சாதி ஒழிப்புப் போராட்டத்தில் முதலாளித்துவ எதிர்ப்பு என்ற அம்சம் இல்லாமலும் அதேபோல் முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டத்தில் சாதி எதிர்ப்பு என்ற அம்சம் இல்லாமலும் அவை வெற்றி பெற முடியாது என்று நான் நம்புகிறேன். கடந்த காலங்களில் சாதிய வன்கொடுமையிலிருந்து தப்பிக்க பலரும் இஸ்லாமுக்கு, கிறித்துவத்திற்கு இன்னும் மற்ற மதங்களுக்கு மதம் மாறிக் கொண்டார்கள். அதேபோல் பஸ்மன்டா முஸ்லிம் மக்களும் மதம் மாறியவர்களே. இன்று மீண்டும் இந்த மக்கள் மீது வன்முறை ஏவி விடப்படுகிறது. அவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். கும்பல் படுகொலைக்கு ஆளாகிறார்கள். நாட்டின் 60% சொத்துக்கள் 5% பேரின் கைகளில் உள்ளது. 1990 காலகட்டத்தில் இரண்டு பூட்டுகள் திறக்கப்பட்டன. ஒன்று பாபர் மசூதிக் கதவு. மற்றொன்று இந்திய சந்தை. இந்த இரண்டு சம்பவங்களின் மிகப்பெரிய தாக்கத்தை இன்றளவும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் நாட்டின் மக்கள் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உண்டு. மக்கள் பல பல வடிவங்களில் தங்களின் மிகப்பெரிய எதிர்ப்பைக் காட்டி வந்திருக்கிறார்கள். அது தொடரும் என்பதிலும் பாசிசம் தோற்கடிக்கப் படும் என்பதிலும் எனக்கு நம்பிக்கை உண்டு.