இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)ன் 11ஆவது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க சிபிஎன் (யுஎம்எல்) கட்சியை அழைத்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் மாநாடு பெரும் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்.

இந்த நேரத்தில் நக்சல் பாரி இயக்க தலைவர்களான தோழர் சாருமஜும்தார், தோழர் சுப்ரதா தத், தோழர் வினோத் மிஸ்ரா ஆகியோரை நான் நினைவு கூர்கிறேன். பல பத்தாண்டுகளாக விவசாயிகள், தொழிலாளர்கள், அறிவாளிப் பிரிவினரை அமைப்பாக்க நீண்ட நெடிய போராட்டம் நடத்தி வரும் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் வலுவான உறவு இருக்கிறது. நாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோம். நமது உறவு என்பது அரசியல் கலந்துரையாடலை தாண்டி, ரு நாட்டு மக்களுக்கிடையிலான உறவாக இருக்க வேண்டும். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நேபாள தலைவர்கள் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள். இது குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன். எங்களது கம்யூனிஸ்ட் கட்சி, அதன் தலைவராக இருந்த மன்மோகன் அதிகாரி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றியிருக்கிறார். நேபாள நாட்டு மக்கள் இயக்கங்களுக்கு இந்திய மக்கள் எப்போதுமே ஒருமைப்பாடு தெரிவித்து வந்திருக்கிறார்கள். நெருக்கடியான காலங்களில் கூட இந்தியாவில் உள்ள தோழர்களுடன் உறவு இருந்ததை நான் நினைத்துப் பார்க்கிறேன். நம் உறவு இரு நாட்டு கம்யூனிஸ்ட் இயக்கங்களையும் வலுப்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்னர் நடந்த உங்கள் கட்சி மாநாடுகளில் எங்கள் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் நேபாளத்தில் நடந்த தேர்தலில் மக்களின் முதல் விருப்பமாக, தேர்வாக எங்கள் கட்சியே இருந்தது. பிராந்திய மட்டத்தில் நடந்த தேர்தலிலும் எங்கள் கட்சியே மிகவும் செல்வாக்கு பெற்ற கட்சியாக இருந்தது. மக்களின் பேராதரவைப் பெற்ற கட்சியாக உள்ளது. பல்வேறு மட்ட தேர்தல்களில் எங்கள் கட்சி பெற்ற வெற்றி என்பது மகிழ்ச்சி தரக்கூடியது மாத்திரமல்ல, அது ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்சி நடத்தியிருக்கக்கூடிய நீண்ட நெடிய போராட்டத்தின் பிரதிபலிப்பும் ஆகும். அதனால்தான் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்சியாக உள்ளோம். இந்த தேர்தலில் அரசாங்கம் அமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் பல கட்சிகளையும் இணைத்துக் கூட்டணி உருவாக்கி அரசாங்கத்தை அமைத்திருக்கிறோம்.

எங்கள் கட்சித் தலைவரின் தலைமையின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டு குறைந்தபட்ச பொதுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. நாம் தொழிலாளர்களுக்காக, பெண்களுக்காக, ஒடுக்கப்பட்ட பிரிவினருக்காக, அவர்களின் மகிழ்ச்சிக்காக, அவர்களின் உரிமையை உத்தரவாதம் செய்வதற்காக இருக்கிறோம். நாங்கள் வெறும் அரசியல் விசயங்களில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை. அதைத் தாண்டி மக்களின் கலாச்சார, பண்பாட்டு விசயங்களிலும் கவனம் செலுத்துகிறோம். பிற்போக்கு சக்திகள் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தொடுத்து வரும் தாக்குதலை முறியடிப்பது நமது கடமையாக உள்ளது. எங்கள் முன்னால் உள்ள சவால்கள் பற்றி நாங்கள் அறிந்தே வைத்திருக்கிறோம். எங்களைப் போல் தான் சிபிஐ எம்எல் கட்சியை சேர்ந்த நீங்களும் பிற்போக்கு சக்திகளின் தொழிலாளர் மீதான தாக்குதலை எதிர்கொள்கிறீர்கள்.

கோவிட்19 காலகட்டம் என்பது இந்த முதலாளித்துவ கட்டுமானம் எப்படி ஒரு சிலருக் கானதாக உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. மக்கள் விரோத கட்டமைப்புகளை, நிறுவனங்களை வேரடி மண்ணோடு அகற்ற வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. சோசலிசத்தால் மட்டுமே சமத்துவத்தையும் எல்லோருக்குமான உரிமையையும் உத்தரவாதம் செய்ய முடியும்.

நாங்கள் அமைதி வழியில் ஒரு கம்யூனிச புரட்சிக்கான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். எங்கள் கட்சி குறிப்பிட்ட வரலாற்று ரீதியான கலாச்சார பின்புலத்தில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. நம் இரு நாடுகளிலும் நடைபெற்ற கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வெற்றி தோல்விகளை கற்றுக்கொள்ள முயன்று வருகிறோம்.

உங்களது 11ஆவது கட்சி காங்கிரஸ் முற்றிலும் புதிய சூழலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கம்யூனிச இயக்கத்தின் வெற்றி தோல்விகளை பரிசீலித்து, ஆராய்ந்து இந்த மாநாட்டில் சிறந்த முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள் என நான் நினைக்கிறேன். இந்த மாநாடு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடாக அமையும் என நான் நம்புகிறேன்.

மக்கள் இயக்கங்களை வலுப்படுத்திடும் நோக்கில் சிபிஎன் (யு எம் எல்) கட்சி சிபிஐ (எம் எல்) கட்சியுடன் உறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என விரும்புகிறது. மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் மீண்டும் புரட்சிகர வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். போராடும் இரு நாட்டு மக்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் மேலும் மேலும் வளத்திடுவோம்! உறுதிப்படுத்திடுவோம்!.