வேங்கைவயல் தலித்துகள் குடிக்கும் சமைக்கும் தண்ணீரில் மலம் கலந்த கொடூரச் செயல் வெளி உலகத்துக்கு தெரிய வந்து நான்கு மாதங்களாகி விட்டது. இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. வேங்கைவயலைச் சுற்றி பல இடங்களில் காவல் சோதனைச் சாவடிகள் உள்ளன. வெளியிலுள்ள வர்கள் வேங்கைவயல் மக்களுடன் கலந்து விடக் கூடாதென்று கவனமாக காவல்துறை சோதனை போட்டுத் தடுக்கிறது. வேங்கைவயல் மக்கள், வெளி உலகத்திலிருந்து துண்டித்து சிறைவைக்கப்பட்டுள்ளனர். இது அரசு செயல்படுத்தும் தீண்டாமை. இது அரசே செய்யும் மனித உரிமை மீறல். வெளியில் உள்ளவர்களால் தான் பிரச்சினை என்று சொன்ன பாஜகவின், 'கண்டுபிடிப்பை' ஆட்சியாளர்கள் செயல்படுத்துவது போல் உள்ளது.

மாவட்ட காவல்துறை விசாரணை, பின் சிபிசிஅய்டி சிறப்பு புலனாய்வு விசாரணை, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை என பல விசாரணை வளையங்களுக்குப் பிறகும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் படவில்லை. ரத்தப் பரிசோதனை, நவீன டிஎன்ஏ பரிசோதனை என நீள்கிறது. ஆனாலும் அங்கேயே இருக்கும் குற்றவாளிகளை இந்த விசாரணை அமைப்புகள் நெருங்கவில்லை. மலங்கலந்த தண்ணீரால் நிலைகுலைந்து போயிருக்கும் தலித்துகளும் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப் படுகிறார்கள். ஏன்? "தங்கள் மலத்தை தாங்களே தண்ணீர் தொட்டியில் கலந்து விட்டனர்" என்று அரசும் காவல்துறையும் சொல்ல திட்டமிடுவது போல் தெரிகிறது. இது வேங்கைவயல் தலித் மக்கள் மீது காவல்துறை நடத்திவரும் மற்றுமொரு அரசு வன்முறை.

காவல்துறை, நீதிமன்றம், அரசு நவீன சமூகத்தின் மூன்று முக்கிய கரங்கள் ஒன்று சேர்ந்து கூட "மலம் கலந்தவர்களை" கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டுபிடிக்க முடியவில்லையா? கண்டுபிடிக்க விரும்பவில்லையா? இதுவே, மாபெரும் கேள்வியாக எழுந்து நிற்கிறது. ஏன் கலந்தார்கள்? எதற்காக கலந்தார்கள்? யார் கலந்தார்கள்? என்ற அடிப்படையான கேள்விகளுக்கு அரசு இன்னும் விடை கண்டுபிடிக்கவில்லை. விடை தேடி கண்டுபிடிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. சமூகத்தின் பிரதிநிதியாக இருப்பதாக கூறிக்கொள்ளும் காவல்துறை, நீதிமன்றம், அரசு ஆகியவைதான் உண்மையை, குற்றவாளிகளை கண்டுபிடித்தாக வேண்டும். நான்காவதாக, ஊடகங்கள். ஊடகங்கள் பெரிதும் அமைதி காக்கின்றன. சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை போல, காவல்துறை, நீதிமன்றம், அரசாங்கம் சொல்வதை திருப்பிச் சொல்வதோடு நின்று கொள்கின்றன. இந்தச் செய்தியைப் பற்றி எழுதுகிறபோது 'தினத்தந்தி' நாளேடு, "அசுத்தம் கலந்த நிகழ்வு" என்றே எழுதுகிறது. இது, 'மலம் கலந்த' செயலின் குரூரத்தை, காட்டுமிராண்டித் தனத்தை மட்டுப்படுத்திக் காட்டுகிற, குற்றத்தின்தீவிரத்தைக் குறைத்துக் காட்டுகிற செயல். சமூகத்தின் நாகரிக பொதுப்புத்தியில் இந்தக் கொடூரச் செயல் பற்றி கோபங்கொண்டு கேள்வி எழுப்புவதற்கு மாறாக, இது ஒரு சாதாரண செயல்தான் என்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும் திட்டமிட்ட முயற்சி. பொது சமூகத்தின் எண்ணங்களைத் தவறாக வடிவ மைக்கும் கருத்தியல் பணி. உண்மையைக் கண்ட டைய சமூகத்துக்கு ஒரு கருவியாக இருப்பது தான் ஊடகங்கள். ஆனால், உண்மையைக் காண முடியாமல் செய்வதுதான் 'ஊடக அறமாக, மாறி வருவதன் அடையாளம்தான் தினத்தந்தியின் இந்த சொல்லாடல்.

இந்த வகையில், ஆட்சியாளர்கள், காவல் துறை, நீதிமன்றம் இவற்றோடு ஊடகங்களும் இசைந்து செயல்படுவதாகவே தெரிகிறது. இந்த இசைவின் மீது, இணக்கத்தின் மீது, ஒருமையின் மீது கேள்வி எழுப்பியாக வேண்டும். வேங்கை வயல் மக்கள், சுற்றி வளைக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ள நிலையில் கேள்விகள் எழுப் பப்பட்டாக வேண்டும்.

வேங்கை வயல் குற்றத்தை சமூகத்திற்கு எதிரான குற்றமாக கருதவேண்டும். அப்படி இல்லாமல், அந்த குற்றத்தைச் செய்தவர்களை பாதுகாப்பதிலிருந்து தொடங்கி, அந்த குற்றத்தையேப் பாதுகாப்பதில் முடிவதற்கு காரணம், பெரும்பான்மை ஆதிக்க சாதி மனநிலை. தலித் விரோத மனநிலை. இவைதான் வேங்கை வயல் குற்றத்திற்கு எதிராக கடுமையாக செயல்படுவதைத் தடுக்கிறது.

மாபெரும் குற்றச்செயல் நடந்து இத்தனை நாட்களுக்குப் பிறகும் அரசாங்கத்தின் தலைவர், முதலமைச்சர் ஸ்டாலின் 'வேங்கை வயல்' என்ற சொல்லைக் கூட உச்சரிக்க வில்லை. சட்டப் பேரவையில் இந்த விஷயம் பற்றி தானே முன் வந்து விவாதிக்க ஆளும் கட்சி முன்வரவில்லை. எதிர்க்கட்சிகள் அதிமுக, பாஜக எழுப்பிடத் தயாரில்லை. திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் கேள்வி எழுப்பவில்லை. சட்டப்பேரவையும் அமைதியாக இருந்து முடிந்துவிட்டது. ஒரு மிகப்பெரும் சமூகக் குற்றம் பற்றி மக்கள் பிரதிநிதிகள் கொண்ட சட்டப்பேரவை பேசாதது மிகப்பெரிய அநீதி. இதற்குப் பின்னால் இருப்பது வாக்கு வங்கி அரசியல். அதிலும் பெரும் பான்மை சாதி வாக்கு வங்கி அரசியல். முக்கிய அரசியல் கட்சிகள், தலித்துகளை கைவிடுகின்றன. பெரும்பான்மை ஆதிக்க சாதி அரசியலை கைவிடத் தயாரில்லை. கூட்டணி அரசியல் என்ற பேரால் அநீதிக்கு எதிராக அமைதி காப்பதும் தொடர்கிறது. தலித்துகள், பெண்கள், நலிந்த பிரிவினர் மீது இடைவிடாத வன்முறைகள் தொடர்வதற்கு இந்த "நல்லிணக்கம்" தான் காரணம். சமூக நீதி பேசுகிற கட்சிகள், சமூக அநீதிக்கு எதிராக பேசாம லிருப்பது வியப்பளிக்கும் முரண்பாடு.

அண்மையில், முதலமைச்சர் தலைமையில், ஆதிதிராவிட பழங்குடி மக்கள் நலத்திட்ட ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசு தரப்பில் இருந்து வேங்கை வயல் பற்றி எந்த குறிப்பும் இல்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும், வேங்கை வயல் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டுமென்று மனு அளித்திருக்கிறது.

இந்த நிலையில்தான், சலனமற்ற குளத்தில் ஒரு கல்லெறிகிற செயலாகத்தான் பொது விசாரணை ஒன்றை நடத்த முன்வந்துள்ளன இடது, முற்போக்கு அமைப்புகள். அரசு, அரசு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் தவறுகிற போது, இடது முற்போக்கு சக்திகள், குடிமைச் சமூகத்தின் சார்பாக உண்மையை வெளிக் கொண்டு வரும் நோக்கில் கேள்வி எழுப்பிட வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), நீதிக்கான மக்கள் இயக்கம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் ஆகிய அமைப்புகள் ஒரு திறந்தவெளி பொது விசாரணையின் மூலம் கேள்வி எழுப்ப முன்வந்துள்ளன. "வேங்கை வயல் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாதது ஏன்? என கேள்வி எழுப்புகின்றன. சகல அதிகாரங்களையும் கொண்டு மறைத்த பல உண்மைகளை இதுபோன்ற இடது, ஜனநாயக, முற்போக்கு சக்திகள் தீவிரமாக செயல்பட்டு உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளன. குற்றவாளிகளுக்கு தண்டனையும் தவறாகத் தண்டிக்கப்பட்டவர் களுக்கு நீதியும் பெற்றுத் தந்துள்ளன. மிகச் சமீபத்திய நிகழ்வு, தொழிற் சங்கங்கள், கட்சிகள், பொது சமூகம் ஒன்றுபட்டு செயல்பட்டு "12 மணி நேர வேலை" சட்டத்தில் அரசை பின்னுக்குத் தள்ள முடிந்துள்ளது. அதுபோல, வேங்கை வயல் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த முடியாதா? அந்தக் கொடூர மன, உடல் காயம் பட்ட தலித்துகளுக்கு நீதி பெற்றுத் தரமுடியாதா? இது வேங்கை வயல் தலித்துகளுக்கான நீதி மட்டுமல்ல, சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஒட்டுமொத்த தலித் சமூகத்துக்குமான நீதியாகும்.