பாசிச பாஜக-ஆர்எஸ்எஸ் பிடியிலிருந்து இந்தியாவையும் இந்திய மக்களையும் காப்பதுதான் தற்போதைய தலையாய கடமை என்கிற அடிப்படையில், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், பெங்களூருவில் 2023 ஜூலை 17-18 தேதிகளில் கூடி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை, மதச்சார்பின்மையைப் பாதுகாப்போம், ஜனநாயகம் காப்போம், சமூகநீதி காப்போம் என்ற குறிக்கோளுடன் 2024 நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாசிச பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற லட்சியத்தியத்திற்காக 'இந்திய தேசிய உள்ளடக்கிய வளர்ச்சிக் கூட்டணி' (Indian National Developmental Inclusive Alliance - INDIA)யை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)விடுதலை இகக(மா), இக்க, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட 26 கட்சிகள் அங்கம் வகிக்கிக்கின்றன. எதிர்க்கட்சிகளின் பலம் வலுவடைந்து வரும்நிலையில், பாஜக 38 கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தைக் கூட்டியது. அதில், பெரும்பான்மையான கட்சிகள், எதிர்க்கட்சியாக இருந்தபோது பாஜகவால் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு, தங்கள் பக்கம் இழுக்கப்பட்டு பாஜக சலவை எந்திரத்திரத்தால் புனிதப்படுத்தப் பட்டவர்கள். பாஜக-ஆர்எஸ்எஸ், மோடி-அமித்ஷா இரட்டை என்ஜின் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை உடைக்கின்ற வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஆர்.என்.ரவியைக் கொண்டு கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான ஆளுநர் அராஜகமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, குட்கா புகழ் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்காமல் பலதடவை ஒத்தி வைக்கிறார். செந்தில் பாலாஜியை அடுத்து, இப்போது தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் சிகாமணி ஆகியோர் வீடுகளில், அலுவலகங்களில் மோடி-அமித்ஷாவின் அடிமைத்துறையான அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால், அதிமுக போன்ற பாஜகவின் அடிமைகள் என்றால், ஒரு விதமான நடவடிக்கை, எதிர்க்கட்சிகள் என்றால் ஒருவிதமான நடவடிக்கைகளை இரட்டை என்ஜின்கள் மேற்கொண்டு வருகின்றன. அது மட்டுமின்றி, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் ஊழல்களே நடக்காததுபோல, அமலாக்கத்துறையும், மற்ற ஊழல்கள் தடுப்புத் துறைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இம்மாதிரி என்ன செய்தாவது எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்திட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு மோடி-அமித்ஷா கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், எதிர்க்கட்சிகள், குறிப்பாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் எதிர்க்கட்சிகள், மக்களைத் தங்கள் பக்கம் முழுமையாக நிற்க வைக்கும் நடவடிக்கைகளை, கொள்கைத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், பாஜக தன் கையில் உள்ள துறைகள் மூலமாக தன்னைத் தவிர மற்ற கட்சிகள் எல்லாம் ஊழல், கட்சிகள் என்று மக்கள் முன் சொல்லப் பார்க்கிறது. அதற்காக நடத்தப்படுவதுதான் இந்த மாதிரியான சோதனைகள். அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில். இந்நிலையில் தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு, சாராய விற்பனை, சாராயச் சாவுகள், சாதியாதிக்கக் கொலைகள், பெண்கள் உரிமைத் தொகையில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான வர்களை நீக்க முயற்சிப்பது போன்றவைகளால் திமுக அரசுக்கு எதிராக மக்கள் மனோபாவம் மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை இந்தியாவைக் காக்கும் இந்தியா' கூட்டணியில் உள்ள திமுகவிற்கும் இருக்கிறது.