"முதுநிலை மருத்துவ பட்ட படிப்புக்கான மூன்றாவது கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு '0' பெர்சைன்டைல் இருந்தால் போதும்" என்று தேசிய மருத்துவக் கழகம் அறிவித்துள்ளது. அதாவது, இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவ தற்கான நீட் தகுதி மதிப்பெண்கள் பூஜ்ஜியம் பெர்சைன்டைல் ஆக குறைக்கப் பட்டிருக்கிறது.

*பூஜ்ஜியத்திற்கு கீழே மதிப்பெண் போனாலும் இடங்கள் :

பெர்சண்டேஜ், பெர்சைன்டைல் (percentile) இரண்டுமே பார்க்க ஒன்று போல் இருந்தாலும், பெரிய வித்தியாசம் உண்டு. பெர்சண்டேஜ் என்பது சதவீத கணக்காகும். நூறில் எத்தனை பங்கு எனக் கணக்கிடுவதாகும். ஆனால், பெர்சண்டைல் என்பது அனைத்து மாணவர்களும் எடுத்த மதிப்பெண்களை வரிசைப்படுத்தி அதில் ஒரு இடத்தை குறிப்பதாகும். உதாரணமாக, ஒரு தேர்வில், தேர்வு சற்று கடினமாக இருந்து பெற்ற மதிப்பெண்களில், 50வது பெர்சண்டைல் 36 வருகிறது என்றால், 50% மாணவர்கள் 36க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 50% மாணவர்கள் 36க்கு கீழ் பெற்றுள்ளனர் என்பதாகும். நீட் தேர்வில் நெகடிவ் மதிப்பெண் உண்டு.

ஸீரோ பெர்சண்டைல் என்பது ஸீரோ மதிப்பெண் அல்ல. இருப்பதிலேயே கடைசி மதிப்பெண். அதாவது கடைசி மதிப்பெண் எதிர்மறையில் இருந்தாலும் அதுதான் ஸீரோ பெர்சண்டைல். எனவே பூஜ்யம் மதிப்பெண்ணுக்கும் கீழே போய் எதிர்மறை மதிப்பெண் எடுத்தாலும், முதுநிலை மருத்துவப் பட்ட படிப்பு இடங்கள் உறுதியாக கிடைக்கும். பூஜ்யத்திற்கு கீழேபோய் எதிர்மறை மதிப்பெண்கள் எடுத்தாலும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்குச் சேரலாம் என்றால், நீட் தேர்வு "தகுதியை" அடிப்படையாக கொண்டது இல்லை என்பது தெளிவாகிறது.

'நடப்பாண்டில் 8,000 க்கும் அதிகமான முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் நிரப்பப்படாமல் போகும் அபாயம் உள்ளதாகவும், நிரப்ப தகுதியான மாணவர்கள் இல்லை என்பதாலும்' தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதாக ஒன்றிய அரசின் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், காலியாக உள்ள 90 % க்கும் மேற்பட்ட சீட்டுக்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் பல்கலைக் கழகங்களில் உள்ளன. அவற்றின் கொள்ளை வருமானம் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. நடப்பாண்டு முதுநிலை நீட் தேர்வு முடிவுகளைப் பார்த்தால், 30 பேர் ஒற்றை இலக்கத்திலும், 14 பேர் பூஜ்ஜியம் "0" மதிப்பெண்களும், 13 பேர் பூஜ்யத்திற்கும் கீழாக, எதிர்மறை நெகட்டிவ் மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

இவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு இந்த முடிவு வழிவகுக்கிறது. இத்தகைய தகுதியற்ற ஆனால் கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவார்கள் என்பது தான் ஸீரோ பெர்சன்டைல் விளைவாகும்.

நீட் தேர்வு அறிவிக்கப்பட்ட போது, மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதும், தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புக்கான இடங்கள் விற்கப்படும் கொள்ளையைத் தடுப்பதும் நோக்கங்களாக வாதிடப்பட்டது. இவை அனைத்தும் மோசடி என்பது இப்போது தெட்டத் தெளிவாக அம்பலமாகிவிட்டது.

* ஸீரோ பெர்சண்டைல் வேண்டாம்

அரசே கலந்தாய்வு மூலம் நிரப்பிடுக! 

    முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தமிழக அரசின் மருத்துவ கல்லூரிகளில் ஆண்டு கல்விக் கட்டணம் அதிகப்பட்சம் ரூ.40,000 தான். ஆனால், தனியார் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கல்விக்கட்டணம் ரூ.40 லட்சத்துக்கும் கூடுதல் ஆகும். இந்தளவு கல்விக்கட்டணத்தை செலுத்துவது இதுவரை தகுதி பெற்ற மாணவர்களுக்கு சாத்தியமில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகள் மருத்துவக் கல்விக் கட்டணத்தை குறைத்து, அந்த இடங்கள் அனைத்தையும் அரசே கலந்தாய்வு மூலம் நிரப்பினால், ஏற்கனவே தகுதி பெற்ற மாணவர்களைக் கொண்டு அனைத்து இடங்க ளையும் நிரப்ப முடியும்.

முதுநிலை நீட் தேர்வுக்கான விதிகளின்படி, மொத்தம் 800 மதிப்பெண் கொண்ட தேர்வில் பொதுப் பிரிவினருக்கு 291 மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 257 மதிப்பெண்கள் தகுதி மதிப்பெண்கள் ஆகும். தேர்வு எழுதிய 2,00,517 பேரில், 1,20,000 பேர்கள் மேற்கண்ட மதிப்பெண்களை பெற்று தகுதி பெற்றுள்ளனர். இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் உள்ள மொத்த இடங்கள் 45,337 தான். அவற்றை நிரப்ப அந்த இடங்களை விட கிட்டத்தட்ட மூன்று பங்கு தகுதியுடன் இருக்கும்போது, அந்தத் தகுதி மதிப்பெண்களுக்கும் குறைவாக வும், பூஜ்யத்துக்கும் கீழே "0" பெர்சன்டைல் வாங்கியவர்கள் ஆகவும் உள்ள 80,000 பேருக்கு தகுதி இருப்பதாக அறிவிக்க வேண்டிய தேவை என்ன?

இது, கோடீசுவரர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளை தாரை வார்க்கும் சமூக அநீதி ஆகும்.

* நீட் திரும்பிப் பெறுக!

நீட் தேர்வுக்கும் தகுதிக்கும் எந்த தொடர்பு மில்லை. இதன் மூலம் ஒன்றிய அரசின் 'தகுதி' மற்றும் பொது நுழைவுத் தேர்வு கொள்கை படுதோல்வி அடைந்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்பில் நீட் தேர்வும் கொள்ளை யடிக்கும் கோச்சிங் மையங்களும், முதுநிலை மருத்துவ படிப்பில் பூஜ்யம் பெர்சன்டைல் பெற்றவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் கட்டணமும் என்பதுதான் இதன் செய்தியாகும். இளநிலை மருத்துவ படிப்பில் நீட் திணிப்பும், முதுநிலை மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு மதிப்பெண்கள் பூஜ்யத்திற்கு கீழே போனாலும் இடம் வழங்குவதும் மாபெரும் சமூக அநீதி யாகும்.

இளநிலை மருத்துவப் படிப்பில் நீட் தேர்வு மூலம் வடிகட்டி, அடித்தட்டு ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி உரிமையை மறுத்து விட்டு, முதுநிலை படிப்பில் பணக்காரர்கள், உயர் சாதி பிரிவினர் தடையின்றி நுழைவதற்கு வழிவகுக்கும் சதிச் செயலாகவே, இது அமைந்திருக்கிறது.

மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக் கவும், மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கவும் நீட் தேர்வு எந்த வகையிலும் உதவ வில்லை என்பதே உண்மை. எனவே, மருத்துவப் படிப்புக்கான அனைத்து நிலை களிலும் நீட் தேர்வை ரத்து செய்யப்பட வேண்டும்.

* இளநிலை மருத்துவ படிப்பில் நீட் தகுதி தேர்வு வேண்டாம்.

* முதுநிலை மருத்துவ படிப்பில் சேர நீட் தகுதி ஸீரோ . பெர்சன்டைல் என்பதும் வேண்டாம்.