செங்கோட்டை நகராட்சி

2023 செப்டம்பர் 12 அன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு 400க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்ட பெருந்திரள் முறையிடும் போராட்டம் நடை பெற்றது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் 48 ஒப்பந்து தூய்மைப் பணித் தொழிலாளர்கள் இரண்டு ஆண்டுகள் முதல் எட்டு ஆண்டுகள் வரை பணி செய்து வருகின்றனர். செங்கோட்டை நகராட்சியில் ஏவிஎம் ஒப்பந்த நிறுவனத்திடம் பணி செய்த காலத்தில் பிஎப் மற்றும் இஎஸ்ஐ பிடித்தம் செய்யப்பட்ட தொகை தூய்மைப் பணித் தொழிலாளர்களுக்கு பல மாதங்கள் ஆகியும் வழங்கப் படவில்லை. பலமுறை ஒப்பந்த நிறுவன பொறுப் பாளர்களிடம் பேசியும் சரியான முடிவு ஏற்பட வில்லை. மேலும் தற்போது செயல்படும் ராம் அன் கோ மதுரை ஒப்பந்த நிறுவனம் தூய்மைப்பணி தொழிலாளர்களுக்கு பணி செய்ய போதுமான உபகரணங்கள் வழங்கவில்லை

அதேபோல் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்த குறைந்தபட்சக் கூலி அரசாணையின்படி நாள் ஒன்றுக்கு ரூபாய் 511 சம்பளத்தை 2023 ஏப்ரல் 1 முதல் நிலுவையுடன் வழங்கிட வேண்டும். தொடர்ந்து பிடித்தம் செய்யப்படும் பிஎப் பணத்தை உடனடியாக பிஎப் அலுவலகத்தில் செலுத்திட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐசிசிடியு சங்கம் சார்பாக மனு அனுப்பப்பட்டது. புதிய 13 பேட்டரி வண்டி மற்றும் ஒரு லோடு ஆட்டோ வண்டியை போராட்ட அறிவிப்பின் காரணமாக தொழிலாளர் களுக்கு அவசரமாக நகராட்சி நிர்வாகம் வழங்கியது. மற்ற கோரிக்கைகள் தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவனம் ராமன் அன் கோ நிறுவன மேலாளர், ஏஐசிசிடியு தென்காசி மாவட்ட நிர்வாகிகளை அழைத்து பேசினார். போராட்டம் வேண்டாம் பின்னர் பேசிக் கொள்ளலாம் என தட்டிக் கழிக்கப் பார்த்தார். சங்க நிர்வாகிகளின் ஊர்களுக்கு சென்று அவர்களின் சமூக பின்னணி சம்பந்தமாக விசாரித்தார் அவர்கள் வாழும் ஊரில் உள்ள ஆதிக்க சாதிகளை வைத்து பேசி மிரட்டிட ஏற்பாடு செய்தார் தொழிலாளிகளை ஒவ்வொருத்தரையும் தனித்தனியாக பேசி போராட்டத்தில் பங்கு பெறக் கூடாது என மிரட்டினார். ஆனாலும் அக்டோபர் 9 அன்று உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிலாளர்களின் பிஎப், இஎஸ்ஐ தொகையை அதில் ஒப்பந்த நிறுவனம் கட்டும் இல்லையென்றால் நகராட்சி நிர்வாகம் கட்டும், பணி செய்ய போதுமான உபகரண பொருட்கள் உடனடியாக வழங்கப்படும், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்த குறைந்தபட்ச கூலி அரசாணையின்படி நாள் ஒன்றுக்கு ரூபாய் 511 சம்பளத்தை 2023 ஏப்ரல் 1 முதல் நிலுவையுடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும், ஆண் பெண் அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூபாய் 478 ஊதியத்தை ஒப்பந்த நிறுவன உரிமையாளரிடம் பேசி மூன்று நாட்களுக்குள் வழங்கிட ஏற்பாடு செய்யப்படும் என பல கோரிக்கைகளுக்கு எழுத்துபூர்வமாக உடன்படிக்கை ஏற்பட்டதை தொடர்ந்து அன்றைய போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஆனால், உடன்படிக்கைப்படி நடந்து கொள்ளாதது மட்டுமின்றி, அது பற்றி முறையிட்ட சங்க நிர்வாகிகளிடம் ராமன் அன் கோ மேலாளர் திரு அசோக்குமார் சாதிய ரீதியாக அவதூறாகப் பேசினார். அதனால், அவர் மீது உடன் நடவடிக்கை எடுக்கக் கோரி ஏஐசிசிடியு சங்கம் சார்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் மற்றும் மேலாளர் தொழிற்சங்க நிர்வாகிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்கள். பேச்சுவார்த்தையில் தனது உடல்நிலை சூழ்நிலையால் அவ்வாறு நடந்து கொண்டதாகவும் இனிமேல் அப்படி நடந்து கொள்ள மாட்டேன் என்றும் நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அனைவரின் முன்பும் கேட்டுக் கொண்டதாலும் உடனடியாக கடந்த மாத சம்பளத்தை வழங்கியதாலும் முற்றுகைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. போராட்டத்தில் ஏஐசிசிடியு தென்காசி மாவட்ட பொது செயலாளர் எம் வேல்முருகன், தென்காசி மாவட்ட தூய்மைப் பணியாளர் சங்க கௌரவத் தலைவர் பேச்சிமுத்து, தென்காசி மாவட்ட தூய்மை பணியாளர் சங்க மாவட்ட பொது செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் பரமேஸ்வரி, ஏஐசிசிடியு தென்காசி மாவட்ட தலைவர் அயுப்கான், சேக் மைதீன், புதியவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வாடிப்பட்டி ஒன்றியம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றி யத்தில் உள்ள ஓர் ஊராட்சி மண்ணாடிமங்கலம். அந்த ஊரின் தூய்மைப் பணியாளர்கள் இருவருக்கு ஏறக்குறைய 16 மாதங்கள் சம்பள பாக்கி. அவர்கள் மலை குறவர் என்ற அட்டவணைச் சாதியைச் சேர்ந்தவர்கள். இருவரும் வருகைப் பதிவேட்டில் கையொப்ப மிடவில்லை என்பதால் சம்பளம் வழங்கப்பட வில்லை. உண்மையில் அந்த இருவருடன் இன்னொருவரும் கையொப்பமிடுவது முறையாக நடக்க வாய்ப்பில்லை. அவர்கள் வேலையை முடித்துவிட்டு பிரதான கிராமத்தில் இருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வந்து சேர்வது, அப்போது அலுவலகம் மூடியிருப்பது, பதிவேடு இல்லாதிருப்பது என்று பல பிரச்சனைகள்.

சம்பளப் பாக்கி கேட்டு வட்டார வளர்ச்சி அதிகாரி (கி) அவர்களை அணுகியபோது, வேலை செய்யாத நாட்களுக்கு சம்பளம் இல்லை என்ற பதில் வந்திருக்கிறது. தொழிலாளர்கள் வலியுறுத்திய பின்னர் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி ஒருவர் கிராமத்தை ஆய்வு செய்து தொழிலாளர்கள் முறையாக வேலை செய்வதில்லை என்று அறிக்கை செய்தார். இது உள்ளாட்சி நிர்வாகமும், வட்டார வளர்ச்சி அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து செயல்படுவதின் விளைவு. தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் வார்டுகளில் வீட்டுக்கு வீடு கையொப்பம் வாங்கி தாங்கள் தொடர்ந்து வேலை செய்து வருவதை நிரூபித்திருக்கின்றனர். பின் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்திருக்கின்றனர். சில சங்கங்களை அணுகியிருக்கின்றனர். அப்படியிருந்தும் பிரச்சனை தீரவில்லை என்பதால் ஏஐசிசிடியு அலுவலகத்துக்கு வந்தனர். அந்த ஊராட்சியின் தலித் மக்கள் வாழும் பகுதிகளையும் தூய்மைப்பணியாளர்களையும் சங்கத்தினர் சந்தித்தார்கள். அருந்ததிய மக்களும் மக்களும் மலை குறவர்களும் தூய்மைப் பணியில் இருக்கின்றனர். அருந்ததி ன தொழிலாளர்கள் பலரும் பழங்குடி தொழிலாளர்கள் எதிர்கொள்வது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

இதற்கு கிராமப்புற ஊராட்சி தலைவர்/ பிரதிநிதிகள்/ அலுவலர் மற்றும் மாவட்ட ஊராட்சி நிர்வாகத்தில் ஊடுருவி இருக்கும் சாதியப் பார்வை மிக முக்கியமான காரணம். மேல் கீழ் எனும் அணுகுமுறை அனைத்து மட்டங்களிலும் பரவியிருந்தது.

தொழிலாளர்களின் கோரிக்கையை வட்டார வளர்ச்சி அதிகாரி முதல் ஒன்றிய அரசின் தூய்மைப் பணியாளர்கள் வாரியம் வரை கொண்டு சென்று தீண்டாமை வன்கொடு மையைத் தடுக்க வேண்டும் என்று கோரப் பட்டது. அதன் விளைவாக, வேறொரு பிரச்சனைக்காக நடந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பின்பு அதிகாரிகளைச் சந்தித்து வாதாடிய பின்பு 3 மாத சம்பளம் விடுவிக்கப்பட்டது. ஆனாலும், மூன்று மாதங்கள் பிரச்சனை நீடித்தது. ஊராட்சி செயலாளரைக் குறிவைத்து, தீண்டாமை வன்கொடுமை என்று குற்றஞ்சாட்டும் சுவரொட்- டிகள் வெளியாகின. அதன் பின்பு நடந்த பேச்சுவார்த்தையிலும் அதிகாரிகள், "கையொப்பம் இடாத தொழிலாளிக்கு எப்படி சம்பளம் அளிப்பது", என்று கேள்வி எழுப்பினர்.

"சார் நீங்கள் கையொப்பம் வரும்போது, அங்கே வருகைப் பதிவேடு இல்லாது போனால் என்ன செய்வீர்கள்? நீங்கள் கையொப்பம் இடும் பதிவேட்டுக்கும் உங்க ளுக்கும் எவ்வளவு தூரம்?" என்று சங்கத்தினர் பதில் கேள்வி எழுப்பினர். அதிகாரிக்குப் புரியவில்லை. "இவர்கள் கையொப்பம் போட பயணம் செய்ய வேண்டும். அதிகாரி வரும்வரை காத்திருக்க வேண்டும். இதற்குக் காரணம் சாதியில்லையா?" என்று கேட்ட பின்னர் பிரச்சனை முடிவுக்கு வந்தது. தீண்டாமை வன்கொடுமைக்கு ஊராட்சி நிர்வாகத் துறை மௌனமாகத் துணை போகிறது என்று முகத்துக்கு நேரே சொன்ன பிறகு நிர்வாகம் இறங்கி வந்தது.

அந்தத் தொழிலாளர்கள் பணியாற்றும் வார்டிலேயே பதிவேட்டை வைக்கவும் பாக்கியுள்ள சம்பளத் தொகையை ஒவ்வொரு மாதச் சம்பளத்துடன் 3 மாத நிலுவைத் தொகையைச் சேர்த்து வழங்கி நிலுவைச் சரி செய்யவும் ஊராட்சி நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இதற்கான ஒப்பந்தத்தில் ஊராட்சி நிர்வாகமும், தொழிலாளர்களும் ஏஐசிசிடியு தூய்மைப் பணியாளர் சங்க அமைப்பாளர் ஈஸ்வரி முன்னிலையில் கையொப்பமிட்டனர். இந்தப் போராட்டத்தை எடுத்துச் செல்வதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் சண்முகம், மங்கையர்க்கரசி, முத்துராக்கு உள்ளிட்டோர் முக்கிய பங்காற்றினர்.

கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணித் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், கிளீனர்கள் மற்றும் டிபிசி தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயம் செய்த குறைந்தபட்சக் கூலியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அக். 20 அன்று வேலைநிறுத்தப் போராட்டம் துவங்கியது. தொடர்ந்து 6 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏஐசிசிடியு உட்பட 11 தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டனர். முதல் இரண்டு நாட்கள் தொழிலாளர் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேலைநிறுத்தப் போராட்டத்தின் 6வது நாள் அன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆயிரத்திற்கும் மேலான தொழிலா ளர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரிடம் குறைந்தபட்ச ஊதியம், ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் என எந்த சட்டத்தையும் பின்பற்றாத கோவை மாநகராட்சி நிர்வாகம் மீது கொத்தடிமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் கொடுக்கப்பட்டது. இறுதியாக அன்று மாலை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோவை மாநகராட்சி துணை ஆணையர் அரசு நிர்ணயம் செய்த குறைந்தபட்சக் கூலியை வழங்குவதாக உறுதியளித்து கையெழுத்திட்டதன் பேரில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது.

6 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தில் தொழிலாளர்கள் ஒற்றுமை உணர்வுடன் உறுதியாக இருந்தார்கள். மதியம் உணவு போராட்டக் களத்திலேயே சமைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. போராட்டம் வெற்றி பெற பெண் தொழிலாளர்களின் பெருமளவிலான பங்கேற்பு, உறுதிப்பாடு, ஒற்றுமை மிக முக்கியமானது.