மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை அமைப்பு குழு ஒருங்கிணைத்த, மார்க்ஸ் உருவப்படம் திறப்பு - அஞ்சல் தலை வெளியீட்டு நிகழ்வு டாக்டர் அம்பேத்கர் திடல் விசிக அலுவலகத்தில் ஆகஸ்ட் - 12, 2023 அன்று பேராசிரியர் தோழர் அ. மார்க்ஸ் தலைமையில் நடைபெற்றது. மார்க்ஸ் உருவப்படத்தை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர்  ஆர்.நல்லக்கண்ணு திறந்து வைத்தார். விசிக தலைவர் தோழர் தொல். திருமாவளவன் எம்.பி, அவர்கள் மார்க்ஸ் அஞ்சல் தலை வெளியிட்டார்.

அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு தேசியச் செயலாளர் தோழர் இரா. கீதா, திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. தனசேகரன், சிலைக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் அ.பா.பாலசுப்பிர மணியன், யூசிபிஐ மாநிலச் செயலாளர் தோழர். பாஸ்கரன், சிபிஐ மாநில துணைச் செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர் மதினி செல்வி நிகழ்ச் சியைத் தொகுத்து வழங்கினார்.

மேலும் இந்த நிகழ்வில், சிபிஐ எம்எல் மத்தியக் கமிட்டி உறுப்பினர் பாலசுந்தரம், மாநிலக்குழு உறுப்பினர்கள் அதியமான், திருநாவுக்கரசு, ஆர்ஒய்ஏ தலைவர் ராஜேஷ், பிரபாகரன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மார்க்ஸ் பற்றி திரு கருணாநிதி எழுதிய கவிதையை பள்ளிச் சிறுமி ஒருவர் வாசித்துக் காட்டினார்.

மார்க்ஸ் புகழ் நீடூழி வாழ்க! (நிகழ்வில் சிபிஐ எம்எல் மாநிலச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்)

மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு முழு உருவ வெண்கலச் சிலை நிறுவ வேண்டுமென்று முயற்சி எடுக்கும் தோழர்களுக்கு சிபிஐஎம்எல் கட்சி சார்பாக எனது வாழ்த்துகளை, பாராட்டுதல்களை தெரிவித்து கொள்கிறேன்.

தோழர்களே!

உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் இல்லாத ஒரு உலகத்தை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. இந்தச் சமூகம் பல கட்டங்களை கடந்து வந்திருக்கிறது. புராதன பொதுவுடைமைச் சமூகம், ஆண்டான் அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம், முதலாளித்துவ சமூகம் என கடந்துவந்திருக்கிறது. மார்க்ஸ் அவர்கள் முதலாளித்துவ சமூகத்தில் வாழ்ந்தவர். இந்த முதலாளித்துவ சமூகத்தில் பாட்டாளி வர்க்கம் சொல்லொணா துயரத்தை சந்தித்தது; இன்னும் சந்தித்து வருகிறது. பாட்டாளி மக்களுக்கு எப்பொழுது விடுதலை? என்று ஏங்கித் தவித்த போதுதான் பாட்டாளி வர்க்கத்தின் விடிவெள்ளியாய் மாமேதை மார்க்ஸ் வந்து, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தந்தார்; மூலதனம் என்ற மகத்தான அறிவுக் களஞ்சி யத்தைப் படைத்தார்.

ஜனநாயகப் புரட்சி வழியாக சோசலிச சமூகத்தை படைக்கும், அதன் பின் மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமைகளுக்கு முடிவு கட்டி ஒரு பொதுவுடைமை பூவுலகைப் படைக்கும் என்று இந்த மனித குலத்திற்கு நம்பிக்கை தந்த, தலைசிறந்த முதல் மனிதனாக இன்று வரை விளங்கும் மகத்தான தலைவர் மார்க்ஸ்.

தெற்கு ஆசியாவிலேயே முதல் மே நாள் கொடியேற்றிய தமிழகத்தில், "ஆஹாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி" என்று பாடிய பாரதி பிறந்த தமிழகத்தில், ரஷ்ய புரட்சியை வரவேற்று ரஷ்யா சென்று வந்து "என்னை இனிமேல் தோழர் என்று அழையுங்கள்" என்றுகூறி பெருமிதம் கொண்ட சமூக நீதித் தலைவர் பெரியார் பிறந்த தமிழ்நாட்டில், மார்க்ஸ் அவர்களுக்கு சிலையில்லை என்பது ஆச்சரியம் படுத்துகிறது, மிகுந்த வருத்தத்தையும் அளிக்கிறது.

மார்க்ஸ் பிறந்து 200 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். அவர் நம்மை விட்டு பிரிந்து 140 ஆண்டுகளைக் தாண்டி விட்டோம். கார்ல் மார்க்ஸ் 'மூலதனம்' படைத்து 150 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ரஷ்யப் புரட்சி நடந்து 100 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. தமிழகத்தில் மே நாள் கொடி ஏற்றி 100 ஆண்டுகளாகி விட்டது.

ஆனால் மார்க்சுக்கு சிலை எழுப்ப கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம். மார்க்சின் சிலை, சிலை மட்டுல்ல,

அது ஒரு மகத்தான அரசியல்; பாட்டாளி வர்க்க அரசியல், சமத்துவத்திற்கான அரசியல், இளைய தலைமுறைக்கு கற்றுத் தரப்பட வேண்டிய அரசியல்.

இன்று தமிழகத்தில்,

ஒரு இளம் தலைமுறை மாமன்னன் திரைப் படத்தில் தனது சாதிய அடையாளமாக, வில்லன் ரத்தினவேலுவை (பகத் பாசில்) தனது நாயகனாக கொண்டாடுகிறது. இது ஆபத்தானது.

இந்தச் சூழ்நிலையில் தான் நாம் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் அவர்களின் சிலைகளை, அவர்களது அரசியலை, கருத்தியலை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

மார்க்சுக்கு முழு உருவச் சிலை வைக்கக் கோரும் முயற்சி...நல்ல முயற்சி; இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன். வெற்றி பெறும் என நம்புகிறேன்.

மார்க்ஸ் அவர்களின் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டு செயல்படும் கட்சிகளையும் தோழர்களையும் கொண்டு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தமிழக அரசிற்கு நாம் கோரிக்கை வைக்கிறோம். அந்தக் கோரிக்கையை வலியுறுத்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தொமுச தொழிற்சங்கத் தலைவர் சண்முகம் நம்முடன் இருப்பது நல்ல வாய்ப்பே.

இந்த முயற்சி கைகூட, சிபிஐ எம்எல் கட்சி நிதி உள்ளிட்ட அனைத்து வகையிலும் இணைந்து நிற்கும் என்று உறுதி கூறி, வாய்ப்புக்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன். மார்க்ஸ் புகழ் நீடூழி வாழ்க!