செப்டம்பர் 5 அன்று நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. ஒட்டுமொத்த முடிவுகளையும் பார்த்த மாத்திரத்தில், மாற்றம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை எனலாம். தேசிய ஜனநாயகக் கூட்டணி 3 இடங்களிலும், இந்தியா கூட்டணி 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், கூர்ந்து கவனித்தால் அடிமட்டத்தில் நிறைய மாற்றங்கள் நடந்திருப்பது வெளிப்படுகிறது. மக்களவைக்கு அதிக உறுப்பினர்களை அனுப்பும் உத்தரப்பிரதேசத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.கோசி தொகுதி இடைத்தேர்தல் (சட்டமன்ற உறுப்பினரின்) மரணத்தின் காரணமாக நடைபெறவில்லை. மாறாக, அவர் கட்சி தாவியதன் காரணமாக நடைபெற்றது. சமாஜ்வாதி கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர் பாஜகவுக்கு கட்சி தாவி பாஜகவின் வேட்பாளராக மறு தேர்தலை எதிர்கொண்டார். மோடி-ஷா-யோகி, இரட்டை எஞ்சின் ஆட்சி அவருக்குப் பின்னால் தனது முழு பலத்தையும் செலுத்தியது. பாஜகவை தோற்கடித்ததன் மூலம் கோசி மக்கள் அனைத்து அதிகாரமும் படைத்த யோகி ஆட்சியை தோற்கடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் பெற்ற வெற்றியானது இந்த செய்தியை இன்னும் உரக்கச் சொல்கிறது.

அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தின் டும்ரி தொகுதியும் கடும் போட்டியை எதிர்கொண்ட தொகுதியாகும். 2019 தேர்தலில் பாஜகவும் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கமும் (AJSU) தனித்தனியே போட்டியிட்டதால் அப்போது போட்டியிட்ட ஜே எம் எம் கட்சியின் மக்கள் செல்வாக்கு மிக்க ஜகன்நாத் மகதோ எளிதாக வெற்றி பெற முடிந்தது. இந்த முறை அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்புக்கு பாஜக தனது முழு ஆதரவை தெரிவித்திருந்தது. கூடுதலாக இம்முறை பாபுலால் மாரன்டி தலைமையிலான முந்தைய ஜேவிஎம் கட்சியின் ஆதரவையும் பாஜக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சூழலின் தேவை கருதி, இகக(மாலெ)(விடுதலை)யின் கிரிடி மாவட்ட அமைப்பு ஜேஎம்எம்-க்கு ஆதரவாக ஆற்றல்மிக்க தேர்தல் பிரச்சாரத்தில் குதித்திருந்தது. பாஜக ஏஜேஎஸ்யு கூட்டின் தோல்வி, ஜார்க்கண்டின் இந்தியா முகாமுக்கும் வலுச் சேர்க்கிற முக்கிய வெற்றியாகும்.

அதேபோல் மேற்கு வங்கத்தின் துப்குரி இடைத்தேர்தலில் மிக நெருக்கமான போட்டியில் பாஜகவை திரிணாமூல் காங்கிரஸ் தோற்கடித்ததும் குறிப்பிடத்தக்கதாகும். 2021 தேர்தலில் வடக்கு வங்கம் முழுவதும் பாஜக அனைத்து இடங்களிலும் வெற்றி அலையை பெற்றிருந்தது. அந்த அலை இப்போது பின்னோக்கித் திரும்பி இருப்பதாகத் தெரிகிறது.