பள்ளியில் சாதிய காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்ட மாணவர் சிலர், அதன் தொடர்ச்சி யாக தலித் மாணவன் சின்னத்துரை வீடு புகுந்து கொடூர தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். குற்றமிழைத்தவர்கள், சின்னத்துரையோடு படிக்கும் உயர் சாதி எண்ணத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்!

இது சொல்லொணா கடும் அதிர்ச்சி அளிக்கிறது. சின்னத்துரை தங்கை, சந்திரா செல்வியும் கொடூர காயங்கள் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம், அவர்களது தாத்தா உயிரையும் பறித்துள்ளது.

தாக்கப்பட்டவரும் தாக்கியவர்களும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள். இந்தப் பள்ளியில் சக மாணவர் களால் சின்னத்துரை மீது தொடர்ந்து நடந்து வந்த சாதி ரீதியான கொடுமைகள் இதுவரை அந்த பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவில்லை என்பது உண்மையா என்ற கேள்வி எழுகிறது. அப்படியே தெரியாமலிருந்தது உண்மை யென்றால் பள்ளி நிர்வாகம் மாணவர்களது சகோதரத்துவ பழக்கம், நல்லிணக்கம் கொண்ட கல்விச் சூழல் பற்றி கவலை கொள்ளவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அல்லது சாதிபாகுபாடு இல்லாத கல்விக் கூடமாக அது இல்லை என்பது தெளிவாகிறது. இத்தகைய சூழலே இத்தகைய கொடூரக் குற்றங்களை அந்த மாணவர்கள் செய்யத் தூண்டுகோலாக இருந்துள்ளது. 

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் குற்றவாளிகள் அந்த மாணவர்கள் மட்டுமல்ல. சாதி அரசியலை வளர்த்து கட்சி அரசியலாக மாற்றிய அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாக மாறி மாறி ஆட்சி நடத்தும் ஆட்சி யாளர்கள் காரணம். முக்கிய அரசியல் கட்சிகள், அரசு நிர்வாகம், காவல்துறை, கல்வித்துறை உள்ளிட்ட அனைத்திலும் சாதி பாகுபாடு, சாதி ஆதிக்கம் கொடிகட்டி பறப்பதுதான் காரணம்.

இந்தச் சூழலை உருவாக்கியவர்களும் குற்றவாளிகளே! சமூகத்தின் அனைத்து பகுதிகளிலும் புரையோடிப்போயுள்ள இந்த அழுகிப்போன சூழல் நாற்றங்கால்களான பள்ளிகளிலும் வீடுகளிலும் கோலோச்சுகிறது. தென்காசியில் பட்டியலின பள்ளிப் பிள்ளை களுக்கு தின்பண்டம் விற்பனை செய்ய மறுப்ப திலிருந்து தொடங்கி பள்ளிக் கழிப்பறைகளை தலித் மாணவர்களை சுத்தம் செய்யச் சொல்வது, சத்துணவு திட்டத்தில் தலித் சமையலர் செய்த உணவை சாப்பிட மறுக்கச் செய்வது போன்ற குற்றங்களும் நடப்பது தொடர்கதைகளாக உள்ளன. இது போன்ற குற்றங்கள் வெளிச் சத்துக்கு வரும்போது சில மேம்போக்கான நடவடிக்கைகளோடு முடிந்து போகின்றன. இது போன்ற குற்றங்களை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் அரசியல் கட்சிகள் மேற்கொள்வதில்லை. மாறாக சாதியாதிக்கத்தை ஓட்டுக்காக ஊட்டி வளர்க் கிறார்கள். திசையன்விளை முத்தையா கொலை யானது சாதியாதிக்கக் கொலை என்பதில் இருந்து திசை திருப்பப்பட்டுவிட்டுள்ளது. சாதியாதிக்கக் கொலையை மாற்றி எழுதியது மட்டுமின்றி பறையர்- அருந்ததியர் பாகுப்பாட்டை தூண்டும் வகையில், ஆட்சியாளர்களின் ஆசைக்கேற்ப திரைக் கதை, வசனம் எழுதியிருக்கிறார்கள் கை தேர்ந்த காவல்துறையினர். அருந்ததியர் முத்தையா கொலையில் சம்பந்தமில்லா பறையர் இளைஞர்களுக்கு இப்போது குண்டாஸ் வேறு.

சாதிப் பெருமிதச் சூழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். சாதிப் பெருமிதம் குடிபுகுந்துவிட்டாலே தீண்டாமையும் ஆழக் குடிபுகுந்துவிடும். இதை நிரூபிப்பதாகவே, திசையன்விளை, நாங்குநேரி சம்பவங்கள் நடந்த சில நாட்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் உள்ளது. ஒரே பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் இடையே நடந்த சண்டையை தடுத்து நிறுத்த முயற்சித்த சக தலித் மாணவன் படுமோசமாக தாக்கப்பட்டுள்ளார்! சகோதரத்துவ உணர்வுடன் செயல்பட்ட ஒரு மாணவர் தலித் என்பதால் தாக்கப்பட்டிருப்பது எவ்வளவு பெரிய கொடுமை?

வீடு புகுந்து தாக்கிய, மாணவர்கள் திமுக, மதிமுக தலைவர்கள் வீட்டுப்பிள்ளைகள் என்ற தகவல் உள்ளது. இல்லை ஒருவர் பாஜக வீட்டுப் பிள்ளை என்றும் சொல்லப்படுகிறது. மேலே சுட்டிக்காட்டப்பட்ட நிலவரத்தை இந்த தகவல் உறுதிப்படுத்துவதாகவே உள்ளது. மேலும் மேலும் கல்விக் கூடங்கள், குற்றக் கூடங்களாக மாறி வருவதும் கல்விச் சூழல் குற்றமிழைக்கும் சூழலை உருவாக்கி வருகிறது என்பதற்கு இந்த சம்பவம் நேற்றைய உதாரணம். இந்த சூழல்தான் கனியாமூர் பள்ளி குற்றவாளிகளை (நீதிபதிகள் சிலரும் சேர்ந்து) ஓராண்டாக பாதுகாக்கிறது. வேங்கைவயலில் தலித்துகள் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்த குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாததற்கு காரணமாகிறது.

இதற்கு ஆட்சியாளர், அரசு நிர்வாகம் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாட்டில் இத்தகைய சூழல் இருந்து கொண்டிருப்பது பெரியார், சிங்காரவேலர், டாக்டர் அம்பேத்கர் மரபுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம்!

* சட்டப்பேரவை தலைவர், அமைச்சர்கள், அரசியல் கட்சியினர், அதிகாரிகள், உயிருக்குப் போராடிய நிலையிலிருந்த சிறுவர்களை சென்று பார்த்துள்ளனர். தமிழ்நாடு அரசு உயர் சிறப்பு மருத்துவம் வழங்கி வருகிறது. ஆனால் இது போதுமானதல்ல. கல்விக்கூடங்களில் இத்தகைய கொடூரங்கள் நிகழாமலிருக்க அரசு நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

* உயிரிழந்த முதியவரின் குடும்பத்துக்கு அரசு ஒரு கோடி இழப்பீடு வழங்கிட வேண்டும். * சின்னத்துரை அவரது தங்கை இருவரும் அவர்கள் விரும்பும் வரை படிக்கும் செலவு முழுவதையும் (பள்ளிக் கல்வி அமைச்சருக்குப் பதிலாக) அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். கல்வி நிறுவனமும் பொறுப்பாக்கப்பட்டு உரியவாறு தண்டிக்கப்பட வேண்டும்.

* கைது செய்யப்பட்டவர்கள் சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டார்கள் என்பதை விடவும் சாதி உணர்வு எண்ணத்திலிருந்து மீட்கப்பட்டார்கள்; சகோதரத்துவ எண்ணம் அவர்களிடம் விதைக்கப்பட்டது என்ற நிலையைக் கொண்டுவர வேண்டும். 

★ அனைத்துக்கும் மேலாக, கல்விக் கூடங்களிலிருந்து சாதிப் பெருமிதமும் சாதியும் வெளியேற்றப்பட வேண்டும்; சகோதரத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும். இதற்கு அரசும் அரசியல் கட்சிகளும் பொறுப்பு.

* திசையன்விளை முத்தையா கொலையில் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். வன்கொடுமைச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் பொய்யாக கைது செய்யப்பட்டுள்ள பட்டியலின இளைஞர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். 

*தமிழ்நாடு அரசு இதுபோன்ற சம்பவங் கள் இனியும் நிகழாமலிருக்க மேனாள் நீதிபதி சந்துருவைக் கொண்டு ஒரு நபர் ஆணையத்தை அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த ஆணையத் துக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது. வழக்க மான ஆணையமாக இல்லாமல், நாற்றங் கால்கள், விளையும் நிலங்களான பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலிருந்தும் சாதி மனநிலை, சாதிப் பெருமிதம்,சாதிப்பாகுபாடு ஒழிய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பரிந்துரைக்க வேண்டும். அது ஒரு பண்பாட்டு புரட்சியாக மக்கள் இயக்கமாக மாறுவதற்கு வழிகோல வேண்டும்.

தீண்டாமை மனித நேயமற்றச்செயல் தீண்டாமை பெருங்குற்றம் என அச்சடிக்கப் பட்டிருக்கும் பல கோடிக்கணக்கானபாடநூல்கள் புழங்கும் தமிழகப் பள்ளிகளில் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டியிருப்பது வரலாற்று பெருந்துயரம்.

உத்திரப்பிரதேசத்தில் மதவெறி வெறுப்பு, ஆரம்பப் பள்ளியில் பயிலும் இளம் உள்ளங் களை நஞ்சாக்கியுள்ளது என்றால், தமிழ்நாட்டில் சாதி நஞ்சு பிஞ்சு உள்ளங்களை நஞ்சாக்கி விட்டிருக்கிறது. இந்தியாவை துண்டாடி, எரித்துக் கொண்டிருக்கும் மத வெறியை எதிர்த்துப் போராடி வரும் தமிழ்நாடு, அதே அளவுக்கு சாதி வெறியையும் சாதியையும் அப்புறப்படுத்தப் போராட முன்வரவேண்டும். இதற்கு வழிவகுக்கும் விதமாக சந்துரு ஆணை யத்தின் பரிந்துரைகள் அமைய வேண்டும்.

ஆணையம், இடது, முற்போக்கு கட்சிகள், தலித் கட்சிகள், அமைப்புகள், கல்வியாளர்கள், ஆளுமைகள், அறிஞர்கள் ஆகியோரிடமிருந்து ஆக்கபூர்வமான ஆலோ சனைகளைப் பெற்று பரிந்துரைகளை வடிவமைக்க வேண்டும். வருங்காலத்தின் வித்துகள், இளம் தலைமுறை மாணவர், இளைஞர்கள் சாதிப் பற்று நீங்கிய சமுதாயமாக மாறுவதற்குரிய வழிமுறைகளை வகுத்து தர வேண்டுமென்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) வலியுறுத்துகிறது. 

பகத்சிங்,பெரியார், சிங்காரவேலர், அம்பேத்கர் கருத்துகள் கல்வி நிறுவனங்களில் ஆழ வேரூன்றச் செய்ய வேண்டும்