இஸ்ரேல் மீது, அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய திடீர் ராணுவ தாக்குதல், இஸ்ரேலிய உளவுத்துறை, அதன் பாதுகாப்பு கட்டமைப்புகள் பற்றி சொல்லப்பட்டிருந்த கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தி விட்டது. சமீபத்திய இஸ்ரேலின் வரலாற்றில் அதிகமான உயிர் சேதங்களை இத்தாக்குதல் ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சமூகம் ஹமாஸின் தாக்குதலையும் அதன் கொடூர தன்மையையும் கண்டிக்கும் போது, காசா மக்கள் மீது இனப்படுகொலை யுத்தத்தை நடத்த இஸ்ரேல் அதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. பாலஸ்தீனர்களை 'மனித மிருகங்கள்' என்று அழைத்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோங் காலண்ட், காசா மீது தொடுக்கப்பட்டுள்ள யுத்தம், மருத்துவ மனைகள், பள்ளிகள், வீடுகளை குறிவைத்து நடத்தும் குண்டு வீச்சுத் தாக்குதல் மட்டுமல்ல, உணவு, தண்ணீர், மின்சாரம், எரிசக்தி ஆகியவற்றை தடுத்து நிறுத்துவதாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஜனநெருக்கடி மிக்க, திறந்த வெளி வதை முகாமாக உள்ள காசாவில் சிக்கி உள்ள 20 லட்சம் மக்களின் (அதில் சரி பாதி சிறுவர்கள்) உயிரைக் காப்பாற்ற சர்வதேச சமூகமும் ஐநா அமைப்பும் தலையிட வேண்டுமென வேண்டு கோள் விடுக்கிறோம். வெட்கக்கேடான விதத்தில் அமெரிக்க நிர்வாகமும் அதன் கூட்டாளிகளும் இஸ்ரேலுக்கான இராணுவ ஆதரவை மீண்டும் அதிகரித்துள்ளதானது போர்க் குற்றங்கள் புரிந்திட இஸ்ரேலுக்கு மேலும் தைரியமளிக்கிறது.

இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் நிலை குறித்துப் பரப்பப்படும், எளிதில் பற்றக்கூடிய போலிச் செய்திகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறும் வலியுறுத்துகிறோம். அவற்றில் சிலவற்றை, இந்தியாவிலிருந்து சங்கிகள் கும்பல் பரப்பி வருகிறது என்பதும் வெளிப்படை யானதே. கடந்த காலங்களில் பிடிபட்ட ஒரு இஸ்ரேலிய ராணுவ வீரரை விடுவிப்பதற்காக, ஆயிரம் பாலஸ்தீனிய அரசியல் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் தயாராக இருந்தது. அதிக எண்ணிக்கையில் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை ஹமாஸ் பிடித்துச் சென்றிருப்பதற்கு அந்த அனுபவம் கூட ஒரு காரணமாக  இருக்கலாம். எவ்வித  குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலர் உட்பட அனைத்து அரசியல் கைதி களையும், பல்லாண்டு காலமாக சித்திரவதை செய்யப்பட்டு, இஸ்ரேலிய சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறுவர்களையும் விடுவிக்க வேண்டும் என்பது மீண்டும் முக்கிய கோரிக்கையாக எழுந்திருக்கிறது. 

ஹமாஸ் தாக்குதல் நடத்தியவுடன் நரேந்திர மோடி, இஸ்ரேலுக்கு ஒருமைப்பாட்டை உடனடியாக தெரிவித்துக் கொண்டார். ஆனால் காசா மீது இஸ்ரேல் இனப்படுகொலை யுத்தத்தை அறிவித்திருப்பது பற்றி அமைதி காக்கிறார். காலனிய ஆக்கிரமிப்பு மற்றும் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டிருக்கும் பாலஸ்தீனத்தின் மிக நீண்ட வரலாற்றையும், அந்த மக்கள் மீதான ஒடுக்கு முறை, உடமைப் பறிப்பு ஆகியவற்றையும் வைத்துப் பார்க்கும் போது, பாலஸ்தீனர்களின் இறையாண்மை கொண்ட சொந்த நிலப்பரப்புக் கான உரிமையை உயர்த்திப்பிடிக்கும் ஒரு அரசியல் தீர்வை அடைய உதவுவது மட்டும்தான் இந்தியாவின் ஒரே பங்காக, ஏற்றுக் கொள்ளத் தக்க பங்காக இருக்க முடியும். அது மட்டுமே அமைதிக்கான சாத்தியமான வழியும் ஆகும்.

இந்தியாவில் நடக்கும் பயங்கரவாத தாக்குதலும் இப்போதைய ஹமாஸின் தாக்கு தலும் ஒன்றுதான் என்பது போல காட்டிட பாஜக முயற்சிக்கிறது. மோடி அரசாங்கமும் பாஜகவும் பாலஸ்தீனியர்கள் மீது இழைக்கப்பட்டு வரும் ஆக்கிரமிப்பு மற்றும் குற்றங்கள் தொடர்பாக கண்ணை மூடிக்கொண்டுள்ளன. இந்தச் சூழ் நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்திய முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான வெறுப்புக் கனலை விசிறி விடுகின்றன. பாலஸ்தீனத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்த காரணத்தினால் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக மாணவர்கள் மீது வழக்கு தொடுக்கப்  பட்டிருக்கிறது. அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தை பயங்கரவாத மய்யம் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் ஒருவர் விவரித்திருக்கிறார். பாலஸ்தீனத்திற்கு ஒருமைப்பாடு தெரிவிப்பது என்பது பயங்கரவாதமாகவும் 'ஜிகாத்' என்றும் முத்திரைகுத்தப்படுகிறது.

பிரித்தானிய காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை பெற்ற அதே சமயத்தில் தான் பாலஸ்தீனம் அடிமைப்படுத்தப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். -பாலஸ்தீனியர்களின் நோக்கங்களுக்கு ஆதரவாக இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளது. வாஜ்பாய் அரசாங்கமும் கூட பாரம்பரியமான இந்த இந்திய நிலைப்பாட்டை பின்பற்றியது. இஸ்ரேலின் போர்த்தந்திர கூட்டாளியாக இந்தியாவை மாற்றி அமைத்ததன் மூலம் இந்தியாவின் தொடர்ச்சியான இந்த கொள்கை அணுகுமுறையில் மோடி அரசாங்கம் பாரதூரமான மாற்றத்தை கொண்டு வருகிறது.

இஸ்ரேல் மீதான ராணுவத் தாக்குதலைக் கண்டிப்பது என்பது காசா மீதான, ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலை போரை மன்னிப்பதாகவோ அல்லது போரில் இஸ்ரேலோடு நிற்பதாகவோ சீரழிந்து போய் விடக்கூடாது. உடனடியாக வன்முறையை தணிப்பது, அமைதியையும் போர் நிறுத்தத் தையும் அமல்படுத்துவது என்பதாக இந்திய வெளியுறவு கொள்கை அமைய வேண்டும். அதே - போல, இறையாளுமை மிக்க, சுதந்திர நாட்டுக்கான பாலஸ்தீனியர்களின் உரிமையை உயர்த்திப் பிடிக்கும் ஒரு அரசியல் தீர்வை அடைந்திட பணி செய்வதாக இந்திய வெளியுறவு கொள்கை அமைந்திட வேண்டும்.