இஸ்ரேலின் இடைவிடாத குண்டு வீச்சாலும் அத்தியாவசியப் பொருட்களின் கொடூரத் தடையாலும் நிகழ்த்தப்படும் ஒரு இன அழிப்பு தொடர் தாக்குதலை, காஸாவின் கிட்டத்தட்ட 10 லட்சம் குழந்தைகள் எதிர் கொள்கிற போது, உலக பசிக் குறியீடு 2023 உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பசியின் வேதனை நோக்கி, நமது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆழமாக உட்பொதிந்துள்ள சமூகபொருளாதார காரணிகள், துரிதமாக மோசமாகி காலநிலை நெருக்கடி ஆகியவற்றோடு கோவிட் வரும் பெருந்தொற்று, ரஷ்ய உக்ரைன் போர் போன்ற சமீபத்திய நிகழ்வுப் போக்குகளின் சேர்க்கையே அச்சுறுத்தும் உலக பசி காட்சிகளுக்கு காரணம் என உபகு 2023 நம்புகிறது. தற்போது இஸ்ரேலின் இனப்படுகொலை முற்றுகையும் காஸா மீதான படையெடுப்பும் இன்றைய உலகில் ஒரு போரின் வடிவத்தில் பசி எப்படித் திணிக்கப்படும் என நமக்கு நினைவுறுத்துகிறது. ஒருவேளை உடனடியாக இஸ்ரேல் கட்டுப்படுத்தப் படாவிட்டால் காஸா மீதான போர் தொடர்ந்து தீவிரமானால் ரஷ்யஉக்ரைன், இஸ்ரேல்பாலஸ்தீன மோதல்களின் சேர்க்கை சாத்தியமான உலகப் போர் சூழலை நோக்கி இந்த உலகைத் தள்ளி, போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பசியை கடும் பட்டினியாகவும், பஞ்சமாகவும் மாற்றிவிடும்.

ஒரு பொதுவான தேக்க நிலையும், பசியை எதிர்த்துப் போரிடுவதில் பின்னடைவும் உள்ளதென உபகு 2023 அறிக்கை குறிப்பிடுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு (குழந்தைகளிடமும் பெரியவர்களிடமும்), வளர்ச்சி குன்றிய குழந்தை (நீடித்த ஊட்டச்சத்து குறைப்பாட்டைப் பிரதிபலிக்கும், ஐந்து வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளில் அவர்களது வயதுக்கேற்ற உயரமின்றி இருப்பவர்களின் சதவிகிதம்), நலிவுறும் குழந்தை (நீடித்த ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஐந்து வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளில் அவர்களின் உயரத்துக்கேற்ற எடையின்றி இருப்பவர்களின் சதவிகிதம்), குழந்தை இறப்பு (ஐந்து வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளின் இறப்பு விகிதம்) ஆகிய நான்கு காரணிகளின் ஒருங்கிணைந்த அளவாகவே பசி குறியீட்டெண் கணக்கிடப்படுகிறது. பசியின் பரவல், அளவு அடிப்படையில் உலக சராசரியான 18.3 ஐ விட மிக அதிகமான அளவாக 27.0 என்ற உபகு மதிப்பைக் கொண்டுள்ள தெற்காசியாவும், தென் சஹாரா ஆப்பிரிக்கப் பகுதியும் உலகின் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இரண்டு பகுதிகளாகும்.

தெற்காசியாவின் இந்த ஆபத்தான நிலைக்கு மிகப்பெரிய பங்களிப்பாளராக, கடந்த பத்தாண்டுகளில் உபகு மதிப்புகளில் தொடர்ந்து சரிந்து வருகிற இந்தியாவே உள்ளது; வேறெவரும் அல்லர். இந்தியா 28.7 என்ற புள்ளிகளுடன் 125 நாடுகளின் பட்டியலில் 111 வது இடத்திலுள்ளது. இந்தியாவின் தெற்காசிய அண்டை நாடுகள் ஒவ்வொன்றும் இந்தியாவை விட குறிப் பிடத்தக்க அளவில் சிறப்பான நிலையில் உள்ளன. பாகிஸ்தான் உபகு 26.6 என்ற அளவுடன் 102 ஆவது இடத்திலுள்ளது. அதேவேளையில் நேபாளம் (உபகு 15.0), வங்கதேசம் (உபகு 19.0) 81வது ஆகியன குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து முறையே 69வது, இடத்திலுள்ளன. உண்மையில் உபகு 13.3 என்ற அளவுடன் 60ஆவது இடத்திலுள்ள இலங்கை தெற்காசியாவிலேயே சிறந்த சாதனையை இன்னும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. உபகு நிர்ணயிக்கும் நான்கு காரணிகளுள் நீடித்த ஊட்டச்சத்து குறைபாட்டை பிரதிபலிக்கிற நலிந்து போகும் குழந்தை என்பதில் மிகவும் ஆபத்தான விகிதமான 18.7%ஐ இந்தியா கொண்டுள்ளது. 28.7 என்ற ஒட்டுமொத்த உபகு அளவானது, பசியால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் என்னும் தீவிர வகையினத்தில் இந்தியாவை வைத்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு என்பது பல லட்சக்கணக்கான இந்தியக் குழந்தைகளின் வளர்ச்சியைத் தடுப்பது மட்டுமல்ல; 58.1 சதவிகிதம் என்ற ஆபத்தான அளவுக்கு இந்தியப் பெண்கள் பல்வேறு மட்டங்களிலான இரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

உபகு 2023 அறிக்கைக்கு மோடி அரசாங்கத்தின் எதிர்வினை என்பது உலகின் அனைத்து அறிக்கைகளுக்கும் அது தரும் வழக்கமான எதிர்வினைதான். ஆக்ஸ்ஃபேம் சமத்துவமின்மை அறிக்கை அல்லது ஊடக சுதந்திரம் அல்லது ஜனநாயகத்தின் வேறுபல குறியீடுகள் அல்லது அளவீடுகளில் இந்தியாவின் ஆபத்தான வீழ்ச்சி குறித்த அறிக்கைகளாக இருப்பினும் இவையனைத்துக்கும் ஒரே எதிர்வினை தான். மோடி அரசாங்கம் எப்போதும் மறுத்தல் வழியிலேயே செயல்படுகிறது. மட்டுமல்ல இந்த அறிக்கைகளை அந்நிய அல்லது மேற்கத்திய சதிகள் என்பதாகக் கூறி இழிவுடன் ஒதுக்கித் தள்ளுகிறது. உபகு அறிக்கையில் தவறுகளை கண்டறியும் ஒரே நாடாக இந்தியா மட்டுமே உள்ளது. ஆனால் இந்த அறிக்கையின் ஆசிரியர்கள் மோடி அரசாங்கத்தின் ஆட்சேபணைகளுக்கு ஏற்றுக் கொள்ளத்தக்க மறுப்புகளை வழங்கியுள்ளனர். இந்த உபகு அறிக்கையில் பயன்படுத்தப் பட்டுள்ள தரவுகள் சம்பந்தப்பட்ட நாடுகள் குறிப்பிட்ட கால டைவெளியில் வெளி யிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் பல்வகை பலதரப்பு நிறுவனங்களின் ஆய்வுகள் உள்ளிட்ட சரிபார்க்கப்பட்ட மூலங்களில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த உபகு இல் பெறப்பட்ட முடிவுகள் பசி மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த மற்ற உலக ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. பிரித்தானிய வாராந்திர ஏடு த எக்கனாமிஸ்ட் மூலம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் உலக உணவு பாதுகாப்பு குறியீட்டு (உஉபாகு) அறிக்கை 2021 இல் 113 நாடுகளுள் 71 வது இடத்தை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. 57.2 புள்ளிகளுடன் அதே இடத்தில் அல்ஜீரியாவுக்கு இணையாக இந்தியா வைக்கப்பட்டிருக்கும் நிலையில் 74.2 புள்ளிகளுடன் சீனா 25 வது இடத்திலுள்ளது.

உபகு அறிக்கை ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சி குன்றிய குழந்தை, நலிவடைந்த குழந்தை, குழந்தை இறப்பு ஆகியவற்றில் கவனம் குவிக்கும் அதேவேளையில், உஉபாகு அறிக்கை மலிவு விலை, கிடைப்பு, தரமும் பாதுகாப்பும், இயற்கை வளங்கள், மீண்டெழுந் திறன் போன்ற காரணிகளால் இயக்கப்படும் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் அடிப்ப டையில் அமைந்துள்ளது. தற்போது இந்தியா வுக்கு உள்ள பிரச்சினை என்பது 62.3 புள்ளிகளுடன் 42 வது இடத்திலிருக்கும் உணவு கிடைப்பு என்பதிலல்ல; ஆனால் 59.3 புள்ளிக ளுடன் 80வது இடத்தை பிடித்திருக்கும் மலிவு விலை என்பது தான். மலிவு விலையின்மையை வலுவான பொது விநியோக முறையினாலும், பொதுமக்களின் வாங்கும் திறனை அதிகப்படுத்து வதன் மூலமும் மட்டுமே எதிர்கொள்ள முடியும்.பசி, உணவு பாதுகாப்பின்மை குறித்த அதிர்ச்சி தரும் அறிக்கைகளை மோடி அரசாங்கம் மறுக்கும் அதேவேளையில் தேர்தல் நேரங்களில் 80 கோடி மக்களுக்கு 'இலவச அத்தியாவசியப் பொருட்களை' விநியோகிப்பதாகக் கூறி அதனைத் தனது மிகப்பெரிய சாதனையாக முன்னிலைப் படுத்துகிறது. இந்தக் கூற்றே, பசி, உணவு பாதுகாப்பு குறித்த உலக அறிக்கைகளால் வெளிப்படுத்தப்பட்ட இந்தியாவின் படுமோச மான செயல்திறனுக்கு மிகப்பெரிய அதிகாரபூர்வ சாட்சியமாக விளங்குகிறது.

சமத்துவமின்மை, பசி, இந்தியத் தொழிலா ளர்களின் நிலை குறித்து கவனம் குவிக்கும் அறிக்கைகளை ஒருவர் கண்டாலே போதும், ஜி20 உச்சி மாநாடு, உலகின் அய்ந்தாவது பெரிய பொருளாதாரம் என்பவற்றை சுற்றி உருவாக்கப் பட்ட, ஊதிப் பெரிதாக்கப்பட்ட மிகை விளம்பரங்களின் பொய்த்தன்மை அம்பலமாகி விடும். மக்கள் தொகையில் செய்யப்படும் மாற்றத்திற்கேற்ற பொருளாதார வளர்ச்சி (டெமோகிராபிக் டிவிடெண்ட்), பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை இந்த அரசாங்கம் தொடர்ந்து பேசுகிறது. இந்த உபகு அறிக்கை, இந்தியக் குழந்தைகள், இளம் பெண்களின் மோசமான உடல் ஆரோக்கியம் குறித்து வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதோடு வேலைகளேயற்ற நிலைமைகளால் ஏற்பட்ட இருண்மையும், இந்திய இளம் வேலை செய்யும், வேலை தேடும் மக்கள் பிரிவினரின் நிச்சயமற்ற (வாழ்) நிலைமைகளும் சேரும் போது, இந்திய மக்கள் எவ்வாறு முறைப்படுத்தப்பட்ட விதத்தில் வறுமையில் தள்ளப்படுகிறார்கள், பாழாக்கப்ப டுகிறார்கள் என்பது நமக்குத் தெரிய வரும். இந்திய மக்களின் உணவு பெறும் உரிமையும், திறன்மிக்க அனைத்தும் தழுவிய உணவு பாதுகாப்பும், 'அத்தியாவசியப் பொருட்களின் இலவசம்' என்ற பெயரில் வாக்குகளை சேகரிக்க எண்ணும் அரசாங்கத்தின் இழி செயலாக மாற்றப்படலாகாது. உணவுப் பாதுகாப்பு செயல்திட்டங்களை தொடர்ந்து புறக்கணித்தால் அது இந்தியாவை மேலதிக பேரழிவுக்கு இட்டுச் செல்லும் என்றே உபகு அறிக்கையும், உஉபாகு அறிக்கையும் நமக்கு கூறுகின்றன.