மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீனத்தின் மீதான போர் நிறுத்தப்பட வேண்டும், அனைத்து மக்களைக் காக்கவும் உடனடியாக உதவிகள் வழங்கிடவும் ஐ.நா.பொதுமன்றம் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல், நடுநிலை என்ற பெயரில் புறக்கணித்துள்ளது மோடி அரசு. காலங்காலமாக இருந்து வந்த, பாலஸ்தீன ஆதரவு இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு மாறாக பாலஸ்தீனத்திற்கு எதிராக, இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு, எதிர்க்கட்சிகளைக் கலந்து பேசாமல், தன்னிச்சையாக இப்படியொரு முடிவு எடுத்தது கடும் கண்டனத்துக்குரியது. இனவெறி பிடித்த இஸ்ரேலுக்கு ஆதரவாக, அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு மதவெறி பிடித்த மோடி அரசு செயல்படுகிறது என்பதில் வியப்பில்லை என்றாலும், பல்லாயிரக் கணக்கான குழந்தைகளை, பெண்களைக் கொத்துக் கொத்தாக கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இஸ்ரேலுக்குக் கண்டனத்தைத் தெரிவிக்காமல் பாலஸ்தீன ஆதரவு தீர்மானத்தைப் புறக்கணித்துள்ளது மோடி அரசு. அதேவேளை, நாங்கள் எப்போதும் பாலஸ்தீனத்துடன்தான் நிற்கிறோம், இந்தியா பாலஸ்தீனத்திற்கு வேண்டிய அனைத்தும் செய்யும் என்று பாலஸ்தீன அதிபரிடம் தொலைபேசியில் மோடி பேசுகிறார். இன்னொருபுறம் இந்தியா மருந்துப் பொருள்களை பாலஸ்தீனத்திற்கு அனுப்பி வைக்கிறது. ஒரு பக்கம் இஸ்ரேலின் ஆயுத வியாபாரியான அமெரிக்காவுடன் கூட்டு இன்னொரு பக்கம் பாலஸ்தீன மக்களுக்கு மருந்து என்று இரட்டை வேடம் போடுகிறது மோடி அரசு. இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த 2019ல் இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் இந்திய எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டுமின்றி, உச்சநீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், பாஜகவின் அமைச்சர்களைக் கூட வேவு பார்த்தது மோடி அரசு. அந்த அளவிற்கு இஸ்ரேலுடன் நெருக்கத்தைக் காட்டும் மோடி அரசு நிச்சயமாக இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்படாது என்பது தெரிந்ததுதான் என்றாலும், இதுநாள் வரையுள்ள இந்திய வெளியுறவுக் கொள்கையை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு தன் விருப்பம்போல் செயல்பட்டுள்ளது. இப்போது இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களின் கைபேசிகள் வேவு பார்க்கப்படுகின்றன ஒன்றிய அரசின் ஆதரவினால் என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் ஐ-போன் கண்காணிக்கப்படுவதாக அவருக்கு ஐபோன் நிறுவனமே மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களின் ஐ-போன்களை 'அரசு ஆதரவு ஹேக்கர்கள்' குறிவைப்பதாக ஐ-போன் நிறுவனமே செய்தி அனுப்பி எச்சரிக்கை செய்துள்ளது. 2019ல் இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்டது தொடர்பாக அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, அந்த நிறுவனம் நாங்கள் யாரையும் கண்காணிக்கவில்லை, தரவுகளை அரசுக்குத்தான் விற்கிறோம் என்று சொன்னது. அப்போது என்எஸ்ஓ மூலம் தன் அரசுக்கு எதிரானவர்களைக் கண்காணித்ததாக சொல்லப்பட்ட மோடி அரசு இப்போது அரசு ஆதரவு ஹேக்கர்கள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களைக் கண்காணிக்கிறதோ என்கிற ஐயம் எழுகிறது.நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க, ஆர்எஸ்எஸ் - பாஜக-மோடி அரசாங்கத்தின் உள்ளடி வேலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஒருபக்கம் அவர்களின் காவிப் பாசிச மதவெறி நிகழ்ச்சி நிரலை, ஐ.நா.மன்றத்தில் நடந்து கொண்டதுபோல் அதற்கொத்த செயல்பாடுகளை அதிகரித்துக் கொண்டே இன்னொரு பக்கம் ஜனநாயக விரோத சதிவேலைகளில் ஈடுபட்டு தனக்கெதிரான எதிர்ப்புக் குரல்களை முடக்கப் பார்க்கிறது மோடி அரசு. ஆனால், மக்கள் மன்றத்தில் மோடி வேலை எடுபடாது என்பதுதான் எதார்த்தம்