முதுபெரும் கம்யூனிஸ்ட் தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு செவ்வணக்கம்! முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்பிற்குரிய தலைவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்கள் தனது 102வது வயதில் காலமானார். தோழர் என்.சங்கரய்யா அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1922ல் பிறந்தார். 8ம் வகுப்பு வரை தூத்துக்குடியில் படித்து பின்னர் மதுரையில் தனது படிப்பைத் தொடர்ந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு சுயமரியாதை இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அமெரிக்கன் கல்லூரியின் மாணவர் தலைவராகச் செயல்பட்டார். பின்னர் ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்து செல்வதிலும் அடக்குமுறை காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டி எழுப்புவதற்கும் எட்டு ஆண்டு கால சிறைவாசம், மூன்று ஆண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை ஆகியவற்றை சந்தித்தார் தோழர் என்.சங்கரய்யா அவர்கள். மதுரையை மய்யமாகக் கொண்டு ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாணவர் இயக்கப் பணிகள் துவங்கி, மதுரை மாவட்ட கட்சி அமைப்பாளராக, நூற்பாலைத் தொழிற் சங்க இயக்கத்தின் வழிகாட்டியாகச் செயல்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றிய பிறகு அதன் முக்கிய தலைவர்களில் ஒருவராக, AIKS விவசாயிகள் சங்கத்தின் தேசிய தலைவராகச் செயல்பட்ட அவர் தீக்கதிர் பத்திரிகையின் ஆசிரியர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர், கட்டுப்பாட்டு ஆணையத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தார்; தமிழ்நாடு சிபிஐஎம் கட்சியின் மாநிலச் செயலாளராக திறம்பட செயலாற்றிய தோழர். என்.சங்கரய்யா அவர்கள், 'தொழிலாளர் வர்க்க இயக்கமும் விவசாயிகள் இயக்கமும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய அவசியத்தை' வலியுறுத்தி அதற்கான பாதையை உருவாக்கித் தந்தவர் ஆவார். அவரது இழப்பு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் இந்திய உழைக்கும் மக்களுக்கும் பேரிழப்பாகும். 

சுதந்திரப் போராட்டத்திலும் புரட்சிகர சமூக மாற்றத்திலும் சிறப்பான பங்கு வகித்த அவருக்கு, கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க தமிழ்நாடு ஆளுநர் மறுத்தது எவ்விதத்திலும் தோழர் சங்கரய்யா அவர்களின் தியாகத்தையும் புகழையும் குறைத்துவிடவில்லை; குறைத்துவிடவும் முடியாது. இன்னும் சொல்லப்போனால், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுக்காத, ஆங்கிலேயர்களின் அடிமைகளாகச் செயல்பட்ட ஆர்எஸ்எஸ்ஸின் வாரிசான ஆளுநர், தோழர் சங்கரய்யா அவர்களுக்கு டாக்டர் பட்டத்திற்கு அனுமதி யளிப்பது என்பதுகூட தேவையுமில்லை. இத்தகைய அரசியல் மனமாச்சரியங்களை அடித்து நொறுக்கியே இடது இயக்கத்தின் பேராளுமையாக எழுந்தவர் தோழர் சங்கரய்யா. தமிழ்நாடு வரலாற்றி லும் மக்கள் மத்தியிலும் மறக்க முடியாத இடத்தைப்பெற்றுள்ளார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாநிலக் கமிட்டி, தோழர் சங்கரய்யாவின் மறைவுக்கு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது. அவரது பேரிழப்பால் துயருறும் மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.