2023 டிசம்பர் 3 அன்று சென்னையில் அதிகாலை 3 மணிக்கு ஆரம்பித்த மழை தொடர்ச்சியாக இடைவிடாமல் பெய்து ஒட்டு மொத்த சென்னையையம் சென்னையையும் மூழ்கடித்தது. முதல்வர் ஸ்டாலின், 2015ல் வந்த வெள்ளம் செயற்கை வெள்ளம். ஆனால், 2023ல் வந்த வெள்ளம் இயற்கை வெள்ளம் என்றார். உண்மைதான். எதிர்பாராத அளவில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் 26 செ.மீ அளவிற்குக் கொட்டித் தீர்த்தது. எப்படிப்பட்ட மழை, வெள்ளம் வந்தாலும் சமாளிப்போம் என்று மழைக்கு முன்பு சொன்னவர்கள், மழைக்குப் பின்பு மாற்றிப் பேசினர். நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை என்றார்கள். வேளச்சேரி எம்எல்ஏ, அவ்வளவுதான் எங்களால் முடிந்ததைச் செய்து விட்டோம், கடல் வாட்டரை ரிசீவ் பண்ணவில்லை என்றால் நாங்க என்ன செய்ய முடியும் என்று கொஞ்சம் இறுமாப்புடன்தான் பேசினார். இது போல் பால் பல ஆளுங்கட்சி நிர்வாகிகள் பேசியதைப் பார்க்க முடிந்தது. இந்த அளவிற்கு மழை எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும் ஏரிகள் நிறைந்த நீர்த் தேக்கங்களின் நகரமான சென்னையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மெத்தனம் தெரிந்தது. அது மட்டுமல்ல, எந்தவொரு வரைமுறையும் வரைபடமும் இன்றி, திட்டமில்லாமல், இஷ்டத்திற்கு ஏரிகள் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில், பல்கலைக் கழகங்கள், பஸ் ஸ்டாண்டுகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என கட்டுவதற்கு அனுமதி கொடுத்தது மட்டுமின்றி, அடுக்கு மாடிக் கட்டடங்களையும் குடியிருப்புகளையும் கட்ட வைத்து, கட்டிக் கொண்டு கல்லா கட்டியதன் விளைவு வெள்ளத்தைத் தாக்குப்ப தாக்குப் பிடிக்க முடியாமல் திக்கித் திணறியதற்குக் காரணம் ஆகும். அதேபோல், டிசம்பர் 17 அதிகாலை ஆரம்பித்த மழை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. இந்தத் தலைமுறையினர் இதுவரை கண்டிராத அளவிற்கு 30 செ.மீ., 36 செ.மீ., 39 செ.மீ என மாசக் கணக்கில் பெய்ய வேண்டிய மழை மணிக்கணக்கில் பெய்துவிட்டது பேய் மழை. நீர்த் தேக்கப் பகுதிகளான பாபநாசம், மணிமுத்தார் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் இடைவிடாத மழை, ஊர்களுக்குள்ளும் இடைவிடாமல் 24 மணி நேர மழை. ஆற்றின் வெள்ளமும் ரோட்டின் மழைத் தண்ணீரும் ஒன்று சேர்ந்து குடியிருப்புகளுக்குள்ளே பாய்ந்துவிட்டன. இதுவரை இல்லாத வகையில் திருநெல்வேலி ஊருக்குள்ளே படகுகள் வர வேண்டிய நிலை. இந்த அளவிற்கு எதிர்பார்க்கவில்லைதான். ஆனால், தென் மாவட்டங்களிலும் கால்வாய்களை, வாய்க்கால்களைக் காணவில்லை. ஏரி குளங்கள் தூர்வாரப் படவில்லை. 50 அடி வாய்க்கால்கள் எல்லாம் அரை அடி சாக்கடைகளாக மாற்றப்பட்டுவிட்டன. மழைத் தண்ணீர் வடிய வழியில்லை. கட்டடங்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. வயல் வெளியும் ஆற்றங்கரைகளும் குடியிருப்புகளாக மாற்றப்பட்டு விட்டன. கமிஷன் கொடுத்து காண்ட்ராக்ட் எடுத்து போடப்படும் ரோடுகள் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே போய், ரோட்டுத் தண்ணீர் வீட்டிற்குள் பாயும் நிலை. இந்த நிலைக்கு எல்லாம் காரண கர்த்தாக்கள் ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கும் ஆட்சியாளர்களும் அவர்களின் கீழ் உள்ள அதிகாரிகளும்தான். திருநெல்வேலியை பொலிவுறு நகரமாக மாற்றுவதாகச் சொல்லிக் கொண்டு, புதிதாகக் கட்டப்பட்டுள்ள நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தைச் சுற்றி 15 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் ஓடுகிறது. 92ல் இருந்து பாடம் பெறவில்லை. இந்த இடம் ஒரு காலத்தில் ஆற்றின் பாதையாக இருந்தது. அதனால்தான், தோண்டத் தோண்ட பொன் போன்ற மணல்கள் வந்தன. அதை எடுத்துக் கொண்டு போய் அயல் நாட்டில் விற்று காசாக்குவதில் காட்டிய அக்கறையை, உரிய வடிகால் திட்டத்துடன் முறையாக பேருந்து நிலையத்தைக் கட்டுவதில் காட்டவில்லை. கூடங்குளம் அணுஉலையைச் சுற்றி வெள்ளக்காடு. இந்த நிலையில் கதிரியக்கம் ஏற்பட்டால், தென் மாவட்டங்கள் சுடுகாடு. தொடர் மழை வெள்ளத்தால், வீடுகள் இடிந்து உயிர்ப்பலிகள். வெள்ளத்தில் பலரைக் காணவில்லை என்றும் செய்திகள் வருகின்றன. நீர்த் தேக்கங்களைத் திறப்பதற்கு முன்பு சரியான முறையில் எச்சரிக்கைகள் செய்யப்படவில்லை. இப்படி சுற்றுச் சூழலைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறை காட்டாத ஆட்சியாளர்களால், இந்த பேராபத்து மீண்டும் மீண்டும் நிகழும். இது உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டும்.