2024 தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவிருக்கிற இந்நேரத்தில், 2019 டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட, அநீதி, பாரபட்சம், பிளவு அரசியலை மட்டுமே உத்தரவாதப்படுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) விதிகளை உருவாக்கி உடனடியாக அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதானது, மிகப்பெரிய அரசியல் சதிக்கான சமிக்ஞையாகும். காலத்திற்கேற்ப அமித்ஷா சொல்லும் அவருடைய புகழ்பெற்ற விளக்கத்தில் குறிப்பிட்டது போல, இந்த குடியுரிமை திருத்தச் சட்டமானது, நாடு முழுவதும் ஆவணங்களற்ற குடிமக்களின் குடியுரிமையை நீக்குவதை நோக்கமாகக் கொண்ட குடிமக்களின் தேசிய பதிவேடு (என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) நடவடிக்கையின் முன்னோடியாகும். இந்த குடியுரிமை திருத்தச் சட்டம், குடிமக்களை அவர்களின் மதத்தின் அடிப்படையில் மிகத் தெளிவாக ஒருமுகப்படுத்துகிறது. முஸ்லிம் அல்லாத 'அகதி'களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றும் அதே வேளையில், இஸ்லாமியர்கள் இந்தியக் குடியுரிமையை இழந்து நாடு கடத்தப்படும் வாய்ப்புள்ளது என்று மிரட்டுகிறது. அசாமில் நடந்த குடிமக்கள் தேசிய பதிவேடு (என்ஆர்சி) நடவடிக்கையின் அனுபவதிலிருந்தும் நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் இடிப்பு நடவடிக்கைகளிலிருந்தும் ஆதிவாசிகள், வனவாசிகள் உட்பட ஒவ்வொரு சமூகத்திலுமுள்ள வறிய மக்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்
நாட்டின் ஜனநாயகக் கருத்தும், குடியுரிமைச் சமத்துவம் மற்றும் அரசியலமைப்பு சட்ட உரிமைகளுக்கான இயக்கமும், குடியுரிமை திருத்தச் சட்டமும் தேசிய குடிமக்கள் பதிவேடும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலென கூறி நிராகரித்து விட்டன. தேர்தலுக்கு சற்று முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிகள் அறிவிக்கப்பட்டிருப்பது, ஜனநாயகத்தின் அரசியலமைப்பு அடிப்படைக் கட்டுமானத்தை பாதுகாப்பதற்கான மக்கள் இயக்கங்களின் அவசரத் தேவையை அடிக்கோடிட்டு காட்டுகிறது. வர இருக்கிற தேர்தல்களில் மோடி ஆட்சி தூக்கியெறியப்பட வேண்டியதன் தேவையையும் சுட்டிக் காட்டுகிறது.
குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டப்படியான உத்தரவாதத்திற்காக போராடும் விவசாயிகள், தொழிலாளர் உரிமைகளுக்காக போராடும் தொழிலாளர் வர்க்கம், பழைய ஓய்வூதியத் திட்டம் திரும்ப கொண்டு வரப் போராடுகிற ஊழியர்கள், உத்தரவாதமான வேலை கேட்கும் இளைஞர்கள், சுதந்திரம், பாதுகாப்பு, சம உரிமைக்காகப் போராடும் பெண்கள், சாதிவாரி கணக்கெடுப்பிற்காகவும் மேம்பட்ட இட ஒதுக்கீட்டிற்காகவும் போராடும் உரிமைகள் பறிக்கப்பட்ட மக்கள், அரசியலமைப்புச்சட்டப்படியான பாதுகாப்பு கோரும் பன்முகப்பட்ட அடையாளங்கள் கொண்டவர்கள் கூட்டாட்சியில் உரிமைகள் கோரும் மாநிலங்கள் என தங்கள் உரிமைக்காகப் போராடும் பல்வேறு பிரிவு மக்களிடம், பாரபட்சமான, பிரிவினையை ஏற்படுத்தும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த நியாயமான கவலைகளை பகிர்ந்து கொள்ளவும், குடியுரிமைச் சமத்துவத்திற்கான இயக்கத்துடன் ஒன்றுபட்டு நிற்கவும் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம். மக்களிடம் மதவெறியூட்டி, திசை திருப்பும் மோடி அரசின், பாஜகவின் செயல் திட்டத்தையும் பாசிச சக்திகளின் முயற்சிகளை தடம் புரளச் செய்யவும் வரவிருக்கும் தேர்தல்களில் தோற்கடிக்க நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.