தோழர் மனோஜ் மன்சில், பீகாரிலுள்ள போஜ்பூரின் அகியோன் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். உழைக்கும், ஒடுக்கப்பட்ட மக்களிடமும் முற்போக்கு, ஜனநாயக சமூகத்தின் மத்தியிலும் பெரும் செல்வாக்கு பெற்றவர். அவரும் கட்சித் தோழர்கள் 22 பேரும் 2015இல் அரசியல் ரீதியில் பொய்யாக புனையப்பட்ட (கொலை) வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தோழர் மனோஜ் மன்சில், பீகார் சட்டமன்றத்தில் இருந்து தகுதி நீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த அநீதியான தண்டனைக்கும் சட்ட மன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப் பட்டதற்கும் எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது.
அந்த வழக்கானது 2015 தேர்தல்களுக்கு சற்று முன்னதாகப் போடப்பட்டதாகும். தோழர் மனோஜ் சிறைக்குள் இருந்து கொண்டே தேர்தல்களில் போட்டியிட்டார். அப்போதும் கூட அவர் 30,000க்கும் அதிகமான வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். கிட்டத்தட்ட ஒரு ஆண்டிற்குப் பிறகு, தோழர் மனோஜ் பிணையில் விடுதலையாகி வெளியே வந்தார். போஜ்பூரின் அகியோன் பகுதியிலுள்ள ஒடுக்கப்பட்ட, வறிய மக்களின் உரிமைக்காகவும் கண்ணியத்திற்காகவும் தொடர்ச்சியான போராட்டங்களை கட்டமைத்தார்.
அவருடைய தலைமையின் கீழ் நடைபெற்ற புதுமையான போராட்ட இயக்கங்களில் ஒன்றுதான் "வீதிகளில் பள்ளிகள்" என்பதாகும். இந்த இயக்கம், கல்வி பெறுவது கிராமப்புற ஏழைக் குழந்தைகளின் உண்மையான உரிமை என்றது. மார்ச் 2018இல் இகக(மாலெ) பத்தாவது மான்சா காங்கிரசில் கட்சியின் மத்திய கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தோழர் மனோஜ், நவம்பர் 2020இல் அகியோன் தொகுதியில் இருந்து பீகார் சட்டமன்றத்திற்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பதிவான வாக்குகளில் 62% த்தைப் பெற்று மகத்தான வெற்றி வாகை சூடினார். அவருக்கு அடுத்தபடியாக வந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரை 50,000 வாக்குகளுக்கு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். அன்றிலிருந்து தொகுதியின் அனைத்து மட்ட வளர்ச்சிக்காகவும் இடைவிடாமல் பணி செய்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு அநீதிக்கும் எதிராக மக்களை அணி திரட்டி, அவர்களுடைய குரலை மாநில சட்டமன்றம் உள்ளிட்ட ஒவ்வொரு தளங்களிலும் துணிச்சலாக ஒலிக்கச் செய்து வருகிறார்.
பிப்ரவரி 2023, நடைபெற்ற இகக(மாலெ) கட்சியின் 11 ஆவது காங்கிரசில் மத்திய கமிட்டி உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறிது காலத்திலேயே அகில இந்திய விவசாய கிராமப்புர தொழிலாளர் சங்கத்தின் பீகார் மாநிலத் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இன்னும் சில வாரங்களில் 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக பீகாரின் மிகவும் ஆற்றல்மிகு இளம் தலித் சட்டமன்ற உறுப்பினர் தண்டிக்கப்பட்டிருப்பதானது, ஜனநாய கத்தின் மீதும் எதிர்கட்சிகள் மீதும் நாடு முழுவதும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும் தாக்குதல் மற்றும் பாஜகவும் ஐக்கிய ஜனதாதளமும் மீண்டும் இணைந்ததன் பின்னணியில் எழுந்து வரும் பீகாரின் அரசியல் சூழலின் அடையாளமாகவும் வெளிப் படுகிறது. இதுவரை தோழர் மனோஜின் தலைமையில் நடைபெற்ற பணிகளை அவருடைய தோழர்கள் தொடருவார்கள். அதே வேளையில் தண்டிக்கப்பட்ட அனைத்து தோழர்களுக்கும் நீதி பெற அனைத்து சட்ட வாய்ப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. அரசியல் ரீதியாக பழிவாங்கும் இத் திட்டத்தை, ஜனநாயகத்திற்கான மக்களின் முன்னோக்கிய அணிவகுப்பு நிச்சயமாக தோற் கடிக்கும். நாடு முழுவதுமுள்ள இடது, ஜனநாயக, முற்போக்கு சக்திகள் இந்தச் சதித்திட்டத்தைத் தோற்கடிக்க முன்வருமாறு இகக(மாலெ) அழைப்பு விடுத்தது.
தமிழ்நாட்டில் பிப்.21 அன்று மாநிலம் தழுவிய எதிர்ப்பு நாள் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இவற்றில் மாணவர்கள், இளைஞர்கள், சிபிஐஎம்எல், அயர்லா, ஏஐகேஎம், ஏஐசிசிடியு தோழர்கள் பங்கேற்றனர்.
...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)