பிப்ரவரி 16 அகில இந்திய பொதுவேலை நிறுத்தத்தில் பங்குபெறுவதென்று அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் முடிவு செய்திருந்தது. பிப்ரவரி 6 அன்று கூடிய அவிகிதொச மாநில நிர்வாகக் குழு மாநில அளவில் ஊராட்சி தோறும் பரப்புரை இயக்கம் நடத்துவது, வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு திரட்டுவதென்று முடிவுசெய்திருந்தது. துண்டறிக்கை, சுவரொட்டி மூலம் பரப்புரை செய்யப்பட்டதுடன் ஊராட்சிகளில் ஊராட்சி கிராமங்களில் கிராமப்புர மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு திரட்டப்பட்டது. ஊர்கூட்டங்களும் நடத்தப்பட்டன.
கிராமப்புர மக்களுக்கு மோடி ஆட்சி செய்த 10 ஆண்டுகால துரோகம் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒழிக்கும் மோடி ஆட்சியின் சதித்திட்டம் பற்றிய வறியவர்களின் கோபத்தை கண்கூடாக காணமுடிந்தது.
வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, வீட்டுமனை, வீடு, கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் ஒன்றிய மோடி அரசின் பொய்யான அறிவிப்புகளும் போலியான சாதனைகளும் அம்பலப்படுத்தப்பட்டன. கள்ளக்குரிச்சி, கடலூர், விழுப்புரம்,மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுவேலை நிறுத்தக் கோரிக்கைகள், விவசாயிகள் தொழிலாளர் ஒற்றுமை குறித்து பரப்புரை இயக்கம் நடத்தப்பட்டது. அவிகிதொச மாநிலத் தலைவர்களும் முன்னணி ஊழியர்களும் பரப்புரையில் பங்குகொண்டு வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு திரட்டினர். மதுரை மாவட்ட பரப்புரை நிகழ்ச்சிகளில் தோழர்கள் ஈஸ்வரி,முத்துராக்கு கலந்துகொண்டு வழிநடத்தினர். கள்ளக்குரிச்சி மாவட்டம் கெடிலத்தில் அவிகிதொச நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அவிகிதொச மாவட்ட தலைவர்கள் கந்தசாமி ஏழுமலை, அவிமச மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் டி. கலியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற கூட்டுப் போராட்டத்தில் அவிகிதொச மாநிலச் செயலாளர் சி. ராஜசங்கர் தோழர்களுடன் கலந்து கொண்டார். விழுப்புரம் நகரில் அவிகிதொச பதாகையில் தோழர் சேகர் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறையில் நடைபெற்ற கூட்டுப்போராட்டத்தில் அவிகிதொச மாநிலப் பொதுச்செயலாளர் நா. குணசேகரன், அஇமுபெக தேசியக் குழு உறுப்பினர் மாதவி தோழர்களுடன் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் உள்ளிட்ட இடங்களில் அவிகிதொச நடத்திய மறியல் போராட்டங்களில் மாசிலாமணி, மாநிலச் செயலாளர் தவச்செல்வம், செல்லதுரை, இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் கண்ணய்யன் உள்ளிட்ட தோழர்கள் திரளான தோழர்களுடன் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் அவிகிதொச சார்பில் முழக்கங்களுடன் ஊர்வலமாகச் சென்று சாலைமறியல் நடத்தப்பட்டது. சாலைமறியலால் இருபுறமும் ஒரு கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து தடைபட்டது. மோடி ஆட்சியை தோற்கடிப்போம் என்று முழங்கியதோடு தில்லி விவசாயிகள் போராட்டத்தின் மீது நடத்தப்பட்டுவரும் காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திரளான பொதுமக்கள் கூடிநின்று மறியல் நிகழ்ச்சியைக் கண்டனர். அவிகிதொச மாவட்டச் செயலாளர் ஜோதிவேல் தலைமையில் நடைபெற்ற மறியலில் மாநிலத் தலைவர் பாலசுந்தரம், மாநில துணைப் பொதுச்செயலாளர் வீ.மூ. வளத்தான், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் மாநில அமைப்பாளர் ரேவதி, இசுக(மாலெ) மாநிலக் கமிட்டி உறுப்பினர் சி. ரெங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டையில் நடைபெற்ற கூட்டுப் போராட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம், அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளன மாநிலச் செயலாளர் சிவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அறந்தாங்கியில் நடைபெற்ற கூட்டுப்போராட்டத்தில் அஇமுபெக மாவட்டச் செயலாளர் மணிமேகலை, இகக (மாலெ) ஒன்றிய செயலாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)