அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் 9 ஆவது அகில இந்திய மாநாடு டெல்லி, எச்.கே.எஸ்.சுர்ஜித் பவனில் 30.9.2023 மற்றும் 1.10.2023 தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து 500 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முதல் நாள் நடைபெற்ற துவக்க மாநாட்டில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். எழுத்தாளர் அருந்ததிராய், நேகா சிங் ரத்தோர், நவ்சரண் கவுர், பாஷா சிங், சுதேஷ் கோயல், மீனா கோட் வான் மற்றும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய தேசிய பெண்கள் சம்மேளனம் ஆகியவற்றின் தலைவர்களும் உரையாற்றினர்.
இரண்டாம் நாள் மாநாட்டில் பல்வேறு பிரச்சனைகள் மீது விவாதங்கள் நடைபெற்றன. விவாதங்களுக்குப் பின்னர் அறிக்கை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 151 பேர் கொண்ட புதிய தேசியக் கவுன்சில் தேர்வு செய்யப்பட்டது. தோழர் ரத்திராவ் அகில இந்திய தலைவராகவும் தோழர் மீனா திவாரி அகில இந்திய பொதுச் செயலாளராகவும் மீண்டும் தேர்வு செய்யப் பட்டார்கள். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து 25 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ள பெண்கள் மசோதா, வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஒரு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் ரகசியமாக அறிமுகப் படுத்தப் பட்டது. இதுவே பாஜகவின் கெட்ட எண்ணத்தை வெளிக்காட்டுகிறது. பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்துவிட்டது என்பது போல் காட்டுகிறார்கள். ஆனால், நடைமுறையில் அதை அமல்படுத்த முடியாது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி எல்லை மறுவரையறை செய்த பின்புதான் அமல்படுத்தப் படும் என்கிறார்கள். இந்த மசோதா நிறைவேற்றப் படுவதற்கு 27 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த கால கட்டத்தில் வாஜ்பாய் 5 1/2 ஆண்டுள், மோடி 9 1/2 ஆண்டுகள் என பாஜகவின் கூட்டணி ஆட்சி பாதிக்கும் மேற்பட்ட காலம் ஆட்சியில் இருந்துள்ளது. தலித், மிகப் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு சட்ட பூர்வமாக தனி இடஒதுக்கீடுக்கான கோரிக்கையும் இருந்து கொண்டிருக்கிறது. இதற்கு அஇமுபெக முழு ஆதரவைத் தெரிவிக்கிறது. பெண்களை விலக்கி வைத்துவிட்டு சமூகநீதியைக் காணமுடியாது. இன்று பாஜகவும் சமூக நீதி பற்றி பேசுகிறது. ஆனால், பெண்களுக்கு சமூக நீதி என்றால், மோடி பெண்கள் ஒற்றுமை பற்றி பேசுகிறார். இந்த ஆணாதிக்க அமைப்பு முறையில், எல்லா சமூகத்திலும் பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களாகத் தான் இருக்கிறார்கள். தலித், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தின் பெண்கள் இரண்டு வழிகளில் உரிமைகள பறிக்கப்பட்டு பாதிப்புக்குள்ளாகிறார்கள். இன்றும் கூட அவர்களுக்கு கிடைக்கும் கல்வியும் வேலை வாய்ப்பும் மிகச் சொற்பமே. அதிலும் முஸ்லிம் பெண்கள் மிக அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். இந்த 33% இடஒதுக்கீட்டிற்குள், தலித், மிகவும் பிற்படுத்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறு பான்மை பெண்களுக்கு உரிய பங்கீடு வழங்கப் பட வேண்டும் என அஇமுபெக கோருகிறது.
2. கடந்த 5 மாதங்களாக மணிப்பூர் மிகக் கொடூரமான வன்முறையை சந்தித்து வருகிறது. நூற்றுக் கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். கொலை, தீ வைப்பு, பெண்கள் மீதான வன்முறை, பாலியல் வல்லுறவு, கூட்டு பாலியல் வல்லுறவு ஆகியவை நடந்து கொண்டிருக் கின்றன. மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. பிரிவு 353ன் கீழ் நிர்வாகம் மைய கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், ஒன்றிய அரசு அரசின் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மணிப்பூரின் முதல்வர் இன்னும் நீக்கப்பட வில்லை. ஒன்றிய அரசு ஊரடங்கை சில மாவட்டங்களுக்கு மட்டும் ஆறு மாதங்களுக்கு அறிவித்துள்ளது. சில மாவட்டங்களில் சுதந்திர மான செயல்பாடுகளுக்கு அனுமதித் துள்ளது. இது முற்றிலும் ஒரு தலைப்பட்ட நடவடிக்கை யாகும். மணிப்பூரின் நிவாரண முகாம்கள் மிக மோசமாக உள்ளதை முற்போக்கு பெண்கள் கழகத்தின் உண்மை அறியும் குழு நேரடியாகக் கண்டது. மத அடிப்படையில் பழங்குடி மக்களைப் பிரிக்கும் சதிச் செயல் நிறுத்தப்பட வேண்டும். மணிப்பூரின் முதல்வர் பதவியில் இருந்து பைரோன் சிங் நீக்கப்பட வேண்டும்.
3. சுகாதாரம், கல்வி என அனைத்திலும் தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது. அவை ஏழைப் பெண்களுக்கு எட்டாக் கனியாக மாறிவிட்டது. பொது பள்ளி முறை, ஒவ்வொரு ஊராட்சியிலும் பெண்களுக்கான அரசுக் கல்லூரி, பட்டப்படிப்பு வரை பெண்களுக்கு இலவசக் கல்வி ஆகியவை வேண்டும் என அஇமுபெக கோருகிறது. சுகாதாரத் துறையில் தனியார்மயம் தடுக்கப்பட வேண்டும். போதுமான மருத்து வர்கள், செவிலியர்கள், மருந்துகள், மருத்துவக் கருவிகளுடன் கூடிய சுகாதார மையங்கள் பஞ்சாயத்து மட்டத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும். அவை நிறைவேற்றப்படும் வரை தொடர் போராட்டங்களை முற்போக்கு பெண்கள் கழகம் நடத்தும்.
4. வேலைக்குச் செல்லும் பெண்கள் மத்தியில் நடக்கும் பாகுபாடு, பணியிடத்தில் நடக்கும் பாலியல் தொந்தரவுகள், வன்முறைகளுக்கு எதிராக, அவற்றிற்கு முடிவு காணும்வரை அஇமுபெக தொடர்ந்து குரல் கொடுக்கும். இன்று பல்வேறு துறைகளில், விவசாயத்திலும் கூட பெண்கள் ஆண்களைவிட குறைந்த கூலியைத் தான் பெறுகிறார்கள். தனியார் துறைகளில் பெண்கள் பணிப் பாதுகாப்பு அற்ற சூழ்நிலையில், அதிகப்படியான வேலைகள் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். பெண்கள் உரிமைகள் முதல் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை வரை பறிக்கப்படுகிறது. திட்டப்பணி யாளர்கள் . அரசு ஊழியர்கள் ஆக்கப்படவேண்டும்.
5. ஊட்டச் சத்து, சமையறை மற்றும் கழிவறையுடன் கூடிய வீடுகள், வயதான, கணவனை இழந்த, மாற்றுத் திறனாளி, தனியாக வாழும் பெண்களுக்கு மரியாதைக்குரிய அளவில் ஓய்வூதியம், வேலையில்லா பெண்களுக்கு உதவித் தொகை, அனைவருக்கும் ரூ.500க்கு எரிவாயு உருளை வழங்கப்பட வேண்டும் என்று அஇமுபெக கோருகிறது. வாழ்வாதாரத் திட்டம் என்ற பெயரில் சுய உதவிக்குழுக்கள் மோடி அரசால் உருவாக்கப்படுகின்றன. அவர்கள் கடன் பொறிக்குள் சிக்கித் தவிக்கிறார்கள். அனை வருக்கும் வாழ்வாதாரத்திற்கு, வேலைக்கு உத்தரவாதமளிப்பதும் வட்டியில்லா கடன் வழங்கப்பட வேண்டும்.
6.மதவெறியைத் தூண்டிவிட்டு பிளவுப டுத்துவதையும் சிறுபான்மையினர் மீதான துன்புறுத்தலையும் அஇமுபெக கண்டிக்கிறது. சாவித்திரிபாய் பூலே மற்றும் பாத்திமா செயிக் ஆகியோரின் வழி மரபை உயர்த்திப்பிடிக்கிறது.
7. பெரும் போராட்டத்திற்குப் பின்னர் LGBTQIA+ சமூகத்தினருக்கு ஓரினச் சேர்க்கையை குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377 உச்சநீதிமன்றத்தால் ஆதரவாக நீக்கப்பட்டது. பாஜக அந்த சமூகத்தினருக்கான சமத்துவத்தையும் கௌரவத்தையும் கொடுக்க மறுத்துவருகிறது. இந்தியாவில் ஓர் பாலின திருமணத்தைச் சட்ட பூர்வமாக்க ஒன்றிய பாஜக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. அனைத்து வகை திருமணங் களுக்கும் சமமாக ஏற்றுக் கொள்ளப்பட அஇமுபெக தொடர்ந்து போராடும்.
8. பொது சிவில் சட்டத்தின் பெயரால் மத ரீதியாக பெண்களை பிளவு படுத்தும் சதியை முறியடிக்க வேண்டும். பாலின நீதிக்கான சீர்திருத்தங்கள் தனிப்பட்ட மற்றும் சிறப்புச் சட்டங்களில் ஏற்படுத்துவதற்கான போராட்டத்தை அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் தீவிரப்படுத்திடவும் பெண்கள் விரோத மோடி அரசை வரும் தேர்தலில் ஆட்சியை விட்டு வெளியேற்றவும் மாநாடு உறுதியேற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)