1960 டிசம்பரில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் பிறந்த தோழர் திபங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) பொதுச் செயலாளராக செயலாற்றி வருகிறார். இந்தியாவில் ஒரு முன்னணி கம்யூனிஸ்ட் தலைவராகத் திகழும் தோழர் திபங்கர் அவர்களின் உறுதியான அர்ப்பணிப்பு மிக்க ஒப்பற்ற பங்களிப்பிற்கு இந்த விருது ஒரு சான்றாகும். அவரது ஒப்பற்ற வாழ்க்கை முழுவதையும், கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளை, இந்திய மக்களின் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக அர்ப்பணித்து, உண்மையான கம்யூனிச உணர்வுக்கு உதாரணமாகத் திகழ்கிறார் தோழர் திபங்கர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) பொதுச் செயலாளராக தோழர் திபங்கரின் தலைமையும் சமயோஜித வழிகாட்டுதலும் கட்சியின் கருத்தியல் மற்றும் திசைவழியை வடிவமைப்பதற்கும் எண்ணற்ற நபர்கள் கம்யூனிசக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு ஒரு மேலான சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்காக பணியாற்றவும் காரணியாக இருந்து கொண்டிருக்கின்றன.
தோழர் திபங்கர் ஒரு தலைவர் என்பதோடு கூடவே அவர் ஒரு மிகச் சிறந்த எழுத்தாளரும் சமகால அரசியலின் விமர்சகரும் ஆவார். அவரது எழுத்துகள் விரிவாக பல்வேறு அம்சங்களைக் கொண்ட இந்திய சமூகத்தை, குறிப்பாக தொழிலாளர் வர்க்கம், இந்திய விடுதலைப் போராட்டம், பகத்சிங்கின் வீர மரபு மற்றும் அம்பேத்கரின் விலைமதிப்பற்ற பங்களிப்புகள் ஆகியவற்றில் கவனம் குவித்து பகுப்பாய்வு செய்கிறது. அவருடை எழுத்துகள் மூலம், ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலைச் சமூகங்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் பற்றிய, விலைமதிப்பற்ற நுண்ணறிவுமிக்க பார்வையை வளர்த்தெடுக்கக் கூடிய ஒரு ஆழமான புரிதலை நமக்குத் தருகிறார்.
ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக தோழர் திபங்கர் முன்வைக்கும் ஆணிதரமான வாதங்கள் குறிப்பிடத்தக்கவை. அவர் அநீதிகளுக்கு எதிராக அச்சமின்றி குரல் எழுப்புகிறார். சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினரின் உரிமைகளுக்காக அயராது போராடுகிறார்; எண்ணற்ற தனிநபர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.
மேலும், தோழர் திபங்கர், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் கொள்கைகளை தொடர்ந்து விமர்சித்தும், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமத்துவ சமூகத்திற்காகவும் குரல் கொடுத்து வருகிறார். சமூக நீதிக்காக ஊசலாட்டம் இல்லாத அர்ப்பணிப்பு மிக்க அவரது செயல்பாடும். ஏற்றத் தாழ்வற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான அயராத முயற்சியும் அவருக்கு பரவலான மரியாதையையும் பாராட்டையும் பெற்றுத் தந்துள்ளது.
அவரது விதிவிலக்கான தலைமை பண்பு, கம்யூனிச கருத்தியலுக்கான அளப்பரிய பங்களிப்புகள், சமூக மற்றும் பொருளாதார நீதிக்கான இடைவிடாத நாட்டம், ஒப்பற்ற சாதனைகள் ஆகியவற்றினால் உண்மையான மக்கள் தலைவரான அவரை அங்கீகரிக்கும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தோழர். திபங்கர் அவர்களுக்கு "அம்பேத்கர் சுடர்' விருது 2023 வழங்கி கௌரவிக்கிறது.