சிங்கூரில் அரைகுறையான, கைவிடப்பட்ட நானோ தொழிற்சாலைத் திட்டத்திற்காக இழப்பீடு கோரிய வழக்கில், செப்டம்பர் 1, 2016 முதல் மீட்புக் காலம் வரை ஆண்டுக்கு 11% வட்டியுடன் ரூ. 765.68 கோடி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு வழங்க மூன்று பேர் கொண்ட நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்தப் பணத்தை மேற்கு வங்க தொழில் வளர்ச்சிக் கழகம் (WBIDC) கொடுக்க வேண்டும்.
கைவிடப்பட்ட திட்டத்திற்காகவும் வீணாகிப்போன விவசாய நிலத்திற்காகவும் மேற்கு வங்க மக்கள் மேலும் கூடுதல் சுமையைச் சுமக்கவிருக்கிறார்கள். இதைவிட அபத்தமானது, தான்தோன்றித்தனமானது, அநீதியானது எதுவும் இருக்க முடியாது. பல பயிர்களும் விளையக் கூடிய வளமான நிலத்தை கையகப்படுத்துவதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக சிங்கூர் திட்டம் கைவிடப்பட்டது. உள்ளூர் மக்கள் எதிர்க்கும் போது அவர்கள் மீது எந்த ஒரு திட்டத்தையும் திணிக்க முடியாது.
உண்மையில், மக்களின் எதிர்ப்பைச் சந்தித்த ஒரு திட்டத்திற்கு சிங்கூரும் ஓர் எடுத்துக்காட்டு. ஒடிசாவின் நியம்கிரி, கலிங்கநகர் மற்றும் போஸ்கோ முதல் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் வரை, கட்டாய நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் சீர்குலைவு அல்லது பெரிய அளவில் இடம்பெயரச் செய்தல் ஆகியவற்றின் காரணமாக இதுபோன்ற எதிர்ப்பைச் சந்தித்த பல சமீபத்திய நிகழ்வுகள் இருக்கின்றன.
நானோ காரைப் பொறுத்தமட்டில், அந்தக் கார் பற்றிய யோசனையே கோளாறானதாகிவிட்டது. அவசரமாக குஜராத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட அந்தத் திட்டம் அங்கேயும்கூட தோல்வியடைந்து விட்டது. விளைச்சல்களை நாசப்படுத்தி, ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரமான நிலங்களை, வாழ்வாதாரங்களை, வீடுகளை இழக்கச் செய்த ஒரு தவறான யோசனைக்காக, அரைகுறையான மற்றும் கைவிடப்பட்ட திட்டத்திற்காக இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கு வங்க மக்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும்.
நடுவர் மன்றத் தீர்ப்பு என்ற பெயரில் கார்பரேட்டுகளுக்கு கால்பிடிக்கும் இந்த வெட்கக்கேடான தீர்ப்பை மேற்கு வங்க மக்களும் அரசும் ஏற்க மறுக்க வேண்டும்.