பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் சாதனைகளை மதிக்கவும் பெண்களின் உரிமைகளை மேம்படுத்தவும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சர்வதேச பெண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இருப்பினும், பெண்கள் தினம் என குறிக்கப்பட்டுள்ள எட்டு மணிநேர வேலையின் வெற்றி, புதிய தொழிலாளர் சட்டங்களின் மூலம் தலைகீழாக மாற்றப்பட்டு வருகிறது என்பது நமது காலத்தின் நகைமுரணாகும். பணியிடங்களில் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தக்கூடிய சம வேலைக்கு சம ஊதியத்திற்கான உத்தரவாதம் இன்னும் அளிக்கப்படவில்லை. கிராமப்புற ஏழைகளுக்கு வேலை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட (நூறு நாள் வேலைத்திட்டம்) த்தின் சிக்கலான நடைமுறைகள் காரணமாக பெரும் பகுதி பெண்கள் இந்த திட்டத்தில் வேலைசெய்ய முடியாத நிலை உள்ளது. மதிய உணவுப் பணியாளர்கள், ஆஷா தொழிலாளர், அங்கன்வாடிப் பணியாளர்கள், இதர பணியாளர்கள் என லட்சக்கணக்கான பெண்கள் பல்வேறு அரசாங்கத் திட்டங்களின் கீழ், நாடு முழுவதும் வேலை செய்கிறார்கள்; பொது நலப்பணிகளுக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கும் இவர்கள், கவுரவ ஊதியம் என்ற பெயரில் அற்ப ஊதியமே பெறுகின்றனர்; தொழிலாளர் நலன்களை பெறுவதற்குக் கூட, இவர்கள் தொழிலாளராக அங்கீகரிக்கப்படவில்லை. கோவிட்-19 பெருந்தொற்றின் போது தங்கள் உயிரைப் பணயம் வைத்த தொழிலாளர் இவர்கள். மேலும், பெரும்பான்மையான பெண்களைக் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான தூய்மைப்பணித் தொழிலாளர், நிரந்தரப்படுத்தப்படவுமில்லை; அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படவுமில்லை. ஏற்றுமதி ஆடைகள் அல்லது எலக்ட்ரானிக் பொருட்களைத் தயாரிக்கும். நிறுவனங்கள் போன்ற அமைப்புசாரா துறைகளில் பெண்கள் அதிகமாக சுரண்டப்படுகிறார்கள்; குறைந்த ஊதியமே பெறுகிறார்கள். கழிவறைகள், குழந்தைகள் காப்பகம் போன்ற அடிப்படை வசதிகளும் மகப்பேறு சலுகைகளும் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. மாணவிகளுக்கும் பணிபுரியும் பெண்களுக்கும் மாதவிடாய் விடுப்புக்காக, சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஆதரவான பலன் கிடைக்கவில்லை; முடிவெடுக்கும் பொறுப்பை ஆட்சியாளர்களிடம் விட்டுவிட்டது நீதிமன்றம். அத்தியாவசியப் பொருட்களின் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, பணவீக்கம், ஜிஎஸ்டி ஆகியவை ஏழைகளை விளிம்பு நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது; அதனால், பற்றாக்குறையின் பாதிப்பையும் சுமையையும் பெண்கள் அனுபவிக்கிறார்கள்; மேலும், பாதுகாப்பற்ற, குறைந்த ஊதியம் பெறும் வேலைகளுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
மற்றொரு பக்கம், பெண்கள் கடினப்பட்டு வென்றெடுத்த உரிமைகள் காவிப் படையினரால் பறிக்கப்படுகின்றன. கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் வன்முறை செய்து, அவருடைய மூன்று வயது மகள் உட்பட 14 குடும்ப உறுப்பினர்களை கொலை செய்த குற்றவாளிகள், "நன்னடத்தை” பேரால் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு, அவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டதோடு, இனிப்புகளும் வழங்கி வரவேற்கப்பட்டது. இது தேசிய அவமானமாகும்.
நமது அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள மத சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமைக்குக்கூட உத்தரவாதம் இல்லை. கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் மீதான தாக்குதல்கள், லவ் ஜிகாத் (காதல் விடுதலை) என்ற பெயரிலான தாக்குதல்கள், ஒரே சிவில் சட்டத்தின் மதவெறி. அம்சம், ஜஹாங்கிர்புரி(தில்லி)யில் சிறுபான்மை மக்களின் குடிசைகளை புல்டோசர் வைத்து தரைமட்டமாக்கியது சிறுபான்மை மக்களுக்கு எதிரான கொடுமையின் கொடுமையாகும்.
அதோடு, இந்தியா: மோடி எனும் கேள்வி என்ற பிபிசி ஆவணப்படம் முதற்கொண்டு, பாடகி நேஹா சிங் ரத்தோருக்கு காவல்துறையின் அறிவிப்பாணை வரை, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களும் கலைஞர்கள் அச்சுறுத்தப்படுவதும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான இத்தகைய தாக்குதல்கள் அன்றாட நிகழ்வாகி வருகிறது. கலாச்சார முனையில், சனாதனதர்மத்தின் வெற்றியாளர்களுடைய ஆணாதிக்க, சாதியக் கட்டுப்பாட்டு ஆணைகளால் பெண்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். காதலர் தினத்தன்று, பசுக்களை அணைக்கும் தினத்திற்கான (அவர்களது) அழைப்பு அழைப்பு மிக சமீபத்தியதாகும். பெண்களின் உடல்களை ஒழுக்கநெறி அடிப்படையில் கட்டுப்படுத்தும் சம்பவங்கள், கல்வி வளாகங்களிலும் பணி யிடங்களிலும் வளர்ந்து வருகின்றன. பெண்களின் விருப்பத்தேர்வு, கருத்துச் சுதந்திரம் ஆகியன கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறைச் சூழலுக்கு தீர்வுகாண பெண்கள்இயக்கம் ஈடுபட்டுள்ளது.ஒரு ஜனநாயக அமைப்பில், பல்வேறு வகையான வன்முறைகள் உள்ளன; குடும்பத்திலோ பணியிடத்திலே இந்த வன்முறைகளை கட்டுப்படுத்த பல்வேறு சட்டங்கள் இருந்தபோதிலும், அச்சட்டங்கள்தான் தோல்வியடைந்தன! தனது குடிமக்களை குறிப்பாகப் பெண்களைப் பாதுகாக்க, இந்திய ஜனநாயகம் தவறிவிட்டது. சமூக வெளிகளான மதம், கல்வி, பணியிடம், பொழுதுபோக்கிடம், அல்லது எந்தவொரு நிறுவனமும் பெண்களை குறிவைத்துத் தாக்கும் வெளிகளாக மாறியுள்ளன. பெண்கள் இயக்கம் வன்முறைக் எதிராகப் போராடி வருகிறது. ஆனாலும், ஷ்ரத்தா கபூர் கொலை போன்ற கொடூர சம்பவங்கள் நடக்கின்றன. டெல்லியில் கொடூரமான முறையில் நடைபெற்ற நிர்பயா பாலியல் வன்முறை வழக்கு வர்மா கமிட்டியின் பல பரிந்துரைகளுக் வழிவகுத்தது. ஆனால், விரைவு நீதிமன்றங்கள் எதுவும் இல்லாத நிலையில், பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் இன்னும், தீர்க்கப்படாமலே இருக்கும் நிலையில் அந்தப் பரிந்துரைகள் எதுவும் செயல்படுத்த படாமலேயே உள்ளன. நீதித்துறை, சட்டமன்றம் அல்லது ஊடகங்கள் என அனைத் ஜனநாயக அமைப்புகளும் காவிப் படையின் ஆணாதிக்க கட்டுப்பாட்டு ஆணைகளுக் இரையாகிவிட்டதாகவே தோன்றுகிறது! இது சங்கிகளின் அமுத காலமாகும்! கார்ப்பரேட் இந்துத்துவா சக்திகளால் நடத்தப்படும் பாசிச வன்முறையை எதிர்த்து ஒன்றுபடுவோம்!
நாங்கள் கோருகிறோம்:
1. சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும்.
2. ஆஷா, மதிய உணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி, தூய்மைப் பணியாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை நிரந்தரம் செய்யப்பட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்.
3. மகாதேஊவேஉதி-தின் கீழ் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலையும், அதைப் பெறுவதற்கான எளிய வழிமுறையும் வேண்டும்.
4. பில்கிஸ் பானுவிற்கு நீதி வழங்க வேண்டும்.
5. ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.
ஆணாதிக்கம், மதம், சாதி மேலும் பெருந் தொழில் குழும, இந்துத்துவா பெருங்கூட்டணி பாசிசத்திற்கு எதிராகப் போராடுவோம்! சமத்துவத்திற்காகப் போராடுவோம்!
-அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம்
*(மார்ச் 8 உழைக்கும் பெண்கள் நாளை ஒட்டி பெண்கள் கழகத்தின் மய்ய அமைப்பால் வெளியிடப்பட்ட அறிக்கை)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)