அதிமுக-பாஜக பிற்போக்குக் கூட்டணியை வென்று, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, 2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போது, 'மாநிலத்திற்கென புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும், தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கென தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்றை இந்த அரசு நியமிக்கும்' என அறிவிக்கப்பட்டது. 2022 ஜூன் 1 அன்று தமிழக அரசு அரசாணை எண் 98யை வெளியிட்டது. தனித்துவமான கல்விக்கொள்கையை உருவாக்கு வதற்கான உயர்நிலை குழு ஒன்றை அந்த அரசாணை அமைத்தது. அவ்வாறு அமைக்கப் பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழு வின் உறுப்பினர் ஒருங்கிணைப் பாளர் பொறுப் பில் பேரா. ஜவஹர் நேசன் செயல்பட்டார்.
பேரா. ஜவஹர் நேசன் கடந்த 10 மே அன்று தனது பொறுப்பிலிருந்து விலகினார். தமிழ்நாட்டுக்கானத் தனித்துவமிக்க கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு உருவாக்கப் பட்ட கமிட்டியில் அதிகார வர்க்கத்தின் (முதல்வரின் தனிச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன்) தலையீடு இருக்கிறது என்றும், தமிழ்நாட்டின் கல்விக்கொள்கையில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை (2020)ன் அம்சங்கள் சில இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்யப்பட்டதாக வும் அதற்காக ஒருமையில் அழைத்து மிரட்டப் பட்டதாகவும் பேரா. ஜவஹர் நேசன் குற்றம் சொன்னார். குற்றச்சாட்டுக்கு ஆளான உதயச் சந்திரன் மே 13 அன்று, வழக்கம்போலான சரிக்கட்டுதல் ஒன்றில், வேறு பொறுப்புக்கு மாற்றப்பட்டார். மேற்படி கூற்றை உதறித் தள்ளிய தமிழ் நாடு மாநில அரசு, கமிட்டியைச் சற்று மாற்றியமைத்துவிட்டு, விரைவில் கல்விக் கொள்கை வெளியிடப்படும் என்று சொன்னது. குற்றச்சாட்டுகள் குறித்து எந்த பதிலும் இல்லை. முதலமைச்சர் ஸ்டாலினிடம் புகார் அளித்திருந்த தாகச் சொன்ன ஜவஹரின் அறிக்கைக்கு பதில் சொல்லப்படவும் இல்லை.
ஜவஹர் நேசன் பல நாடுகளில் பணியாற்றிய கல்வியாளர். சவீதா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறந்த கல்வியாளர், கல்வி குறித்த ஆய்வாளர் என்று பெயர் பெற்றவர். உலகில் இதுவரை வெளிவந்த கல்விக்கொள்கைகளிலேயே மிகவும் பிற்போக் கானது என்று உறுதியாகக் கூறினார். அந்த உறுதியின் காரணமாகவோ அல்லது வேறு எந்த காரணத்தினாலோ ஜவஹர் நேசன் தமிழக அரசின் தனித்துவமிக்க கல்விக்கொள்கையை வரைவதற்கான கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அவ்வாறு நியமிக்கப்பட்ட பேரா. ஜவஹர் நேசன், தான் கடும் நெருக்கடியை எதிர்கொண்ட தாகவும், அதனால் வெளியேறியதாகவும் சொல்கிறார். "உலகம் முழுவதிலுமிருந்து 113 சிறந்த கல்வியாளர்களைத் தேர்வு செய்து அவர்களுடன் விவாதித்து வரைவுக் கொள்கை உருவாக்கப்பட்டு குழுத் தலைவருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. முதல்வரின் தனிச்செயலர் (உதயச்சந்திரன்) விரும்பும் வகையில் அவர் சொல்லும், குழுவுக்கு சம்பந்தப்படாத சிலரின் ஆலோசனையை ஏற்று, அறிக்கை தயாரிக்க, அழுத்தம் கொடுக்கப்பட்டது." என்று பேரா. ஜவஹர் நேசன் தன் விலகலுக்கான காரணத்தைச் சொல்கிறார். மேலும், "தமிழக முதல்வருக்கும் தெரியப்படுத்தினேன். விரிவான அறிக்கையோடு புகார் அளித்தேன். எந்த பதிலும் இல்லாத சூழலில் பொறுப்பு விலகினேன்"என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். ஜவஹர் நேசன்.
தமிழ்நாடு உயர் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மதுரை கூட்டம்:
இந்தச் சூழலில் பேரா. ஜவஹர் நேசன் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று, கடந்த மே 27 அன்று தமிழ்நாடு உயர்கல்விப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மதுரையில் 'தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கை எதிர்கொள்ளும் சவால்கள்' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. பேராசிரியர் முரளி கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். கூட்டத்தில் பேராசிரியர் மூட்டா விஜயகுமாரும் மதுரை பல்கலையைக் காப்போம் இயக்கத்தைச் சேர்ந்த பேரா. சீனிவாசனும் உரையாற்றினர். பேராசிரியர் ஜவஹர் நேசன் தனது நிலையை விளக்கிய பின்னர், பிரபா. கல்விமணி (மக்கள் கல்வி இயக்கம்) அவர்களும், கி.வெங்கட்ராமன் (தமிழ் தேசிய பேரியக்கம்) அவர்களும், மதுரை அகில இந்திய மாணவர் கழகத்தைச் சேர்ந்த தோழர் அபிதா அவர்களும் ஜவஹர் நேசன் பேசியவை குறித்து கருத்துரை வழங்கினர்.கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் தங்கள் ஆதரவை முன்வைத்தனர். தமிழக ஆசிரியர் இயக்கங்களில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (AUT) தலைவர் காந்திராஜன் தமிழகத்திற்குத் தேவையான கல்விக் கொள் கையை உருவாக்குவதற்கான இயக்கத்தில் தாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றார்.
தமிழக கல்வி எதிர்கொள்ளும் பிரச்சனை களைப் பற்றிய ஆய்வு அறிக்கை (Problem Statement) முடிந்துவிட்டது என்றும், அந்த அடிப்படையில் தமிழகத்திற்கான தனித்துவம் உள்ள கல்விக் கொள்கை அறிக்கை சில மாதங்களில் எழுதப்பட்டு வெளியிடப்படும் என்றும் ஜவஹர் நேசன் அறிவித்தார். மேலும், பேரா ஜவஹர் நேசன், தமிழக அரசு தனித்துவமிக்க மக்களுக்கான கல்வித் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றார்.
தமிழகத்திற்குப் பொருத்தமான கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு உலகமெங்கும் பரவியுள்ள 113 கல்வியாளர்கள் பங்களிப்பு செய்துள்ளனர் என்ற பேரா. ஜவஹர் நேசன், மிச்சமுள்ள வேலையை நிறைவு செய்யும் வேலையில் மேலும் பலரும் முன்வந்து உழைக்கின்றனர் என்றார். மிக முன்மாதிரியான, மிகவும் மக்கள் சார்புள்ளதாக, மிகச்சரியான அறிவியல் அணுகுமுறை கொண்டதாக, தமிழகத்தின் பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வு தருவதாக தாங்கள் முன்வைக்கப் போகும் தமிழகத்திற்கான தனித்துவமான கல்விக்கொள்கை அமையும் என்று பேரா ஜவஹர் நேசன் உறுதிப்படச்சொன்னார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்கலைக்கழக, கல்லூரி பள்ளி ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள் நிகழ்ச்சிக்குத் திரளாக வந்திருந்தனர். தமிழ்நாடு உயர் கல்வி காப்போம் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு வந்த கல்வியாளர்களும், மாணவர்களும், கல்விச் செயல்பாட்டாளர்களும், முற்போக்கான, மக்கள் நலனுக்கான, அறிவியல் சிந்தனை/ வாக்கை முறைக்கான, மத, சாதி பிளவுகளை வேரறுக்கும் கல்விக்கான தாகத்தை வெளிப்படுத்தினர்.
மக்கள் தேடும் கல்வியை யதார்த்தமாக்க இன்றைய திமுக அரசின் கல்விக்கொள்கையின் மையமாக இருக்கும் தனியார்மயத்தின் மீது, வணிகக் கல்வியின் மீது தாக்குதல் தொடுத்தாக வேண்டும். அந்தப் பாதையில் தமிழகத்தின் முற்போக்கு மாணவர்களும், ஆசிரியர்களும், கல்விச் சமூகமும் கரம் கோர்த்தாக வேண்டும். முற்போக்கான கல்விக்கொள்கையை உருவாக்கும் உணர்வு கல்விச் சமூகத்தின் மத்தியிலும் முற்போக்கு அறிவாளிகள் மத்தியிலும் வலுவான பேருணர்வாக இருப்பதைக் கூட்டம் காட்டியது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)