தமிழ்நாடு அரசாங்கம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. அதற்கடுத்து தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையும் வெற்று ஆரவாரம்தான் என அம்பலமாகியுள்ளது. முழுமையாக வேளாண் நிதிநிலை அறிக்கையைப் பரிசீலனை செய்தால் ஏமாற்றம் தரும் நிதிநிலை அறிக்கையாகவே இருக்கிறது.
விவசாயத்திற்கு ஆதாரமான நீர்நிலைகளை மீட்டெடுக்க, பல்வேறு வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளை கட்டமைக்க, விவசாயிகளின் வாழ்வா சாவா எனப்படும் இயற்கை பேரிடர்கள், பயிர்க் காப்பீடுகள், விவசாய கடன்கள் மற்றும் தள்ளுபடிகள் வரை ஒதுக்கப்பட்ட நிதி மிகமிகக் குறைவானதே !
சங்க இலக்கியங்கள் துவங்கி, நவீன வேளாண் நிபுணர்கள் வரை மேற்கோள் காட்டி விவசாயத்தின் முக்கியத்துவத்தை பட்ஜெட் அறிக்கை பாராட்டுகிறது; ஆனால், வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது, அமைச்சர் இந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் கருத்துகள் ணைக்கப்பட்டுள்ளன." எனக் கூறியதில் சிறிதளவும் உண்மையில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை, கருத்து கேட்புக் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளை நிறைவேற்றும் வகையில் இந்த அறிக்கை இல்லை.
விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலை தரப்பட்டதா?
"தமிழ்நாடு அரசின் கடந்த இரண்டு வேளாண் பட்ஜெட்டுகள் விவசாயிகளுக்கு உரிய வருவாய் கிடைப்பதையும் அவர்களின் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை ஈட்டுவதையும் உறுதிப்படுத்துவது மற்றும் விவசாயத்தில் அறிவியல் முறைகளைப் பயன்படுத்துவதையும் விவசாயத்தில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து அதிக உற்பத்தி இலக்கை எட்டுவதையும் நோக்கமாகக் கொண்டது."
'விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உறுதியான லாப விலை கிட்டினால்தான் விவசாயிகள் ஊக்கம் பெறுவார்கள்; இதன் பின்னணியில், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மூலம் விவசாயிகளிடமிருந்து, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிக விலையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது." என வேளாண் அமைச்சர் சட்டமன்ற உரையில் ஆரவாரமாகத் தெரிவித்தார். அமைச்சர் சொல்வது உண்மையா? நெல்லுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.100 மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூ.75 என்பவை தான் தற்போதைய வேளாண் நிதிநிலை அறிக்கை அறிவிப்புகளாக உள்ளது. கரும்புக்கு டன் ஒன்றுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சிறப்பு ஊக்கத் தொகை ரூ.195யை மட்டுமே இந்த ஆண்டும் அறிவித்துள்ளார்கள்.
சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதி, 'நெல்லுக்கு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500, கரும்புக்கு விலை டன் ஒன்றுக்கு ரூ.4000' என்பதாகும். இந்த வாக்குறுதிகள் குறித்து நிதிநிலை அறிக்கையில் எதுவுமில்லை. இடுபொருட்கள் விலை உயர்ந்து, முதலீட்டுச் செலவுகள் உயர்ந்து வருவதைப் பற்றிய அக்கறை சிறிதளவு கூட வேளாண் அறிக்கையில் காணப்படவில்லை. மேலும், வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குறித்து இந்த அறிக்கை கவனம் செலுத்தவில்லை; குறைந்தபட்ச ஆதார விலையைத் தீர்மானித்து, தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு விநியோகம் செய்யும் திட்டங்கள் எதுவும் அறிக்கையில் இல்லை.
வேளாண் உற்பத்தியை அதிகரிக்க தேவை நிலச்சீர்திருத்தம் அல்லவா ?
சட்டமன்றத்தில் வேளாண் அமைச்சர்,“தமிழக விவசாயத்தின் தற்போதைய நிலைமை யானது, விவசாய நிலங்கள் வாழ்விடங்களாக மாற்றப்படுகின்றன. விவசாய நிலங்களின் பரப்பளவு வேகமாக குறைந்து வருகிறது. எனவே, உற்பத்தியை அதிகரிப்பது காலத்தின் தேவை... புன்செய் / வறண்ட நிலத்தில் நன்கு வளரும் பயிர் வகைகளை உருவாக்குவது அவசியமாகிறது. இதன் வழியாக அத்தகைய நிலத்தின் உற்பத்தி திறனும் அதிகரிக்கிறது... பல்வேறு துறைகளின் முயற்சிகள் மூலம் மட்டுமே விவசாயத்தை விரிவாக்க முடியும்... அடுத்த ஆண்டில், 127 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு, மொத்த உணவு தானிய உற்பத்திக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.” "கடந்த மே 2021ல் திமுக அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதி லிருந்து அமலாக்கப்பட்ட பல்வேறு நீண்டகால திட்டங்கள் வாயிலாக, 1,93,000 ஹெக்டேர் நிலப்பரப்பு கூடுதலாக சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டது." என்றார். மேலும் அவர்,
"தமிழ்நாட்டின் சாகுபடி நிலப்பரப்பை அதிகப்படுத்த வேண்டும்" என்ற வேளாண் கொள்கையை கொண்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு திட்டத்தில், "நிகர சாகுபடி பரப்பினை உயர்த்துவது' பற்றி தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது என்றும் கூறினார். ஆனால், வேளாண் நிதிநிலை அறிக்கை "வறண்ட நிலங்களில் விவசாயத்தில் அறிவியல் முறைகளைப் பயன்படுத்துவது, விவசாயத்தில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து அதிக உற்பத்தி இலக்கை எட்டுவது'' ஆகியவற்றை மட்டுமே வழிகாட்டுதல்களாக முன்வைக்கிறது. நிலமுள்ள விவசாயி தனது சாகுபடி நிலத்தை தக்க வைத்துக் கொள்ளாமல், விவசாயி உற்பத்தி செய்யும் விளைபொருள் களுக்கு இலாபகரமான விலை கிடைக்காமல், உற்பத்தி எப்படி அதிகரிக்கும், வேளாண்மை எப்படி செழிக்கும்?
சாகுபடி நிலப்பரப்பை அதிகரிக்க, அவசியமானது, தீவிர நிலச்சீர்திருத்தம். “வளர்ச்சித் திட்டங்களுக்கு நிலம் தேவை என்ற பெயரால்", விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத கார்ப்பரேட் முதலாளித்துவ ஆதரவு திட்டங்களுக்காக, சிறு குறு விவசாயிகளை நிலங்களை விட்டு வெளியேற்றி சாகுபடி நிலப்பரப்பைக் குறைக்க கூடாது. மாறாக, சாகு படி நிலப்பரப்பை அதிகரிக்க தீவிர நிலச்சீர்திருத் தங்கள், ஆக்கபூர்வ நிர்வாக நடவடிக்கைகளை அமலாக்க வேண்டும்.
அ) தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு வகையான அரசு புறம்போக்கு நிலங்களில் விவசாயம் செய்து வரும், குடியிருந்து வரும் விவசாயிகளுக்கு பட்டா உரிமைகள் வழங்கிட வேண்டும்; மேலும், வேளாண் உற்பத்தியை அதிகரிக்க உள்கட்டமைப்பு வசதிகளையும் அவர்களுக்கு உருவாக்கித் தரவேண்டும்.
ஆ) வனப்பகுதிகளை ஒட்டி, சாகுபடிக்குக் கொண்டு வரப்படாமல், புல் புதர்களாக இருந்த தரிசு நிலங்களை நெல், வாழை, தென்னை, மா, காய்கறிகள், மலர்கள் பொன் விளையும் என பூமிகளாக மாற்றிய பழங்குடியினர், பட்டியல் சாதி, மிகவும் பிற்பட்ட ஏழை விவசாயிகளை பாரம்பரிய நிலங்களிலிருந்து பலவந்தமாக கடந்த கால அரசாங்கங்கள் வெளியேற்றின. இதனால், பொன் விளைந்த விவசாய நிலங்கள் மீண்டும் புல்புதர்களாக, காடுகளாக மாறிவிட்டன. இவை அவரவர்களுக்கே திரும்பி வழங்கப்பட்டால், சாகுபடி பரப்பு அதிகரிக்கும்; வேளாண் பொருட்கள் உற்பத்தி உயரும்.
இ) கோவில்கள், மடங்கள் மற்றும் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு சொந்தமான இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் குத்தகை விவசாயம் செய்துவரும் ஏழை, சிறு, குறு விவசாயிகளுக்கு அவரவர் நிலங்களை சொந்தமாக்க வேண்டும். இதனால், கிணறுக ளுக்கான மின்சார இணைப்புகள், கடன் உதவிகள் மற்றும் பல்வேறு உள்கட்டுமான வசதிகளையும் பெற்று குத்தகை விவசாயிகள் மிகுந்த உற்சாகத்துடன் முப்போகமும் சாகுபடியில் ஈடுபட்டு வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்துவார்கள்.
நிவாரணங்களா, கண்துடைப்புகளா ?
நிதிநிலை அறிக்கையில், "இயற்கைப்பேரிடர்களால் ஏற்படும் வருமான இழப்பி லிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாது காக்க, பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ், 2021-22ஆம் ஆண்டில், 26 லட்சம் விவசாயிகள் 40.74 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை பதிவு செய்துள்ளனர். காப்பீட்டுப் பிரீமியம் மானியமாக ரூ.1,695 கோடி வழங்கிய தமிழக அரசு, இதுவரை 6.71 லட்சம் விவசாயி களுக்கு இழப்பீடாக ரூ.783 கோடி வழங்கி யுள்ளது." "வடகிழக்கு பருவமழை மற்றும் 2023 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 1.82 லட்சம் விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உள்கட்டமைப்பு மானியமாக ரூ.163.6 கோடிக்கான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.
இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டுத் திட்டம் என்பது இருந்தாலும், உண்மையான இழப் பீட்டை விவசாயிகளால் பெற முடிவதில்லை; உரிய இழப்பீடுகளை வழங்காமல், தனியார் கார்ப்பரேட் காப்பீட்டுக் கம்பெனிகள் காப்பீட்டுத் தொகையை கொள்ளையடித்துக் கொண்டிருக்கி றார்கள். இதனால், கடனாளியாகும் ஏழை, நடுத்தர விவசாயிகளைப் பாதுகாக்க நிதிநிலை அறிக்கை தகுந்த மாற்று காப்பீட்டு வழி முறை களை முன்வைக்கவில்லை. அறிக்கையில் பயிர் காப்பீட்டுக்காக ஒதுக்கியுள்ள ரூ.2337 கோடியில், விவசாயிகளுக்கு எவ்வளவு போய் சேரும்?
பயிர் கடன்களும், கடன் தள்ளுபடிகளும்
சிறு குறு, நடுத்தர விவசாயிகள் உயிர்களைப் பறித்துக் கொண்டு இருக்கும் 'கடன்களிலிருந்து விடுதலை' செய்வதற்கு கடன் தள்ளுபடிகள் பற்றிய அறிவிப்பு எதுவும் அறிக்கையில் இல்லை. வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் பயிர்க் கடன்களுக்கு ரூ.14,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும் கிராமப்புற புதிய பணக்காரர்கள், அரசியல் வாதிகள், ஊழல் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ள வேளாண் கூட்டுறவு வங்கிகளின் மூலமாக வழங்கப்படும் பெருமளவு பயிர்க்கடன்கள், பணக்கார விவசாயிகளுக்கும் நிலப்பிரபுக்க ளுக்கும்தான் செல்கிறது. சிறு,குறு விவசாயிக ளுக்கு பயிர்கடன்கள் சென்று சேருவதற்கான உத்தரவாதம் எதுவும் அறிக்கையில் இல்லை.
வேளாண் நிதிநிலை அறிக்கையை வெற்று ஆரவார அறிவிப்புகள் என்று சொல்வது ஏன்?
அறிக்கையில், தேவையான நிதி ஒதுக்கீடு கள் காணப்படவில்லை. "கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி” திட்டத்தில், 2504 ஊராட்சி களுக்கு ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. அதாவது, ஒரு ஊராட்சிக்கு ரூ.9 இலட்சம் வழங்கப்படும். இந்த தொகையில் தான், பழங்கள், தென்னங் கன்றுகள் வழங்குதல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், சொட்டுநீர் பாசனம், சோலார் சக்தி வழங்குதல் மற்றும் எஸ்சி, எஸ்டி விவசாயிகளுக்கு ஆள்துளை கிணறுகள் அமைக்க நிதி வழங்குதல் வரை செய்ய வேண்டும்!
"தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்' திட்டத்தில், 25 மாவட்டங்களில் உற்பத்தியை உயர்த்த நிதி ஒதுக்கிடு ரூ.82 கோடி. அதாவது, ஒரு மாவட்டத்திற்கு ரூ.3.5 கோடி.
"அங்கக வேளாண் கொள்கை" Organic farming பற்றிய ஆராவார அறிவிப்பு, தனியாக ஒரு அறிக்கை எல்லாம் வெளியிடப்பட்டுள்ளது. நமது பாரம்பரிய இயற்கை விவசாயத்திலிருந்து விலகி வந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. வீரிய ரக விதைகள் சார்ந்த விவசாயம் தான் நடைமுறையில் உள்ளது. அவற்றை மாற்றி அமைக்க அரசிடம் உள்ள கொள்கை என்ன வென்றே தெரியவில்லை. இது ஏராளமான நிதி கோரும் மாபெரும் பரிசோதனை முயற்சியாகும். ஆனால், அங்ககத் தொகுப்புகளுக்கு ரூ.26 கோடி நிதி மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு 5 ஆண்டுக ளுக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு மட்டுமே அறிவிப்பில் உள்ளது.
வேளாண்மையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை புகுத்துவது என்பதற்காக, எந்திரமயமாக்கத்திற்கு வெறும் ரூ.125 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 60,000 சிறு குறு விவசாயிகள் மற்றும் 30,000 விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.2500 மதிப்புள்ள வேளாண் கருவிகளை வழங்குவார்கள்! தோட்டக்கலை பட்டதாரிகளை தொழில் முனைவோராக்க ரூ.2 லட்சம் வழங்கப்படும்! என்று சொல்லும் அறிக்கையில் எவ்வளவு பேருக்கு, எவ்வளவு மொத்த நிதி ஒதுக்கீடு என்பது இல்லை.
மாடு, ஆடு வளர்ப்புக்கு ரூ.50 கோடியும் இலட்சக்கணக்கான பனை விவசாயிகள் மேம்பாட்டுக்கு ரூ. 2 கோடி மட்டுமே ஒதுக்கீடு!
காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிக்குவெறும் 90 கோடி ரூபாயும் காவிரியின் கடை மடைக்கு பாசன நீர் அனுப்ப வாய்க்கால் தூர் வார வெறும் ரூ.5 கோடி மட்டுமே.
*புதிய பாசன திட்டங்கள் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்ப டுவதற்கு நிதி ஒதுக்கீடு இல்லை.
..இப்படியாக, பட்டியல் நீள்கிறது.
தேவை, ஒரு பொது விவாதம்!
இத்தகைய வேளாண் நிதிநிலை அறிக்கை களை வெளியிடுவதால் மட்டுமே தமிழ் நாட்டு விவசாயத்தில் மாற்றங்கள் வராது. தமிழ் நாட்டுவிவசாயம் தீவிர மாற்றங்களைக் கோருகிறது. நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில், வேளாண் நிதிநிலை அறிக்கை பற்றிய ஆக்கபூர்வமான விவாதங்களில் ஈடுபட வேண்டும். இது ஒருபுற மிருக்க, விவசாய சங்கங்கள் மற்றும் முற்போக்கு வேளாண் பொருளாதார அறிஞர்கள், தமிழ் நாட்டு வேளாண்மையை மேம்படுத்த மேற்கொள் ளப்பட வேண்டிய தீவிர நடவடிக்கைகள் பற்றிய பொது விவாதத்தை கட்டமைக்க வேண்டும். பாமகவின் நிழல் பட்ஜெட் போல் அல்லாமல் களத்திலுள்ள இடது செயல்வீரர்கள் சேர்ந்து ஒரு இடதுசாரி செயல் திட்டம் உருவாக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)