பரந்தூர் விமானநிலையம், காட்டுப்பள்ளி துறைமுகம், என்எல்சி சுரங்கங்கள், சிப்காட் தொழிற்சாலை வளாகங்கள், எட்டுவழிச் சாலை எனத் தமிழ்நாட்டில் பல்வேறு கார்ப்பரேட் திட்டங்களுக்காக விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக விவசாயிகள், மீனவர்கள், பொது மக்கள் வலுவான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்திக் கொண்டுவரும் பின்னணியில், கடந்த ஏப்ரல் 21, 2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட "தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களுக்கான) என்ற சட்டம் 2023" (TamilNadu Land Consolidation (for Special Projects) Act 2023) விவசாயிகள் விரோத, சுற்றுச்சூழல் விரோத மசோதா சட்டமன்றத்தில் விவாதங்கள் இல்லாமல் நிறைவேறியது மட்டுமல்லாமல், தற்போது தமிழ்நாடு ஆளுநர் கையெழுத்தும் பெற்று அதிகாரமிக்க சட்டமாகியுள்ளது.
நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட பல்வேறு சட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்தி ருக்கும் தமிழ்நாடு ஆளுநர், சிறப்புத் திட்டங்களுக்கானச் சட்டம் என்ற பெயரில், கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு ஆதரவான, நீர்நிலைகளை அழிக்கும், விவசாய நிலங்களை கபளீகரம் செய்யும் தமிழ்நாடு நில ஒருங்கி ணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023க்கு மட்டும் வேகவேகமாக ஒப்புதல் அளித்துள்ளார்.
ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள், நீரோடைகள், வாய்க்கால்கள் அமைந்துள்ள 100 ஹெக்டேருக்கு (சுமார் 250 ஏக்கர்) குறைவில்லாத நிலங்களை, சிறப்புத் திட்டங்களுக்கு என்ற பெயரில், பல்வேறு தேவைகளுக்கும் வழங்க லாம். அதாவது, இந்த சட்டத்தின்படி, 100 ஹெக்டேருக்கும் குறையாத ஒரு இடத்தில் நீர்நிலை, ஓடை, வாய்க்கால் இருந்தாலும், அந்த இடத்தில் உள்கட்டமைப்பு, வணிகம், தொழில்துறை, வேளாண் சார்ந்த திட்டத்தை ஒரு நிறுவனம் செயல்படுத்த விரும்பினால், அத்திட்டத்துக்கு சிறப்புத் திட்ட அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பிக்கலாம்; சிற்சில சம்பிரதாய நடைமுறைகளுக்குப் பிறகு நிபந்தனைகளுடன், தனியார் நிலங்களை ஒட்டியுள்ள / திட்டப் பகுதிக்குள் அமைந்துள்ள ஏரி, குளங்கள், ஓடைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.
அப்பட்டமான கார்ப்பரேட் ஆதரவு திட்டம்
இந்த சட்டத்தின் விதிகள், விளக்கங்கள் பின்வருமாறு உள்ளன:
1)"சிறப்பு திட்டம்" எனப்படுவது உள்கட்ட மைப்பு, தொழில்துறை, வணிகம் அல்லது விவசாயத் திட்டம் என எவர் ஒருவரும் செயல்படுத்த விரும்பும் நூறு ஹெக்டேருக்கு (சுமார் 250 ஏக்கருக்கு) குறையாத நிலம் தேவைப்படும் திட்டம் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட எந்தவொரு திட்டமும் "சிறப்பு திட்டம்" ஆகும்.
2) "திட்ட நிலம்" என்பது ஒரு திட்டத்திற்கு தேவையான ஒட்டுமொத்த நிலங்கள், அதாவது, திட்டத்தை முன்மொழிபவருக்கு சொந்தமான நிலம் மட்டுமல்லாமல், திட்டப்பகுதிக்குள் ஆங்காங்கே உள்ளே அரசு நிலங்கள் அல்லது அரை அரசு சார்ந்த நிறுவன நிலங்களும் உள்ளடங்கும்.
3)" நிபுணர் குழு" என்பது திட்ட முன் மொழிவின் மீது பொது விசாரணை நடத்தும் அமைப்பு மட்டுமல்லாமல் இத் திட்டப் பகுதிக்கு சம்பந்தப்பட்ட நபர்களின் பார்வை களையும் உள்ளடக்கி, திட்ட முன்மொழிவை அடிப்படையாகக் கொண்டு நில ஒருங்கி ணைப்பு வரைவையும் தயாரிக்கும் அமைப்பாக திகழுமாம்!?
4) 'இத்தகைய நிலங்களை வாங்குவதில்/ கையகப்படுத்துவதில் சட்டரீதியான விதி முறைகள், ஆட்சேபணைகள் எதுவும் இல்லை' என்றும் இச் சட்டம் சொல்கிறது.
இந்த சட்டமானது, கடந்த மூன்றாண்டு களாக மத்திய பாஜக அரசால் பரிந்துரைக்கப்பட்டு வந்த சட்டமாகும். கார்ப்பரேட் பெரு நிறுவ னங்களுக்கு நிலங்களைத் தாரைவார்க்க, தடையின்றி அன்னிய நிறுவன முதலீடுகளை பெற, இத்தகைய சட்டம் வழிவகை செய்கிறது. தமிழ்நாட்டில் பெரு நிறுவனங்கள், 'சுற்றுச் சூழலை அழிக்கக் கூடிய எந்தவொரு தொழிற் சாலையையும் தங்குதடையற்ற முறையில் கொண்டு வரலாம்' என்ற முழுமையான ஒப்புதலை இந்தச் சட்டம் வழங்குகிறது.
பெரிய திட்டங்களுக்காக அரசு நிலங் களையும் ஒருங்கிணைக்கும் இந்தச் சட்டமானது, நீர்நிலைகள் மீதான அரசின் கட்டுப்பாட்டை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாற்ற வழி வகுக்கும். நீர்நிலைகள் இருந்தாலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, சிறப்புத் திட்டங்கள் என்ற போர்வையில், பெரிய அளவிலான நிலத்தை வழங்க இச்சட்டத்தில் வழிவகை செய்யப் பட்டுள்ளது. நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான தற்போதைய சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலும் சட்டத்தின் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்தச் சட்டத்தின்படி, 100 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் எந்தவொரு திட்ட நிறுவனமும், அந்த நிலப்பரப்பில் அமைந்துள்ள நீர்நிலை களைப் பாதுகாப்பதற்கான நீரியல் திட்டம் மற்றும் மேலாண்மைத் திட்டம் போன்ற விவரங்களுடன் அரசுக்கு விண்ணப் பத்தை சமர்ப்பிக்கலாம். அரசு ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்கும். இதனால், பொது நீர் நிலைகளின் நிர்வாகமும் தனியார் நிறுவனங்களின் பிடிக்குள் செல்லும். இறுதியில், நீர்நிலைகள் தனியார்மயமாக்க அனுமதிக்கப் படுகிறது. இந்தவகையில் மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது.
பாதிப்புகள் என்ன?
இந்த சட்டம் அமலானால், நீர்வரத்துகள், நீர்நிலைகள் மீது அமைக்கப்படும் பல்வேறு திட்டங்களால் இயற்கை, சுற்றுச்சூழல், உயிரினங்கள் மற்றும் சமூகத்திற்கு பெரும்பாதிப்பு ஏற்படும். நீர்நிலைகள் நிரந்தரமாக அழிக்கப் படுவதோடு, அப்பகுதி சார்ந்த விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடிப்பு போன்றவை சீரழியும். தொழிற்சாலைகள், விமான நிலை யங்கள், துறைமுகங்கள், வணிக வளாகங்கள் என எந்தவொரு திட்டத்தையும் கட்டுவதற்கு நீர்நிலை நிலங்களை வாங்கும் பெருமுதலாளிகள் அல்லது பெரு நிறுவனங்கள் விருப்பம்போல அங்குள்ள நீர்நிலைகளை சேதப்படுத்திவிட்டு அந்த நிலங்களையும் கூட கட்டுமானங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும்.
சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நடப்புச் சட்டங்கள் எல்லாம் பொருத்தப்பாட்டை இழக்கும். உள்ளாட்சி அமைப்புகளின் அதிகார மும் பறிக்கப்படும். கிராமப்புற பகுதியில், எந்தவொரு திட்டம் / ஆலைகள் உள்ளாட்சி மன்ற அனுமதி இல்லாமலேயே நுழையும்;ஆதிக்கம் செலுத்தும்.
தமிழ்நாடு அரசாங்கம் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்!
தொழில் வளர்ச்சி என்ற பெயரால், கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் நலன் களுக்காக, ஆறுகள், ஏரிகள், குளங்கள், ஓடைகள், இயற்கை, சுற்றுச்சூழல் என எல்லாவற்றையும் இழக்கலாம் என்ற மனப்பான்மையில் திமுக அரசாங்கம் இருப்பதாக தெரிகிறது.
மத்திய அரசின் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் உள்ள 1,06,957 நீர்நிலைகளில் 8,366 நீர்நிலைகள் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஆய்வின்படி, ஏற்கனவே பட்டியலிடப்பட்ட சுமார் 65,000 நீர்நிலைகள் இருந்த தமிழ்நாட்டில் தற்போது சுமார் 30,000 நீர்நிலைகள் தான் இருக்கின்றன; அவைகளும் ஆவணங்களில் உள்ள பரப்பளவுகளை இழந்துள்ளன. தமிழகத்தின் நீர்நிலைகள் நிலைமை இப்படி இருக்கும்போது, இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் நிலைமை படுமோசமாகும்.
இப்படி காணாமல் போன நீர்நிலைகள் தொழிற்சாலைகள், கல்லூரிகள், மீது, அடுக்குமாடி குடியிருப்புகள், பெரும் வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற வற்றைக் கட்டியதால் நீர்நிலைகள், நீராதாரங்கள் மொத்தமாக ஒழிக்கப்பட்டு விட்டன. நீரோடைகள், வடிகால் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதால், காலநிலை மாற்றத்தால் உருவாகும் பெருமழை மற்றும் பெரு வெள்ளங்களால் மாநகரங்கள் மிதக்கும் நிலைக்குச் சென்று விட்டன. இதனால், மாநகர மக்களின் வாழ்க்கை தொடர் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
வெளிநாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் பெருநிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் ஆதரவு உள்கட்டுமான வசதிகளுக்காக, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை அழித்து, விவசாயிகள் மக்கள் வாழ்வாதரங்கள் சூறையாடப்படுவதை நாம் அனுமதிக்க கூடாது.
இது தமிழ்நாட்டின் நீராதாரம், விவசாயம் மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினையாகும். கார்ப்பரேட் திட்டங்களுக்காக, சுற்றுச்சூழல் விதிகளை தளர்த்தும், தமிழ்நாட்டின் நீர் நிலைகளைத் தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசாங்கத்தின், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களுக்கான) சட்டம் 2023 உடனடி யாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)