2024, ஏப்ரல் 22 ல், இகக (மாலெ) துவக்கப்பட்டதன் 55 ஆண்டை, மிகவும் இக்கட்டான மக்களவை தேர்தல்களுக்கு மத்தியில் கடைப்பிடிக்கிறோம். இந்த தருணத்தில், நமது அனைத்து உறுப்பினர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் இந்தியாவின் போராடும் மக்களுக்கும் நமது இதமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். அதிகரித்து வரும் பாசிச தாக்குதலிலிருந்து நமது ஜனநாயக குடியரசின் அரசமைப்புச் சட்ட அடித்தளத்தையும் நாடாளுமன்ற, கூட்டாட்சி அமைப்பு முறையையும் பாதுகாக்க, வயதுவந்த ஒவ்வொரு இந்தியரும் தமது அடிப்படை உரிமையான வாக்குரிமையை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.
ஏப்ரல் 22, உலகின் முதல் சோசலிச புரட்சியின், சோசலிச அரசின் ஒப்புயர்வற்ற சிற்பியான தோழர் லெனினது பிறந்த நாளுமாகும். தோழர் லெனினுக்கு நமது புரட்சிகர புகழஞ்சலியை செலுத்துகிறோம்; மானுடம் உண்மையிலேயே சுதந்திரமாக இருக்கும் லட்சியத்துக்கு, சுரண்டலும் போரும் இல்லாத உலகத்தை கட்டியெழுப்பும் மாபெரும் கம்யூனிச லட்சியத்துக்கு நம்மை மறுஅர்ப்பணிப்பு செய்துகொள்கிறோம்.
இகக(மாலெ) தோன்றியது முதலே, இந்தியாவை உண்மையான மக்கள் ஜனநாயகமாக மாற்றியமைக்கவும் சமத்துவ சமூகமாக உருவாக்கிடவும் இடைவிடாது போராடி வருகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதென்பது இகக(மாலெ) வின் இந்த புரட்சிகர தேடலுக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். அம்பேத்கர் சொற்களின்படி அது மாபெரும் பேரழிவாக இருக்கும். எனவே, 2024 தேர்தல்களை, அதிகாரத்திலுள்ள பாசிச சக்திகளுக்கு தீர்மானகரமான அடிகொடுத்து சர்வாதிகார மோடி ஆட்சியை சிம்மாசனத்திலிருந்து தூக்கியெறிவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் இயக்கமாக நடத்திட வேண்டும்.
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள நாம், பிகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நான்கு தொகுதிகளில் போட்டியிடுகிறோம். இவற்றைத் தாண்டி, மேற்குவங்கம், ஒடிஷா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதியென சுதந்திரமாகவும் போட்டியிடுகிறோம். ஆந்திரா, ஒடிஷா மாநிலங்களில் சில சட்டப்பேரவை தொகுதிகளிலும் தோழர் மனோஜ் மன்சில் அநீதியாக தண்டிக்கப்பட்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் பிகாரில் ஏற்பட்டுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் போட்டியிடுகிறோம். நமது அனைத்து சக்தியையும் திரட்டி நமது தேர்தல் பரப்புரை இயக்கத்தை நடத்திவரும் அதே வேளை, நாடு முழுவதும் பாஜக\தேஜமு வின் தோல்விக்கும் “இந்தியா” கூட்டணியின் வெற்றிக்கும் செயலூக்கமாக பணியாற்றி வருகிறோம்.
கட்சி துவக்கப்பட்டதன் இந்த நாளில், நமது கட்சியை நிறுவிய பொதுச்செயலாளரான தோழர் சாருமஜும்தார், சாருமஜும்தாரை அடுத்து பொதுச்செயலாளர்களானவர்களும் 1970களின் பின்னடைவை அடுத்து, கட்சியை மீண்டும் கட்டியெழுப்பி தலைமைதாங்கி வழிநடத்திய தோழர்களுமான ஜாகர், வினோத்மிஸ்ரா ஆகியோருக்கு நமது மரியாதைக்குரிய புரட்சிகர அஞ்சலியை உரித்தாக்குகிறோம். தோழர்கள் நாகபூஷன்பட்நாயக், ராம்நரேஷ்ராம், அனில்பரூவா, மகேந்திரசிங் மேலும் நமது கட்சிக்காகவும் மக்களுக்காகவும் புரட்சிக்காகவும் தமது அனைத்தையும் தியாகம் செய்த நம் அன்பிற்குரிய தியாகிகள், தலைவர்களது நினைவுகளுக்கு வணக்கம் செலுத்துகிறோம். இந்தியாவின் பல பகுதிகளிலும் சிறைவைக்கப்பட்டுள்ள நமது தோழர்களுக்கு செவ்வணக்கம் செலுத்துகிறோம். அந்தத் தோழர்களையும், மனசாட்சிப்படி செயல்பட்ட காரணத்திற்காக சிறைப்பட்டவர்களையும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் நிபந்தனை ஏதுமின்றி விடுவிக்க வேண்டும் என கோருகிறோம்.
புரட்சி ஓங்குக!
இகக (மாலெ) நீடூழி வாழ்க!
போராடுவோம், வெற்றி பெறுவோம்!
மத்தியக் கமிட்டி,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)