இம்முறையும் இந்திய குடியரசுத் தலைவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவிற்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப் படவில்லை. அதேபோல் வரும் ஜனவரி 22 அன்று நடைபெறவிருக்கும் அயோத்தி ராமர் கோயில் திறப்புவிழாவிற்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முக்கியஸ்தர் பட்டியலில் இல்லை. இந்தியாவில் உள்ள மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டதுபோல் அவருக்கும் வழங்கப்பட்டிருக்கலாம். புராண இதிகாசங்கள்படி இராமாயணத்தில் ராமராகவும் மகாபாரதத்தில் கிருஷ்ணனாகவும் அவதாரம் எடுத்தார் விஷ்ணு. அந்த மகாபாரதத்தில் முக்கியமான கதாபாத்திரம் திரௌபதி. அப்பெயரைத் தாங்கியவருக்கு, இந்தியாவின் முதல் குடிமகளுக்கு அவர் கணவரை இழந்தவர் என்பதாலும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் முக்கியத்துவம் அளிக்கப்பட வில்லை. சிலை பிரதிஷ்டை யின் போது கோயில் கருவறைக்குள் பிரதமர் மோடி, உபி ஆளுநர், முதல்வர் யோகி, ராம ஜென்ம பூமி அறக்கட்டளைத் தலைவர் நிருத்ய கோபால் தாஸ், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், அறக்கட்டளையின் உறுப்பினர் அனில் மிஸ்ராவும் அவரது மனைவியும் அனுமதிக்கப் படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் பெயர் விருந்தினர்கள் பட்டியலில் கூட இல்லை. ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்வார் என்று இருந்ததற்கு, மனைவியுடன் வாழாதவர், பார்ப்பனர் அல்லாதவர் பிரதிஷ்டை செய்யக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியவுடன் இப்போது மோடி விருந்தினராகக் கலந்து கொள்வார் என்றும் அனில் மிஸ்ரா தம்பதியர் சடங்குகள் செய்வார் என்றும் அறிவித்துள்ளார்கள். மாட்டுச் சாணி மற்றும் வாசனைத் திரவியங்கள் கொண்டு 3610 கிலோ எடையுள்ள 3 அடி அகலமும் 108 அடி உயரமும் உள்ள 50 கி.மீ. சுற்றளவிற்கு மணம் பரப்பும் வாசனை ஊதுபத்தியை குஜராத்திலிருந்து கொண்டுவந்து கோயில் வளாகத்தில் கொளுத்தி வைத்துள்ளார்கள். இது ஒன்றரை மாதத்திற்கு எரிந்து கொண்டிருக்குமாம். குழந்தை ராமருக்கான ஆடைகள் புனாவில் இருந்து பிரத்யேகமாகக் கொண்டு வரப்பட்டுள்ளதாம். இதற்கெல்லாம் எத்தனை கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள் என்று தெரியவில்லை. திறப்பு விழாவில் பங்கேற்போருக்கு ராமராஜ்ய மண்ணை நினைவுப் பரிசாகக் கொடுக்கப் போகிறார்களாம். ஒன்றிய அரசின் தூர்தர்ஷன் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்கிறது. கொரோனா காலத்தில் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழந்து, வருமானமிழந்து வீடு திரும்ப வழியில்லாமல் நூற்றுக்கணக்கான கி.மீ. நடந்தே சென்றபோதும் வழியில் செத்துமடிந்தபோதும், இலவச ரயில் பயணத்திற்கு அனுமதி மறுத்து, ஈவிரக்கமில்லாமல் கட்டணம் வசூலித்த மோடி அரசு இப்போது ராமர் கோயில் செல்ல இலவச ரயில் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறதாம். அடுத்தவேளைக் கஞ்சிக்கு வழியில்லாமல் பட்டினியோடு கோடிக் கணக்கானோரும் அன்றாடங் காய்ச்சிகளாக பல கோடி பேரும் வாழ்ந்து கொண்டிருக்க, பல்லாயிரம் கோடி ரூபாயை தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக வீணாகக் கொளுத்திக் கொண்டிருக்கின்றனர் சங்கிக் கூட்டத்தினர். ஆனால், கடந்த 9 9 ஆண்டுகால தன்னுடைய ஆட்சியில் சுமார் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என்றும் ஏழைகளின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதே ஒரு நல்ல அரசின் கடமையாக இருக்க வேண்டும் என்றும் அவரின் திட்டங்கள் மூலம் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை முறை மேம்பட்டுள்ளது என்று கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், பெருமிதம் பேசுகிறார் ஆந்திராவில் பிரதமர் மோடி. அயோத்தியில் ராம ாமர் கோயில் கட்டப்பட்டதன் காரணமாக அங்கு வளர்ச்சித் திட்டங்கள்அமலாகி வருகின்றனவாம். மும்பையைச் சேர்ந்த ஒரு பிரபல நிறுவனத்தின் மூலம் 10,000 சதுர அடிகள் கொண்ட பங்களா குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. ஒரு பங்களா சுமார் ரூ.15 கோடி என்றும் இதில் ஒன்றை அமிதாப்பச்சன் வாங்கப் போகிறாராம். அருகில் ஏழு நட்சத்திர அந்தஸ்தில் விடுதி கட்டப்பட உள்ளது என செய்திகள் சொல்கின்றன. இதுதான் ஏழை, நடுத்தர மக்களுக்கான வளர்ச்சித் திட்டமா? ராமர் கோயிலுக்கு நாடு முழுவதும் வீடுவீடாகச் சென்று அழைப்பிதழும் குங்குமமும் கொடுப்பது மட்டுமின்றி, விளக்கேற்ற வேண்டும் என்று மிரட்டி வருகின்றன சங்கிக் கூட்டம். அதுவும் சிறுபான்மை மக்களை மிரட்டி கட்டாயப்படுத்து கின்றனர். இதுதான் இவர்கள் வளர்க்கும் தெய்வ பக்தி ஆன்மீகம். வேலை, வருமானம், வாழ்க்கை என்பதைப் பற்றி சிந்திக்க விடாமல், மாட்டுச் சாணம், பசுமூத்திரம், ராமர் மண் என்று மக்களை மூடர்களாகவே வைக்க நினைக்கிறது கார்ப்பரேட் ஆதரவு இந்திய வகை சனாதன காவிப் பாசிசம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)