நாற்பதாண்டு கால போராட்டங்களுக்குப் பின்னர் வாச்சாத்தி வன்கொடுமையாளர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்திருக்கிறது. காவல்துறை, வனத்துறை, வருவாய்த் துறையைச் சேர்ந்த குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு கூட செல்லலாம். உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அவர்கள் வாச்சாத்தியில் குற்றம் நடந்தபோது இருந்த காவல்துறைக் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சித்தலைவர், வனத்துறை அதிகாரி மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறியுள்ளார்கள். அதேபோல், இதற்கு முன்னர் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை உயர் அதிகாரிகளும் குற்ற மிழைத்துள்ளார்கள் என்று கூறியிருந்தது நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம். ஆனால், உயர் அதிகாரிகள் யார் மீதும் எவ்வித நடவடிக்கை யையும் தமிழ்நாடு அரசு எடுக்கவில்லை. இப்போது வாச்சாத்தி வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பே வந்துள்ளது. இரண்டு சம்பவங்களும் அதிமுக ஆட்சியில் இருந்தபோது அரங்கேற்றப்பட்டவைகள். வாச்சாதி சம்பவம் ஜெயலலிதா காலத்தில். ஸ்டெர்லைட் சம்பவம் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில். அதுபோல் கூடங்குளத்தில் நடந்த காவல்துறை அராஜகமும் ஜெ. ஆட்சியில்தான். அப்படியிருந்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது திமுக அரசு. கூடங்குளம் மக்கள் மீதான வழக்குகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆட்சியாளர்கள் மாறினாலும் அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகள் எவ்வித அச்சமும் இன்றி தங்கள் அடக்குமுறை, அராஜகச் செயல்களைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு கடந்த சில நாட்களாக உழைக்கும் மக்களின் போராட்டங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆசிரியர்கள், ஊழியர்கள், அரசு செவிலியர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், விசைத் தறித் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள் என தமிழ்நாடு எங்கும் போராட்டக்களங்களைக் காண்கிறோம். ஆனால், அவர்களுடைய பிரச்சினைகளை, கோரிக்கைகளைத் தீர்ப்பது என்பதற்கு மாறாக, காவல் துறையின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. சென்னையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள் மீது காவல்துறை அடக்குமுறை. நாகர்கோயில் அருந்ததியர் மக்கள் மீது சாதி ஆதிக்க வெறியுடன் தடியடித் தாக்குதல். பொய் வழக்கு. கோவை, மதுரை, தென்காசி, நெல்லை போன்ற இடங்களில் தூய்மைப்பணித் தொழிலாளர்கள் பணிப்பாதுகாப்பிற்காக, தனியார்மயத்திற்கு எதிராக வேலை நிறுத்தம், உள்ளிருப்புப் போராட்டம் என நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்று வதற்குப் பதிலாக அவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால், உங்கள் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப்படும், நாங்கள் சொன்னதைச் செய்வோம் என்றதை நம்பித்தான், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இப்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரித்தான் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அடிப்படை கோரிக்கைகளுக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அரசு, காவல்துறை அராஜகச் செயல்களைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டுவதற்குக் கூட தடை விதிக்கப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில்தான் காவல்துறையின் காட்டாட்சி நடக்கின்றது என்பது அனைவரும் அறிந்தது. ஆனால், ஜனநாயகம், சமூகநீதி விழுமியங்களுக்குப் பெயர் பெற்ற தமிழ்நாட்டிலும் காவல்துறையினரின் செயல்பாடானது, காவல்துறை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளதா? எனச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மின் கட்டண உயர்வு, ஆசிரியர், அரசு ஊழியர்களின் சம்பளப் பிரச்சனை, ஒப்பந்த முறை, பழைய பென்சன் திட்டக் கோரிக்கை, தூய்மைப் பணியாளர்களை தனியார் நிறுவனங்கள் கைகளில் ஒப்படைப்பது என கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகள் அனைத்தும் காவிப்பாசிச எதிர்ப்பை கூர் மழுங்கிடச் செய்திடாதா? சமூகநீதி, ஜனநாயகம் காக்க, கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளும் காவல்துறை அடக்குமுறைகளும் கைவிடப்பட வேண்டும். மக்கள் போராட்டங்களில், கிளர்ச்சிகளில் பொறுப்புள்ள அணுகுமுறையைக் கையாள வேண்டும். ஸ்டெர்லைட் ஆணையத்தின் பரிந்துரை, வாச்சாத்தி உயர்நீதிமன்றத் தீர்ப்புப் படி உயர் அதிகாரிகள் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது சட்டவிரோத ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை யாகவும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகவும் இருக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)