எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நடந்து முடிந்துள்ளது. பாஜகவை எதிர்கொள்ள 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் 28 எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு ஏற்பாடுகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு ஒத்துழைப்போடு கூடிய விரைவில் முடிக்கவும் மக்கள் நலன் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தொடர்பாக கூட்டணியின் சார்பாக பொதுக் கூட்டங்களை நடத்தவும் தீர்மானித்துள்ளது. இதற்கு முன்பாகவே இகக(மாலெ)யின் சார்பாக 'இந்தியா' கூட்டணியின் கூட்டம் வரும் செப்.15 அன்று அண்ணா பிறந்த நாளில் நாகர்கோயிலில் நடத்த முடிவு செய்யப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது. நாடெங்கிலும் 'இந்தியா' கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகிவரும் இந்த சூழ்நிலையில், ஆர்எஸ்எஸ்-பாஜக எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காக, மோடி தன்னுடைய அதிபர் கனவை நிறைவேற்றிட வேண்டும் என்பதற்காக இந்திய அரசமைப்புக்கு முரணாக, ஜனநாயகத்திற்கு விரோதமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளில், நீதிநெறிமுறையிலுள்ள முப்பெரும் சட்டங்களை மாற்றிட, பெயரைக்கூட சமஸ்கிருதத்தில் மாற்றி மூன்று புதிய சட்ட மசோதாக்களை தாக்கல் செய்துள்ளது ஒன்றிய அரசு. அவை சட்டமாக்கப்பட்டால், ஆர்எஸ்எஸ்-சங்கிகள் தவிர வேறு எவரும் எதுவும் பேச, எழுத, கருத்துகூற முடியாது. ஏற்கனவே தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்க, உச்சநீதிமன்ற நீதிபதியின் பரிந்துரை தேவையில்லை என ஒரு சட்ட மசோதாவைத் தாக்கல் செய்தது. இப்போது, 'ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. மரபுகளை யெல்லாம் மீறி இந்தியாவின் முதல் குடிமகனாக பதவி வகித்த ஒரு குடியரசுத் தலைவரை, ஒரு குழுவிற்குத் தலைவராக மோடி அரசு நியமித்துள்ளது. திரு.ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக இருந்தபோது, அவர் 'தலித்' என்ற காரணத்திற்காக, ஒரு இந்து கோவிலுக்குள்ளேயே அவரை விட மறுத்து அவர் பாதம் பட்ட இடத்தை கழுவி விட்டார்கள். இப்போது நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தவரை ஒரு குழுவிற்குத் தலைவராக்கி அவமதிக்கிறார்கள். வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை 5 நாட்களுக்கு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்தப் போகிறார்கள். அதில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படலாம். பெரும்பாலான மாநிலங்களில் பாஜக கூட்டணி அல்லாத கட்சிகள்தான் ஆட்சியில் இருக்கின்றன. ஆதலால், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கொண்டுவந்துவிட்டால், வாக்கு எந்திரம், மோசடிகள் மூலம் மத்தியிலும் மாநிலங்களிலும் தானே ஆட்சியில் அமர்ந்து விடலாம் என்று திட்டம் போடுகிறது பாஜக. தமிழ்நாட்டில் பாஜகவின் அடிமை அதிமுகவும் இதற்கு ஆதரவு அளிக்கிறது. நாட்டின் வளங்களையும் பொதுத்துறை நிறுவனங் களையும் அதானி, அம்பானிக்குத் தாரைவார்த்துவிட்ட பாஜகவின் ஊழல் கதைகள் எல்லாம் ஹிண்டன்பர்க் மற்றும் மத்திய தணிக்கை கணக்காளர் வாயிலாக அம்பலப்பட்டுப் போய் நிற்கும்போது, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மூலம் நாட்டிற்குச் செலவைக் குறைக்கப் போகிறோம் என்கிறார்கள். பாசிச பாஜகவின் பதட்டம், அதை புதுப் புது சதி வேலைகளில் இறங்கச் செய்கிறது. பாஜகவின் சதிகளையெல்லாம் 'இந்தியா' கூட்டணி மக்கள் ஆதரவால் முறியடிக்கும். அதன் முதல் படிதான் செப்டம்பர் 15 அன்று குமரியில் இகக(மாலெ) தலைமையில் நடக்கவிருக்கும் இந்தியா கூட்டணியின் கருத்தரங்கம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)