பெருமாள்முருகன்-அர்த்தநாரி, வைரமுத்து-ஆழ்வார், கருப்பர் கூட்டம் - கந்தசஷ்டிகவசம் வரிசையில் இப்போது உதயநிதி ஸ்டாலின்-சனாதனம். ஆர்எஸ்எஸ்-பாஜக சங்கிகளுக்கு அரசியல் செய்ய எப்போதும் தேவை ஏதாவது ஒரு சர்ச்சை. இருப்பதை எடுத்துச் சொன்னால் எகிறிக் குதிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். பெருமாள்முருகன், வைரமுத்து, கருப்பர் கூட்டம் எல்லாரும் இருப்பதை எடுத்துக் கூறினார்கள். உதயநிதி ஸ்டாலின் இருப்பதை எடுத்துச் சொன்னதோடு, இருக்கும் அந்த இழிவுகள் நிரந்தரமாக ஒழிக்கப்பட வேண்டும் என்றார். அதுவும் சிவப்பு, கருப்பு, நீலம் புடைசூழ. தமிழ்நாட்டில் எதையாவது கிளப்பி இந்து உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, பிடித்துப் போட்டிருக்கும் அடிமைகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு காலூன்றத் துடிக்கின்றது காவிக் கூட்டம். சனாதனச் சர்ச்சையானது தற்போது தமிழ்நாடு தாண்டியும் கொஞ்சம் கூடுதலாக ஒலிப்பதற்குக் காரணம் இது தேர்தல் நேரம். உ.பி. போலிச் சாமியார் (அவர் உண்மையான சாமியார் அல்ல என்று அண்ணாமலையே ஒப்புக் கொண்டுள்ளார்), உதயநிதியின் தலையைச் சீவ கத்தினார் என்றால், பிரதமர் மோடி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா, நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழக ஆளுநர் ரவி (இவர் எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறார்), பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களும் சனாதனத்தை நிலை நிறுத்தப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி, 'இந்தியா' கூட்டணியில் உள்ளவர்கள் சனாதன தர்மத்தை அழிக்கப்பார்க்கிறார்கள் என்றும் நாட்டை ஆயிரம் ஆண்டு அடிமைத் தனத்திற்கு இட்டுச் செல்கிறார்கள் என்றும் பேசுகிறார். சனாதனம்தான் இந்து தர்மம், சனாதனத்தை எதிர்ப்பவர்கள் வன்முறையாளர்கள், அது வாக்கு மூலமான வன்முறையாக இருந்தாலும் சரி, செயல் மூலமாக இருந்தாலும் சரி நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று மறைமுகமாக சங்கிகளுக்கு உசுப்பேற்றுகிறார். ராஜஸ்தானில் டெய்லர் கொல்லப்பட்டாரே, இந்துக்கள் நாங்கள் பார்த்துக் கொண்டு அமைதியாகத்தானே இருந்தோம், அதான் சனாதன தர்மம் என்கிறார். டெய்லரைக் கொன்றவர்கள் சங்கிகள்தான் என்பது வெட்டவெளிச்சமானவுடன் அதை வைத்து கலவரம் நடத்த நினைத்த சங்கிகள் சத்தம் காட்டவில்லை என்பதுதானே உண்மை. தமிழிசை அவர்கள் தன் முன்னோர் வீட்டுப் பெண்கள் மார்பை மூட முடியாமல் முலை வரி கட்டியதை, அதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த தோள் சீலைப் போராட்டத்தை, வசதியாக மறைத்துவிட்டு, சனாதனம் எக்காலத்திற்குரிய நிலையான அறம் என்று பேசுகிறார். அப்போதிருந்த பார்த்தால் தீட்டு, தொட்டால் பாவம் மீண்டும் வர வேண்டும் என்று தமிழிசை விரும்புகிறாரா? அண்ணாமலை, 'நான் கருவறைக்குள் சென்று பூசாரி வேலையை பார்க்கமுடியாது, நான் பார்க்கும் விவசாயி வேலையை அவர் பார்க்க முடியாது. இதுதான் இந்து தர்மம், சனாதன தர்மம்' என்கிறார். அந்த நிலையான சனாதனம் இன்றும் தொடர்ந்திருந்தால், அண்ணாமலை ஐபிஎஸ் ஆகியிருக்கவும் முடியாது, அவர் அறிஞர் அண்ணாவைப் பற்றி தவறான கருத்து சொன்னதைக் கண்டித்த அதிமுககாரர்களைப் பார்த்து 'இது பத்து ஆண்டுகள் துப்பாக்கி புடிச்ச கை' என்று சினிமா போல் மிரட்டிக் கொண்டிருக்கவும் முடியாது. ஆங்கிலேயர் வந்தாளோ நாமெல்லாம் பிழைத்தோம்' என்று, ஆங்கிலேயர்கள்தான் 'இந்து' என்கிற பெயரையே கொடுத்தார்கள் என்று காஞ்சி பெரிய சங்கரச்சாரி சந்திரசேகரேந்திரர் குறிப்பிட்டார். சனாதனம் என்றால், பார்ப்பனீய அடிமை முறை, சாதிய ஒடுக்குமுறை, பெண் அடிமைத்தனம், குலத் தொழில் செய்தல். இதை எதிர்ப்பவர்களைத் தான் ஆயிரம் ஆண்டு அடிமை முறைக்கு இட்டுச் செல்கிறார்கள் என்று மோடி தலைகீழாகப் பேசுகிறார். விஸ்கர்மா யோஜனா திட்டத்தின் மூலம் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய குலத் தொழில் முறையை, சாதிய அடுக்குமுறையை நிலை நிறுத்தப்பார்க்கும் மோடி. திருநெல்வேலி திசையன்விளையில் அருந்ததிய சமூக முத்தையா, நாடார் சமூகப் பெண்ணை காதலித்ததால் கொலை செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள். அக் கொலையில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்களோ பட்டியல் சமூகத்தினர். இதற்குப் பின்னால் காக்கிக்குள் இருக்கும் காவி இருக்கிறது. இந்தக் காவிக் கூட்டத்தையும் சனாதனத்தையும் ஒழிப்பதில் உறுதியுடன் ஒன்றுபட்டுச் செயல்படுவதுதான் இன்றைய காலத்தின் கட்டாயம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)